பொதுவாகப் பூமியில் விளைகிற தாவரங்கள் எதற்கும் எந்த வணிக நிறுவனமும்
காப்புரிமை பெற முடியாது. ஆனால், இதே தாவரத்தில் சில மாற்றங்களை உருவாக்கி
புதிய விதை ரகத்தைத் தயார் செய்துவிட்டால், அதற்கான காப்புரிமையைப்
பெற்றுவிடலாம்.
இப்படிக் காப்புரிமை பெற்ற தாவரங்களை 20 ஆண்டுகளுக்கு வேறு யாருமே
உற்பத்தி செய்ய முடியாது. அதன் மூலம் கிடைக்கும் அத்தனை லாபமும் ஒரே ஒரு
நபருக்கு மட்டுமே போய்ச் சேரும். அதன் பிறகு இந்த விதைகளை யாராவது
பயன்படுத்த வேண்டும் என்றால், அதற்குப் பெரும் பணம் தர வேண்டும். ஆக,
விவசாயிகளின் மூலவிதைகளைத் தாங்கள் கைப்பற்றி விற்பனைப் பொருளாக
மாற்றுவதற்கு உருவாக்கப்பட்டதே மரபணு மாற்றத் தொழில்நுட்பம்.
வறுமையைப் போக்கவும் விளைச்சலை அதிகப்படுத்தவும் உதவும்
தொழில்நுட்பம் என முன்வைக்கப்பட்டபோதும், இதன் பின்னே ஒளிந்திருப்பது
முழுமையான வணிக முயற்சி. இந்த முயற்சியில் முன்னணியில் இருப்பது அமெரிக்கா.
இன்று அமெரிக்காவில் விளையும் மக்காளச்சோளத்தில் 90 விழுக்காடு மரபணு
மாற்றம் செய்தவை.
மரபணு மாற்றம் நல்லதுதானே, உயர்தொழில்நுட்பத்தை ஏன் தடுக்க வேண்டும்
என்ற கேள்வி நமக்குள் எழுக்கூடும். தொழில்நுட்பம் நல்லதுதான். ஆனால், அது
யாருக்குப் பயன்படுகிறது, எப்படிப் பயன்படுகிறது, அதன் எதிர்விளைவுகள்
என்னவென்று நாம் யோசிக்க வேண்டும் இல்லையா?
பொதுவாகத் தக்காளிகள் பழமாக மாறும்போது ஆங்காங்கே பச்சை நிறம் கொண்டு
சில இடங்களில் காயாக இருக்கும். இதனை மாற்றி முழுப் பழமும் சிவப்பாக
உருமாறினால் விற்பனை கூடும் என நினைத்தார்கள். இதற்காக ‘பொசிஷனல் குளோனிங்’
என்ற தொழில்நுட்பத்தின் மூலம் மரபணு மாற்றம் செய்யப்பட்டது. இப்படி
மாற்றம் செய்யப்பட்ட தக்காளிகள் பார்க்க அழகாக ஒரே சிவப்பு
நிறத்திலிருக்கும். ஆனால் நாட்டுத் தக்காளி போலச் சுவையிருக்காது. சத்தும்
குறைவு.
அத்துடன் மரபணு மாற்றம் காரணமாகத் தக்காளியில் உள்ள சர்க்கரை மற்றும்
ஊட்டச் சத்துகளை உற்பத்தி செய்யும் புரதம் அழிக்கப்படுவதால் அதன் இயல்பு
மாறிவிடும். இந்த வகைச் செயற்கை தக்காளி வகைகள் விளைவிக்கப்படுவதற்கு ஒரே
நோக்கம்தானிருக்கிறது. அது கொள்ளை லாபம். மனித உயிர்களுடன் விளையாடி லாபம்
சம்பாதிக்க நினைக்கும் கொள்ளையர்களே இதன் ஆர்வலர்கள்.
1994-ல் அமெரிக்காவில் வாசனை மிக்கத் தக்காளி ரகம் ஒன்றை உருவாக்கி
விவசாயம் செய்வதாகப் பெரிதாக விளம்பரப்படுத்தினார்கள். ஆனால், அந்தத்
தக்காளி விளையும்போதே பயனற்றுப் போய்விட்டது. தோல்வியை ஒப்புக்கொண்டு அந்த
வாசனை தக்காளி திட்டம் உடனே கைவிடப்பட்டது. பூச்சி மற்றும் பாக்டீரியா
தாக்குதலில் இருந்து செடிகளைக் காப்பாற்றவே மரபணு மாற்றம் செய்கிறோம்,
இதனால் விளைச்சல் அதிகமாகும் என விஞ்ஞானிகள் முழங்கி வருகிறார்கள்.
பிள்ளையார் பிடிக்கப் போய், குரங்காக முடிந்தது போல மரபணு மாற்றம் மோசமான
பின்விளைவுகளை உருவாக்கியதுதான் நம் காலத்தின் நிஜம்.
பூச்சிகளிடமிருந்து பருத்திச் செடிகளைப் பாதுகாக்க நுண்கிருமியின்
மரபணுவை செடியின் விதையில் செலுத்தினார்கள். அப்படி உருவான பருத்திச்
செடியின் இலைகளைத் தின்ற கால்நடைகள் செத்து விழுந்தன. பருத்தி எடுக்கப் போன
பெண்களுக்கு சுவாச ஒவ்வாமையும் இருமலும் உருவானது. சிலருக்குத் தோல்
நோய்கள் உருவாகின. இதுதான் மரபணு மாற்ற பருத்தியின் விளைவு.
இதுபோல மரபணு மாற்றம் செய்த உருளைக் கிழங்கினை பரிசோதனை எலிக்குக்
கொடுத்தார்கள். அதற்கு ஒரு மாத காலத்தில் குடல்நோய் உருவானதுடன்
புற்றுநோய் உருவாவதற்கான அறிகுறிகளும் தோன்ற ஆரம்பித்தன. இதுவும் ஜி.எம்.
உணவின் எதிர்விளைவே. மரபணு மாற்றம் செய்யப்பட்ட ரகங்கள் மூலம் நிலம்
பாதிக்கப்படுவதுடன் உடல் நலமும் பாதிக்கப்படும். ‘அவை பொய் எனச் சொல்லும்
விஞ்ஞானிகள், வணிக நிறுவனங்களின் கைக்கூலிகளாகச் செயல்படுகிறவர்’ என்று
எச்சரிக்கை செய்கிறார் சுற்றுச்சூழல் அறிஞர் வந்தனா சிவா.
புதிதாக மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை நிலத்தில் பயிர்செய்து சோதனை
செய்யக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் 2006-ம் ஆண்டு செப்டம்பர் மாதம்
22-ம் தேதி தடை விதித்தது. ஆனால், இந்தத் தடை உத்தரவுவை மீறி மரபணு மாற்றம்
செய்யப்பட்ட கத்திரி, தக்காளி, வெண்டைக்காய், நெல், நிலக்கடலை ஆகியவற்றைப்
பயிரிட்டுச் சோதனை செய்ய, சில நிறுவனங்களுக்கு அனுமதி
வழங்கப்பட்டிருப்பதாக இப்போது உச்ச நீதிமன்றத்தில் வழக்குத்
தொடரப்பட்டுள்ளது.
இந்தியாவின் எந்தப் பகுதியிலும் எந்தப் பன்னாட்டு நிறுவனமும் இதுபோன்ற
மரபணு மாற்ற பரிசோதனைகளைச் செய்து பார்க்கலாம். அதற்காக ஒரு பண்ணை
அமைத்துக்கொள்ளலாம். அவற்றுக்குக் கண்காணிப்பும் கட்டுப்பாடும் கிடையாது.
இந்திய நிலத்தைப் பன்னாட்டு நிறுவனங்களின் சோதனைக் களமாகத்
திறந்துவிட்டிருப்பது வேதனை அளிக்கக்கூடியது.
அடுத்த தலைமுறை மனிதர்களுக்கு, தக்காளி என்பது ஒரு மாதம் இருந்தாலும்
கெட்டுப் போகாது. ஒரு தக்காளி இரண்டு கிலோ வரை எடையிருக்கும். ஒரு செடியில்
இருந்து 100 கிலோ வரை விளைச்சல் இருக்கும் என்றெல்லாம் பன்னாட்டு விதை
வணிகர்கள் கதைவிடுகிறார்கள். ஒருவேளை இவை உண்மையாகக்கூட மாறலாம். ஆனால்
இதைச் சாப்பிடும் மனிதன் 50 வயதுகூட உயிர் வாழ்வானா என்பது குறித்து எந்த
நிறுவனமும் கவலை கொள்ளவில்லை. அதுதான் யோசிக்க வைக்கிறது.
சமீபத்தில் ஸ்பெயினில் விளைவிக்கப்பட்ட மரபணு மாற்ற வெள்ளரிக்காய்
சாப்பிட்ட 17 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என்று ஒரு நாளிதழ் செய்தியை
வாசித்தேன். அதையொட்டி ஆஸ்திரியா நாடு ஸ்பெயினில் இருந்து இறக்குமதி
செய்யப்படும் தக்காளி, ஆப்பிள், ஆரஞ்சு, பெரிய மஞ்சள் வாழைப் பழம் உள்ளிட்ட
அனைத்து மரபணு மாற்றப்பட்ட காய்கறி பழங்களுக்கும் தடை விதித்துள்ளது.
இதுபோலவே ஜெர்மனியிலும் ஸ்பெயின் நாட்டுக் காய்கறி, பழங்கள் விற்கத் தடை
விதிக்கப்பட்டது.
இந்தியாவில் 2002-ல் மரபணு மாற்றப்பட்ட கடுகும் 2003-ல் பருத்தியும்
அனுமதிக்கப்பட்டன. அரிசி, கோதுமை, மக்காச்சோளம், துவரை, உளுந்து,
கொண்டைக்கடலை, தட்டாம்பயறு, கேழ்வரகு, கம்பு, மிளகு, ஏலக்காய், தேயிலை,
கரும்பு, சோளம், நிலக்கடலை, சோயா, கடுகு, பருத்தி, சணல், மூங்கில்,
ஆமணக்கு, ரப்பர், புகையிலை என 74 விதமான பயிர் வகைகளில் மரபணு ஆய்வுகள்
நிகழ்த்த அனுமதிக்கப்பட்டுள்ளன.
40 நாடுகள் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விளைபொருட்களைத் தடை
செய்துள்ளபோதும், இந்தியா அதைக் கண்டுகொள்ளவே இல்லை. பன்னாட்டு வணிகர்களின்
கமிஷன்களுக்குக் கைமாறாக இந்திய விவசாயத்தைத் தாரைவார்க்க தயாராக
இருக்கிறார்கள். ‘முகலாயர்கள் சிறிய அளவில் நமது வேளாண் முறையை
மாற்றியமைத்தார்கள். ஆங்கிலேயர்கள் அதைப் பெரிய அளவில் மாற்றியமைத்தார்கள்.
பிறகு சுதந்திர இந்தியாவின் அரசாங்கம் – தனியார் நிறுவனக் கூட்டணி இதை
மோசமான நிலைக்குக் கொண்டுபோயிற்று. விவசாயம் குறித்த எண்ணிக்கையற்ற பொய்கள்
நமது பாடப் புத்தகங்களில் உள்ளன. ஊடகங்களும் இந்தப் பொய்களை உற்பத்தி
செய்கின்றன. தடைசெய்யப்பட்ட பூச்சிக் கொல்லிகளைச் சிறந்த தெளிப்பான்களாகப்
பாடப் புத்தகங்கள் சிபாரிசு செய்வது வேடிக்கையானது’ என்கிறார் ஆய்வாளர்
சங்கீதா ஸ்ரீராம். இவர் பசுமைப் புரட்சியின் எதிர்விளைவுகள் குறித்துத்
தொடர்ச்சியாக எழுதி வருபவர்.
தென்கிழக்கு இத்தாலியின் தக்காளித் தோட்டங்களில் ஆப்பிரிக்க மற்றும்
கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து அகதியாக வருபவர்கள் வேலை
செய்கிறார்கள். இவர்களைக் கொத்தடிமைகள் போல நடத்துகின்றன தக்காளித்
தோட்டங்கள். ஒரு நாளைக்கு இவர்களுக்குச் சம்பளம் வெறும் ஐந்து யூரோ
மட்டுமே. ஆனால், காலை ஆறு மணி முதல் இரவு ஏழு மணி வரை வேலைசெய்ய வேண்டும்.
கூடாரங்களில் தங்கி வாழும் அடிமைகள் தப்பிப் போய்விட முடியாதபடி வேட்டை
நாய்கள் ரோந்து சுற்றுகின்றன. கடுமையான தண்டனை, இரண்டு வேளை உணவு, நோய்
ஆகியவை ஒன்றுசேர்ந்து இவர்களைத் தொடர்ந்து ஒடுக்கி வருகின்றன. கானா
தேசத்திலிருந்து இத்தாலிக்கு வரும் அகதிகளின் உழைப்பில் அறுவடை
செய்யப்படும் தக்காளிகள், திரும்பவும் கானாவுக்கே ஏற்றுமதி
செய்யப்படுகின்றன. இத்தாலிய தக்காளிகளின் வரவால் கானாவின் நாட்டுத் தக்காளி
உற்பத்தி மோசமான பாதிப்பை சந்தித்தது. ஆகவே, அங்குள்ள விவசாயிகள் தங்கள்
வாழ்க்கையை நடத்த இத்தாலிக்கு அகதிகளாக வரும் சூழல் ஏற்படுகிறது. தக்காளித்
தோட்டங்கள் வணிகச் சந்தையில் கொள்ளை லாபம் தருகின்றன என்பதால் துப்பாக்கி
ஏந்திய ஆட்களைக் கொண்டு அகதிகள் ஒடுக்கப்படுகிறார்கள் என்கிறார் பிரெஞ்சு
பத்திரிகையாளர் பேப்ரிஜியோ கேதி. இந்த இத்தாலிய தக்காளிகளைக் கொண்டே நாம்
சாப்பிடும் சுவையான பன்னாட்டு உணவக கெட்சப் தயாரிக்கப்படுகிறது. அந்த
உண்மையை நாம் அறிந்துகொள்ளவே இல்லை.
நாம் சாப்பிடும் கத்திரிக்காய், தக்காளிக்குப் பின்னே சர்வதேச சதிவலை
பின்னப்பட்டிருக்கிறது. இதனால் லாபம் அடையப்போகிற வணிகர்கள் தங்களின்
சுயதேவைகளுக்கான வேட்டைக் களமாக இந்தியாவை வளைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
இதை அறியாமல் நம் மக்கள் சமோசாவுக்குக் கெட்சப் நல்லது என ரசித்துச்
சுவைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
1 comment:
supper site govindraj .congrats keep it up
Post a Comment