Jun 22, 2014

உணவு யுத்தம்! - 1

 

'இட்லி சாப்பிடத்தான் லாயக்கு!’
 சாப்பாட்டுக்கு முன் இரண்டு சம்பவங்களை நினைவுபடுத்த விரும்புகிறேன்..!
எனது மகனின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக சென்னையில் உள்ள பன்னாட்டு உணவகம் ஒன்றுக்குப் போயிருந்தேன். விடுமுறை நாள் என்பதால் காத்திருந்து இடம்பிடித்துச் சாப்பிட உட்கார்ந்தோம். மெனு கார்டு கைக்கு வந்தது. புரட்டிப் புரட்டிப் பார்த்தேன்.
எனக்குத் தெரிந்த ஒரு உணவின் பெயர்கூட அதில் இல்லை. ஸ்பெகட்டி, சரமுரா, அல் பஸ்தோ, க்ரோகுயிட், பேகெட் என மாத்திரைப் பெயர்களைப்போல உணவின் பெயர்கள் பயமுறுத்தின. இதில் எந்த உணவைச் சாப்பிடுவது எனத் தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தபோது பிள்ளைகள் அவர்களாக சில உணவுகளைத் தேர்வு செய்தனர்.
அதில் ஒன்று, இத்தாலிய உணவு. மற்றொன்று, சீன உணவு. கூடவே பெயர் உச்சரிக்க முடியாத நான்கு ஐந்து உணவு வகைகள். இதை எல்லாம் எங்கே சாப்பிடப் பழகினார்கள்? யார் இவர்களுக்கு அறிமுகம் செய்தனர்? என்னைப் போலவே அன்றாடம் வீட்டில் இட்லியும் பொங்கலும் சோறும் சாம்பாரும்தானே சாப்பிடுகிறார்கள், அவர்களுக்கு இதையெல்லாம் யார் அறிமுகப்படுத்தியது என்று வியப்போடு அவர்களைப் பார்த்தபடி, 'எப்படித் தேர்வு செய்தீர்கள்?’ என்று கேட்டேன். 'டி.வி. விளம்பரத்தில் காட்டுவார்கள்’ என்றனர். நாம் என்ன சாப்பிட வேண்டும் என்பதை டி.வி. முடிவு செய்கிறது. இதுதான் காலக்கொடுமை.
உணவு வரும்வரை மெனு கார்டு எப்படி அறிமுகமானது என்பதைப் பற்றிப் பிள்ளைகளிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். ''மெனு எனும் உணவுப் பட்டியலை அறிமுகம் செய்து வைத்தவர்கள் சீனர்கள். அந்தக் காலத்தில் சீன வணிகர்கள் பயண வழியில் உணவகங்களுக்கு வரும்போது அவர்கள் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதைப் பொறுத்து தங்களின் விருப்ப உணவைத் தேர்வு செய்வார்கள். அதற்காக நீண்ட உணவுப் பட்டியல் தரப்பட்டது.
மெனு என்ற சொல் பிரெஞ்சுகாரர்களால் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலச்சொல் லத்தீன் மொழியில் உள்ள Minutes. இதன் பொருள், 'சிறிய பட்டியல்’ என்பதாகும். 18-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் உணவுப் பட்டியல் ஃபிரான்ஸில் அறிமுகமானது.
உணவுப் பட்டியல் அறிமுகம் ஆவதற்கு முன்பாக உணவின் பெயர்களை ஒரு கரும்பலகையில் எழுதிப் போட்டிருப்பார்கள். இன்றும்கூட சிறிய உணவகங்களில் கரும் பலகைகளில்தானே உணவுப் பட்டியல் எழுதிப் போட்டிருக்கிறார்கள். அது ஃபிரெஞ்சு நாட்டு மரபு. விரும்பிய சுவைக்கேற்ப பட்டியலில் உள்ள உணவைத் தேர்வு செய்தவன் பெயர்  la carte.
ரெஸ்டாரென்ட் என்பதும் ஃபிரெஞ்சு சொல்லே. ஃபிரெஞ்சு புரட்சியின் பிறகே ஃபிரான்ஸில் நிறைய உணவகங்கள் உருவாக ஆரம்பித்தன. சமையல்காரரை செஃப் என அழைக்கிறோம், இல்லையா? Chefde cuisine  என்ற ஃபிரெஞ்சு சொல்லில் இருந்தே அது உருவாகியது. அதன் பொருள் சமையலறையின் தலைவர் என்பதாகும்.
சூப், பிரதான உணவு, ஐஸ்கிரீம் அல்லது ஜூஸ், இனிப்பு வகைகள் கொண்ட மூன்றடுக்கு உணவு வகைகள் ரோமானியர்கள் அறிமுகம் செய்தவை. அது இன்று உலகெங்கும் பரவி 'திரி கோர்ஸ் மீல்’ எனப்படுகிறது,  மூன்றடுக்கு மட்டும் இல்லை. 21 அடுக்கு உணவு சாப்பிடுகிற பழக்கமும் விருந்தில் இருக்கிறது. ஒருவர் இதைச் சாப்பிட்டு முடிக்க குறைந்தபட்சம் மூன்றரை மணி நேரமாகும்.
பசி தூண்டக் கூடிய சூப்பை, உணவின் தொடக்கமாகக்கொள்வதை வழக்கமாக்கியவர்கள் ரோமானியர்கள். அதிலும் முட்டை ஊற்றிய சூப், பச்சைக் காய்கறிகள், அனைவரும் பகிர்ந்து குடிக்கும் மதுபானம் என அவர்கள் உணவு ஆரம்பிக்கும். இறுதியில் பழங்கள் சாப்பிடுவதோடு முடியும். ஃபிரெஞ்சு மற்றும் ரோமானியர்களின் உணவுப் பழக்கம்தான் இன்று உலகெங்கும் அதிகம் பரவியிருக்கிறது. இப்படியாக நமது சாப்பாட்டுக்குப் பின்னும்கூட அறியப்படாத வரலாறு இருக்கிறது'' என்று நான் சொன்னேன்.
நாங்கள் கேட்ட உணவு வந்தது. அதில் பலவும் வெண்ணை சேர்க்கப்பட்டவை. சோயா சாற்றின் மணம் வேறு. இனிப்பும் புளிப்புமான சுவை. எனக்கு அதில் கையளவுகூடச் சாப்பிட முடியவில்லை.
'தோசை கிடைக்குமா’ எனக் கேட்டேன். 'இட்லி, தோசை போன்ற எந்த உணவும் கிடையாது’ என்றார்கள். 'பன்னாட்டு உணவில் தமிழ்நாட்டு உணவுகளுக்கு இடம் கிடையாதா?’ என்று கேட்டபோது, 'இங்கே யாரும் அதைச் சாப்பிட வருவதில்லை’ என்ற பதில் கிடைத்தது.
பிள்ளைகளிடம் உணவு எப்படி இருக்கிறது என்று கேட்டேன். 'இப்போதுதான் நாங்களும் முதன்முறையாக சாப்பிடுகிறோம். என்னவோ போல இருக்கிறது’ என்றார்கள். அதற்கு அர்த்தம், பிடித்திருக்கவும் இல்லை; பிடிக்காமல் போகவும் இல்லை.
பசி பொறுக்க முடியாமல் என்ன சாப்பிடுவது என்று தெரியாமல் மெனு கார்டை 10 முறை புரட்டிப் பார்த்துவிட்டேன். எதையும் கேட்க எனக்குப் பிடிக்கவில்லை.  இங்கே சாப்பிடுகிறவர்களில் பெரும்பகுதி தமிழ் மக்கள், மத்தியதர வர்க்கத்து மனிதர்கள். இதை எப்படிச் சாப்பிடுகிறார்கள் என்றும் எனக்குப் புரியவில்லை. ஒருவேளை மாறுபட்ட சுவைக்காக வந்து சாப்பிடுகிறார்களோ என்று சமாதானம் செய்துகொண்டேன்.
சென்னைக்கு நான் வந்து 25 ஆண்டுகள் ஆகி விட்டன. பாதி உலகைச் சுற்றிவந்துவிட்டேன். ஆனால், மனதுக்குள் உள்ள கிராமவாசி அப்படியேதான் இருக்கிறான். வீட்டில் அறிமுகமான சுவை, எந்த வயதானாலும் எவ்வளவு ஊர் சுற்றினாலும் மாறிவிடாது தானே என நினைத்தபடியே பசித்த வயிறுடன் பில்லுக்குக் காத்திருந்தேன்.
நான்கு பேர் சாப்பிட்ட இரவு உணவுக்கு 6,500 ரூபாய். அந்த பில்லை உற்றுப் பார்த்தபடி இருந்தேன். கணக்குப் பார்க்காதே என்பதுபோல பிள்ளைகள் திரும்பிப் பார்த்தார்கள். உணவகத்தில் பில்லை சரிபார்ப்பது அநாகரிகமான செயல் என இந்தத் தலைமுறையினர் ஏன் நினைக்கிறார்கள்? உரிய பணத்தைத்தான் தருகிறோமோ எனத் தெரிந்துகொள்வதில் என்ன தவறு இருக்க முடியும்? பில்லை நான் பார்த்தேன். 5,700 ரூபாய் உணவுக்கு பில். அவர்கள் உணவு பரிமாறியதற்கு, உணவகத்துக்கு வந்து சாப்பிட்டதற்கான சேவை வரி 600 ரூபாய். இந்த பில்லுக்கு டிப்ஸ் 200 ரூபாய் வைக்க வேண்டும். 6,500 ரூபாய்க்கு ஒரு வேளை உணவு. அடித்தட்டுக் குடும்பம் ஒன்று ஒரு மாதம் சாப்பிடுவதற்கான தொகை இது. உணவின் பெயரால் நடக்கும் கொள்ளையை ஏன் அனுமதிக்கிறேன் என்று மனசாட்சி கேட்டுக் கொண்டேயிருந்தது.
மகிழ்ச்சியைக் கொண்டாட சாப்பிடுவதைத் தவிர வேறு எதையும் அறிந்திராதவர்கள் நாம். இப்படித்தானே செலவு செய்தாக வேண்டும்?
வீட்டுக்குப் போய் பழைய சோறும் தயிரும் ஊறுகாயும் சாப்பிட வேண்டும் என்று பசி இழுத்துக்கொண்டிருந்தது. வீட்டுக்கு வந்து சோறும் தயிரும் சாப்பிட்டபோது பிள்ளைகள், 'உங்களை எல்லாம் பன்னாட்டு உணவகத்துக்கு அழைத்துப் போனது வீண். நீங்கள் இட்லி சாப்பிடத்தான் லாயக்கு’ என்று கேலிசெய்து சிரித்தார்கள்.
இட்லி சாப்பிடுகிற மனிதன் ஏன் இளக்காரமாகப் பார்க்கப்படுகிறான். இட்லி, சோறு, களி, கம்பங்கூழ், குதிரைவாலிச் சோறு என்று அவரவர் வாழ்விடத்தில் கிடைத்த உணவுகள் ஏன் இன்று பரிகசிக்கப்படும் உணவாக மாறிப்போய்விட்டன?
சோறு என்ற சொல்லை சென்னையில் பெரும்பாலும் பயன்படுத்துவதே இல்லை. ரைஸ் என்றுதான் கேட்கிறார்கள். சாப்பிடுகிற சோறை சொல்வதற்கு கூசுகிற மனிதனை எப்படிப் புரிந்துகொள்வது? சோறு என்பதற்கு அடிசில், கூழ், அழினி, அவிழ், கொன்றி, நிமிரல், புழுங்கல், பொம்மன், மிதவை எனப் பல சொற்கள் தமிழில் உள்ளன.
நீர் கலந்த சோற்றுப் பருக்கையைக் கஞ்சி என்கிறோம். கஞ்சிக்கு காடி, மோழை, சுவாகு என்னும் மூன்று வேறு சொற்களைக் கூறுகிறது பிங்கல நிகண்டு. ஊன் சோறு, கொழுஞ்சோறு, செஞ்சோறு, நெய்ச்சோறு, மெல்லடை, கும்மாயம், ஊன்துவை அடிசில், புளியங்கூழ் என பழந்தமிழ் மக்கள் சாப்பிட்ட உணவுகள் என்னவென்றுகூட இன்றைய தமிழருக்குத் தெரியாது.
இட்லி சாப்பிடுவதால் உள்ள நன்மை இளந்தலைமுறைக்குத் தெரியாது. அது ஆவியில் வேகும் எளிமையான உணவு. அரிசியையும் உளுத்தம் பருப்பையும் ஊற வைத்து அரைத்து, மறுநாள் காலையில் இட்லி, தோசையாகச் சாப்பிடுகிறோம். இதனால் உடலுக்குத் தேவையான தாது உப்புக்களும் அமினோ அமிலங்களும் கிடைக்கின்றன.
திசுக்களைப் புதுப்பிக்கும் லைசின் என்ற அமினோ அமிலம் மூன்று மடங்கும், சிறுநீரக செயல்பாட்டுக்கு உதவும் காமா அமினோபட்ரிக் 10 மடங்கும் அதிகரிக்கின்றன. உலகின் மிகச்சிறந்த காலை உணவில் இட்லி சிறந்த ஒன்றாகப் பட்டியலிடப்பட்டிருக்கிறது.
இட்லி எங்கிருந்து வந்தது? இந்தோனேஷியாவில் இருந்து என்கிறார் உணவு ஆராய்ச்சியாளர் கே.டி.ஆச்சா. பழந்தமிழ் இலக்கியங்களில் இட்லி பற்றிய குறிப்பைக் காணமுடிவது இல்லை. கன்னடத்தில்தான் இட்லி செய்யும் முறை பற்றிய குறிப்பு முதலில் கிடைத்துள்ளது. கன்னடத்தில் 10-ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட லோகபகரா என்ற நூலில் இட்லி பற்றிய செய்தி காணப்படுகிறது. 12-ம் நூற்றாண்டுக்குப் பிறகே தமிழ்நாட்டுக்கு இட்லி அறிமுகமாகியிருக்கக் கூடும் என்பது யூகம். அந்த நாட்களில் மோரில் உளுந்தை ஊறவைத்து அரைத்திருக்கிறார்கள்.
இட்லி சாப்பிடுகிற போட்டி ஒரு காலத்தில் திருவிழாக்களில் மிகவும் பிரபலம். இன்று கடைகளில் உடனடி இட்லி, தோசை மாவு விற்பனைக்குக் கிடைக்கிறது. இதில் சில நிறுவனங்கள் மாவு புளித்துப் போகாமல் இருக்க போரிக் ஆசிட் மற்றும் ஆரூட் மாவு கலக்கிறார்கள். அது உடல்நலத்துக்குக் கெடுதி. காஞ்சிபுரம் இட்லி, ராமசேரி இட்லி... என 30-க்கும் மேற்பட்ட இட்லி விதங்கள் இருக்கின்றன. ஆனாலும், இட்லி என்றால் இளக்காரமாகதான் இருக்கிறது.
நகர வாழ்க்கையில் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது... எல்லா மாற்றங்களுக்கும் உடனடியாகப் பழகிக்கொள்ள வேண்டும் என்பதே. அதில் முக்கியமானது உணவு!
கிராமத்தில் என் 10 வயதில் சாப்பிட்ட ஒரு உணவுகூட இன்று இல்லை. மாநகரில் அதே பெயரில் அதேபோல உணவு கிடைக்கிறது. ஆனால், அது பார்க்க வெண்பொங்கல் போல இருக்கிறது. வாயில் வைத்தால் குமட்டுகிறது. தண்ணீர் மாறிவிட்டது. நிலம் சீர்கெட்டுவிட்டது. செயற்கை உரமிட்ட தானியங்கள், காய்கறிகள், மோசமான எண்ணெய், அவசரமான உணவு தயாரிப்பு என எல்லாமும் தலைகீழாகிவிட்டது. சமைப்பது என்பது வேலையில்லை, அக்கறை. அதை பெண் மட்டும் செய்ய வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. இணைந்து சாப்பிடுவதுபோல இருவருமே சமைக்கலாம் தானே?
உணவுப் பழக்கம் தானாக மாறவில்லை. அதைத் திட்டமிட்டு மாற்றுகிறார்கள். உணவுச் சந்தையைப் பயன்படுத்திக் கொள்ளை அடிப்பதற்காக புதிய உணவு ரகங்களை அதன் நன்மை தீமை பற்றி எவ்விதமான கவலையும் இன்றி விற்றுத் தள்ளுகிறார்கள். காலனி ஆதிக்கம் தொடங்கிவைத்த இந்த மோசடி இன்று விருட்சமாக வளர்ந்து நிற்கிறது.
இன்று உணவு வெறும் சாப்பாட்டு விஷயம் இல்லை. அது ஒரு பெரிய சந்தை, கோடி கோடியாகப் பணம் புரளும் பன்னாட்டு விற்பனைக் களம். நாம் என்ன சாப்பிட வேண்டும் என்பதை அமெரிக்காவில் உட்கார்ந்து தீர்மானிக்கிறான். உணவு குறித்து விதவிதமான பொய்களைப் பரப்புகிறார்கள்.  நகரம், கிராமம் என, பேதமில்லாமல் ஜங்க் ஃபுட் எனப்படும் சக்கை உணவுகள் ஆக்கிரமித்துவிட்டன.
உணவின் பெயரால் ஒவ்வொரு நாளும் நாம் ஏமாற்றப்படுகிறோம்.
- VIkatan

நலம் 360’ - 2


மருத்துவர் கு.சிவராமன், ஓவியம்: ஹாசிப்கான்
தொழில்நுட்பம், நம் விரல் நுனிக்குள் உலகை அடக்கிவிட்டது உண்மைதான். நியூயார்க் நகரத்து வெள்ளைக்காரன், தான் பயணிக்க வேண்டிய விமானத்தின் இருக்கையை உறுதிசெய்ய, சென்னையின் கடற்கரை சாலையின் அடுக்குமாடி கம்பெனியில் இருந்து தெலங்கானா ராமண்ணாவிடம்தான் பேசியாக வேண்டும். 'யோசனைகாத தூரங்கள்’ எல்லாம் எலெக்ட்ரான் துகள்களுக்குள் நெருக்கப்பட்டு மைக்ரோ விநாடிகளில் கடந்துபோக ஆரம்பித்தாயிற்று. அதே சமயம், நம்மில் பலருக்கும் அடிக்கடி எழும் கேள்வி... இந்தத் தொழில்நுட்ப வீச்சில் நாம் எல்லோரும் நெருங்கி இருக்கிறோமா... விலகி இருக்கிறோமா? என்பதுதான்.

இன்று இணையமும், முகநூலும், கைபேசிக் குறுஞ்செய்திகளும் நாம் எழுதிய அடுத்த கணத்தில், எமோட்டிக்கான் புன்னகையுடன் என்னதான் அதனையே பரிமாறினாலும், தொலைவும் காத்திருப்பும் தந்த உயிர்ப்பசையை உலரவைத்துவிட்டது என்பதே உண்மை. 

'நாட்டார் வழக்காற்றியல்’ மூத்த பேராசிரியர் தொ.பரமசிவம் தன்னுடைய 'வழித்தடங்கள்’ என்ற நூலில், ஒரு பொருளின் உற்பத்திக்கும் நுகர்வுக்கும் இடையிலான பண்பாட்டு விலகல் எந்த அளவு நம் சமூகத்தைச் சிதைக்கிறது என, மிக முக்கியமான ஒரு விஷயத்தைக் குறிப்பிடுகிறார். உற்பத்தி செய்யப்படும் பொருள் குறித்த முழுமையான அறிவை மரபுவழித் தொழில்நுட்பம் அறிந்திருக்கும். அது வீட்டுக்கான வாசற்கதவு செய்வதாக இருந்தாலும் சரி, மாதவிடாயின்போது வாந்தியுடன் வரும் வயிற்றுவலிக்கான கைப்பக்குவ மருந்து செய்வதாக இருந்தாலும் சரி, யாருக்காகச் செய்கிறோம், எப்படிச் செய்கிறோம், எதைக்கொண்டு செய்கிறோம், நுகர்வோரின் மனம் அதில் எப்படிக் களிக்கும் என்ற பார்வை, மரபுவழித் தொழில்நுட்பத்தில் இருந்தது.

மூட்டு அறுவை மருத்துவர் 'எலும்புமுறிவை நான் இணைத்துவிட்டேன். நடக்கவைப்பதற்கு பிசியோதெரபிஸ்ட் வருவார்’ என்று மறைவதும், அதற்குள் அவசரமாக, 'சா£ர்... நான் என்ன சாப்பிடலாம்?’ என்றால், 'டயட்டீஷியனிடம் அப்பாயின்மென்ட் வாங்கிட்டீங்கல்ல...’ என்று பதில் வருவதும், தொழில்நுட்பம் புகுத்தும் விலகலுக்கான நிதர்சன அடையாளங்கள்.

பாரதிதாசனின் கவிதையில் வரும் 'கொண்டவர்க்கு ஏது பிடிக்கும், குழந்தைகள் எது விரும்பும், தண்டூன்றி நடக்கும் மாமன் மாமிக்குத் தக்கதென்ன?’ என, உண்பவர் தம்மைக் காணும் அக்கறையைத் தொலைத்தோம். 'என்னென்ன சேர்க்கப்பட்டுள்ளன?, எப்படித் தயாரித்தார்கள்?’ என்ற விவரங்கள் படுநேர்த்தியாக மறைக்கப்பட்ட குப்பை உணவுக்கூட்டம் ஒவ்வொரு வீட்டிலும் ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளன. இந்தத் துரித உணவின் படைப்புகள், பெரும்பாலும் நுகர்வோரிடம் இருந்து வெகுதூரம் திட்டமிடப்பட்டு விலகியே இருக்கிறது. மெக்ஸிகோ சோளம், ஜெர்மானிய இயந்திரத்தில் இத்தாலியன் நறுமணத்துடன், கிழக்காசியக் கூலிகளால் தயாரிக்கப்பட்டு, பின்னர் இங்கிலாந்து கம்பெனியால் இந்தியாவில் வணிகப்படுத்துவதில் எப்படி விலகுகிறோம், எப்படித் தொலைந்துபோகிறோம் என்பது தெளிவாகவே புரியும். படைப்பும் நுகர்வும் அந்நியப்பட்டுப்போனது, ஆதிக்க சக்திகளுக்கான அதிகபட்ச லாபத்துக்கான சுரங்கம் என்பது ஒரு பக்கம். இன்னொரு பக்கம், அது விளிம்பு நிலையில் உள்ள விலாசமற்ற மனிதர்களின் நலவாழ்வை மிதித்து நசுக்கி நாசமாக்குவது வேதனையான விஷயம். படைப்பின் சூட்சுமம் நேர்த்தியாக மறைக்கப்பட்டு, அதீத அலங்காரத்துடன் விற்கப்படும் 'ரெடி டு ஈட்’ உணவுகளில் பெருவாரியானவை, ஜீரண நலத்துக்குச் சிக்கல் வைப்பவை. காலை எழுந்ததும் சிரமம் ஏதுமின்றி மலத்தை வெளியேற்றும் பழக்கத்தைச் சிதைப்பவை.

'காலைக் கடன்’ என்ற வார்த்தையை யார் முதலில் அழகாகச் செதுக்கினார்கள் எனத் தெரியவில்லை. உடனே பைசல் பண்ணாவிட்டால், வட்டியைக் குட்டியாகப்போட்டு வாழ்வைச் சிதைக்கும் கடன் சுமைபோல... மலச்சிக்கல் பல நோய்களைப் பிரசவித்து நல்வாழ்வுச் சிக்கலை உண்டாக்கும். நவீன மருத்துவம், வாரத்துக்குக் குறைந்தபட்சம் மூன்று நாட்களாவது மலம் கழிக்கவில்லை அல்லது இறுகிய வலியுடன்கூடிய மலம் கழித்தலை மட்டும்தான் 'மலச்சிக்கல்’ என வரையறுக்கிறது. ஆனால், பாரம்பரிய மருத்துவம் அனைத்தும், எந்த மெனக்கெடலும் இல்லாத சிக்கலற்ற காலை நேர மலம் கழித்தலை மிக ஆணித்தரமாக அறிவுறுத்துகிறது. 'கட்டளைக் கலித்துறை’ என்ற நூலோ நாள் ஒன்றுக்கு மூன்று முறை மலம் கழிப்பது நல்லது என்றும், சித்த மருத்துவ நோய் அணுகா விதியோ... 'மலத்தை அடக்கினாலோ

'முழங்காலின் கீழ் தன்மையாய் நோயுண்டாகும்
தலைவலி மிக உண்டாகும்
சத்தமானபான வாயு பெலமது குறையும்
வந்து பெருத்திடும் வியாதிதானே’

என்று அறிவுறுத்துகிறது. மூலநோய், மூட்டுவலி, தலைவலி முதல் எந்த ஒரு தசை, நரம்பு சார்ந்த நோய்க்கும், மலச்சிக்கலை நீக்குவதைத்தான் தலையாய முதல் படியாக, சித்த மருத்துவமும் தமிழர் வாழ்வியலும் சத்தமாகச் சொல்கின்றன. சமீபமாக, துரித நவீன வாழ்வியலில் இந்தப் புரிதல் கொஞ்சம் கொஞ்சமாக ஓரங்கட்டப்படுகிறது. வரும்போது அல்லது வசதிப்படும்போது போய்க்கொள்ளலாம் எனும் மனோபாவம் பலமாக வளர்கிறது, 6.30 மணிக்கு எழுந்து 7 மணிக்குள் வண்டியேற வேண்டிய பால்குடி மறந்த பச்சிளம் கேஜி முதல், சில நேரங்களில் பல் துலக்காமல், குளிக்காமல்கூட ஆனால் மறக்காமல் செல்போன் ஹியர் பீஸை மட்டும் காதில் செருகிவிட்டு, பஸ் இருக்கையில் தூங்கிக்கொண்டே பயணிக்கும் கல்லூரி இளசுகள் வரை காலைக் கடன் கடைசிபட்சமாகிவிட்டது. பின்னாளில் இதுவே பழக்கமாகி காலைக் கடன் பலருக்கும் மதியம், மாலை, இரவுக் கடனாக இஷ்டத்துக்கு மாறிவிட்டது. 'அதுதான் போகுதே... அப்புறமென்ன?’ என அலட்சியப்படுத்துவதுதான் பல வியாதிகளுக்கும் ஆரம்பம். அதிகாலையில் மலம் கழிப்போருக் குத்தான், பகல் பொழுதில் பசி, ஜீரணம் சரியாக இருக்கும்; வாயுத்தொல்லை இருக்காது; அறிவு துலங்கும். நேற்று சாப்பிட்ட உணவில் கொஞ்சம் துவர்ப்பு கூடிருச்சோ, அதனால்தான் மலச்சிக்கலோ என வீட்டுப் பெரியவர் யோசித்து, அடுத்த முறை வாழைப்பூவின் அளவைக் குறைத்து சமைக்கும் தொழில்நுட்ப சாத்தியம், 'டூ மினிட்ஸ்’களில் சாத்தியம் இல்லை.

பாரம்பரியப் புரிதலின்படி அன்றாடம் நீக்கப்படாத 'அபான வாயு’ உடல், உள்ளம் இரண்டையும் நிறையவே சங்கடப்படுத்தும். ஸ்கூல்விட்டு வந்ததும், புத்தகக் கட்டோடு நேரே கழிப்பறைக்குப் பறந்தோடும் குழந்தைக்கு மாலை, இரவு, நள்ளிரவில்தான் பசிக்கும். பகலில் கொண்டுசெல்லும் உணவைப் பத்திரமாகத் திருப்பிக் கொண்டுவர வைக்கும். நாள்பட்ட மூட்டுவலி முதல் பக்கவாதம், தோல் நோய்கள் வரை உடலில் சீரற்று இருக்கும் வளி, அழல், ஐயம் எனும் முக்குற்றங்களை முதலில் சீராக்கி மருத்துவம் செய்ய முதல் மருந்தாக பேதி கொடுப்பதுதான் பல ஆயிரம் ஆண்டுப் பழக்கம். ஆரோக்கியமான உடலுக்கு வருடம் இரண்டு முறை பேதி எடுத்துக்கொள்வது நல்லது. உடனே 'பேதி மருந்து ரெண்டு பார்சல்...’ என மளிகைக் கடை சாமான் மாதிரி வாங்கி வராமல், குடும்ப மருத்துவரை அணுகி நாடி பார்த்து, உடல் வன்மை பார்த்து, உடலுக்கு ஏற்ற பேதி மருந்து எடுப்பதுதான் உத்தமம்.

மலச்சிக்கலைத் தவிர்க்க, கொஞ்சம் மலம் இறுகத் தொடங்கினாலோ அல்லது அதற்கான அழைப்பு காலையில் வரவில்லை என்றாலோ மெனக்கெடுவது மிக மிக அவசியம். பெருங்குடலில் தண்ணீர் அதிகம் உறிஞ்சப்படுவது, குடலின் இயல்பான அசைவுவேகம் குறைவு, இரும்பு வலிநிவாரணி மாத்திரைகள், நார்ச்சத்து அற்ற குப்பை உணவுகள்... என மலச்சிக்கலை வரவழைக்கும் அன்றாட விஷயங்கள் நிறைய. அலட்சியமும் சோம்பேறித்தனமும் கூடுதல் காரணங்கள்.

மைக்ராஸ்கோப் டெலஸ்கோப் வைத்து பார்த்தாலும், எந்த இணையத்தில் தேடினாலும் சிக்கவே சிக்காத சூத்திரத்தில் செய்யப்படும் இது மாதிரி உணவுகளுக்குள் சிக்காமல், நிறையவே கரிசனத்துடன் உருவாக்கப்பட்ட உணவையும் வாழ்வியலையும் அப்படியே பின்பற்றுவது நிறையவே நலம் பயக்கும். ஆனால், 'கொஞ்சம் கோணலா இருந்தாலும் குத்தமில்லை’ எனக் கும்மியடித்து விற்கப்படும் பல உணவுகள், சில நேரம் நல்வாழ்வை முற்றும் கோணலாக்கும் வாய்ப்பு உண்டு.

- நலம் பரவும்...


இரவில் படுக்கும்போது இளஞ்சூடான நீர் இரண்டு குவளை அருந்துவதும், காலை எழுந்ததும் பல் துலக்கி, பின்னர் இரண்டு குவளை சாதாரண நீர் அருந்துவதும் நல்லது.

பச்சிளங்குழந்தைகளுக்கு 5-10 திராட்சைகளை (அங்கூர் திராட்சை அதிலும் குறிப்பாக ஆர்கானிக் கிஸ்மிஸ் வாங்குவது நல்லது. திராட்சைக்குத்தான் சகட்டுமேனிக்கு பூச்சிக்கொல்லி தெளிக்கிறார்கள்.) நீரில் 2-3 மணி நேரம் மாலையில் ஊறவைத்து, பின் அதனை நன்கு நீருடன் பிசைந்து கொடுக்கலாம்.

கடுக்காய்ப் பிஞ்சை லேசாக விளக்கெண்ணெயில் வறுத்து, பொடித்த பொடியை ஒரு ஸ்பூன் அளவுக்கு முதியோர் சாப்பிடலாம். மலம் சுகமாகக் கழிவதுடன் கடுக்காயின் எக்கச்சக்கமான ஆன்ட்டிஆக்சிடன்ட்கள் வயோதிக மாற்றங்களைக் குறைக்கவும் செய்யும்.

மேலே சொன்னதுக்கு எல்லாம் பெப்பே காட்டும் நபருக்கு, நிச்சயம் மருத்துவ ஆலோசனை அவசியம். ஊசிப்பட்டாசு / பொட்டுவெடியில் இருந்து ஏகே 47 வரையிலான பல வகையான மலமிளக்கிகள் பாரம்பரிய மருத்துவத்தில் உண்டு.

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் எனும் மூன்று மூலிகைக்காய்களின் உலர்ந்த (விதை நீக்கிய பின்) தூள், ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய மிக முக்கிய மருந்து; உன்னதமான உணவு. மாலையில் இந்தப் பொடியை ஒரு ஸ்பூன் வரை சாப்பிடுவது காலையில் மலத்தை எளிதாகக் கழியவைப்பதுடன் பல ஆரோக்கிய அசைவுகளை உடலில் நிகழ்த்தும். 'திரிபலா’ என்றழைக்கப்படும் இந்த மும்மூர்த்திக் கூட்டணி, வீடுதோறும் இருக்க வேண்டிய நலப்பொக்கிஷம்.



ஐங்காயப் பொடி செய்முறை:

வயிறு சம்பந்தமான உபாதகளைத் தவிர்க்க ஐங்காயப் பொடி நல்ல உபாயம். அதன் செய்முறை இங்கே...

தேவைப்படும் பொருட்கள்: வேப்பம் பூ ஒரு டேபிள்ஸ்பூன், சுண்டைக்காய் வற்றல் ஒரு டேபிள் ஸ்பூன், மணத்தக்காளி வற்றல் ஒரு டேபிள்ஸ்பூன், மிளகு ஒரு டீஸ்பூன், திப்பிலி 6, சீரகம் ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் 4, துவரம்பருப்பு ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயம் சிறிதளவு, தனியா ஒரு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு.

இவை அத்தனையையும் உலர்த்தி, வறுத்து, பருப்புப் பொடி செய்வதுபோல் மிக்ஸியில் பொடித்து வைத்துக்கொள்ளவும். சுடுசோற்றில், குறிப்பாக வரகரிசி சாதத்தில் செக்கில் ஆட்டிய நல்லெண்ணெயுடன் கொஞ்சம் ஊற்றிப் பிசைந்து சாப்பிட்டால், சுவையுடன் ஆரோக்கியம் அலவன்சாகக் கிடைப்பது உறுதி!


நலம் 360’ - 1


மருத்துவர் கு.சிவராமன், ஓவியம்: ஹாசிப்கான்

குந்தா மலைக்கிராமத்தின் சாலையோரத்தில் தேநீர் அருந்திக்கொண்டிருந்தபோது வந்த தொலைபேசி அழைப்பு, என் வாழ்வின் மறக்க முடியாத ஒரு தருணத்தைப் பரிசளித்தது!



''எனக்கு 71 வயசு. 40 வருஷ விகடன் வாசகன். 'ஆறாம்திணை’ முடிஞ்சிருச்சுனு படிச்சப்ப, மனசு பாரமாயிடுச்சு. நெஜமா சொல்றேன் தம்பி... கண்ணீர் வந்திருச்சு! ரெண்டு வருஷத்துல என் வீடே வேற மாதிரி ஆகிருக்கு. எல்லாரும் எண்ணெய் தேய்ச்சுக் குளிக்கிறாங்க. உளுந்தங்களி திரும்ப வந்திருக்கு. மருமக முடக்கறுத்தான் தோசை சுடுறா. வித்துடலாம்னு சொன்ன பூமில 'ஏதாச்சும் செய்யலாமாப்பா?’னு பையன் கேட்கிறான். இப்போ 'ஆறாம்திணை’யைக் கண்டிப்பா நிறுத்தியே ஆகணுமாப்பா?'' மேலும் நெகிழ்வுடனும் ஆதங்கத்துடனும் அந்தத் திருப்பூர் பெரியவர் பேசப் பேச, நான் அழுதேவிட்டேன். எத்தனை கடிதங்கள், தொலைபேசி அழைப்புகள், இணையத்தில், சமூக வலைதளங்களில் நிரம்பி வழிந்த அரவணைப்புகளில் நானும் விகடனும் கொஞ்சம் ஆடித்தான் போய்விட்டோம். இழந்ததையும் தொலைத்ததையும் எடுத்துச் சொல்லி, தினம் நம் மீது இறுகும் இறுக்கமான வணிகப்பிடியை அடையாளம் காட்டி, நலவாழ்வை நோக்கி நகர வழிகாட்டிய வரிகள்தான் 'ஆறாம்திணை’ கட்டுரையின் வாசக்கால்கள். அழுக்குப் புடைவை அணிந்த பொக்கை வாய்ப் பாட்டியைக் கண்டதும் பட்டணத்துப் பேரக் குழந்தை ஓடிச்சென்று கட்டி அணைப்பது போலதான், 'ஆறாம்திணை’யை அதன் வாசகர்கள் உச்சிமோந்து அணைத்துக்கொண்டார்கள்.



அதே நெகிழ்வுடனும் நிறைவுடனும் கொஞ்சம் இளைப்பாறிவிட்டு வரலாம் என சென்னை வெப்பத்தில் இருந்து தப்பி, சொந்த கிராமத்துக்குச் சென்று, பக்கத்துத் தோட்டத்தில் புதுசாக வாங்கியிருந்த டிராக்டரை குதூகலமாக ஓட்டிப்பார்த்தபோதுதான் அந்த அழைப்பு! ''சார்... எங்க இருக்கீங்க?'' என விகடன் ஆசிரியர் தொலைபேசினார். ''சின்ன பிரேக் எடுத்துக்கலாம்னு சொன்னீங்களே... அதான் ஊரு பக்கம் வந்துட்டேன்...'' என நான் பதிலளிக்க, ''இங்க மெயிலும் போனும் கதறது. ''ஆறாம்திணை’யை ஏன் நிறுத்தினீங்க?’னு கேட்கிறாங்க. அடுத்த வெர்ஷனை உடனே ஆரம்பிச்சிடலாம்னு ஐடியா. தலைப்புகூட முடிவு பண்ணிட்டோம். நீங்க ரெடியா?'' என்று கேட்க, 'நலம் 360’ பூத்துவிட்டது.



'நலம் 360’... வெறும் மருத்துவக் கட்டுரை அல்ல. நலவாழ்வு என்பது மருந்து, மாத்திரை, கசாயம், ஈ.சி.ஜி. விஷயம் அல்ல. ஆரோக்கியம் என்பது, சிக்ஸ்பேக் உடம்பில் கட்டமைக்கப்படுவதும் கிடையாது. ஆறு லட்சம் பாலிசி மூலம் அதை வாங்கி வீட்டில் வைக்கவும் முடியாது. அஞ்சறைப்பெட்டியிலும், அடுப்பாங்கரைப் பரணில் கவிழ்த்திவைத்த வெங்கலத் தவலையிலும், ரசம் வைக்கும் ஈயச்சட்டியிலும், பட்டாசல் மாடக்குழியில் பத்திரப்படுத்திய அகல்விளக்கிலும், வாய்க்கால், வரப்பு ஓரங்களில் வளர்ந்து நிற்கும் நீர்முள்ளி, கீழாநெல்லியிலும், கரிசாலை கண்மையிலும், கத்தாழை எண்ணெய்க் குளியலிலும், வசம்புக் கட்டை கை வளவியிலும், மருதாணிப் பற்றிலும், புளியில்லா பொரிச்ச குழம்பிலும், சுண்டுவார் ரசத்திலும், இடுப்புச் சுருக்குப்பை தாம்பூலத்திலும்தான் நம் நலவாழ்வு நங்கூரமிட்டு இருந்தது!



வண்ணத்துப்பூச்சியின் சிறகு அசைவில் எங்கோ சூறாவளி உருவாகும் கேயாஸ் தியரி போல, மீந்துபோன சாம்பாரை ப்ளாஸ்டிக் கவரோடு ரயில் பயணத்தின்போது வீசி எறிவதில்கூட, யாருடைய வாழ்க்கைப் பயணத்திலோ ப்ளாஸ்டிக்கின் சுவடுகளான அடினோ கார்சினோமா தூக்கிச் செருகும் சாத்தியம் மிக அதிகம். பின்னிரவில் முகநூலில் ஏற்றிய தன் புகைப்படத்துக்கு எத்தனை 'லைக்ஸ்’ விழுந்திருக்கின்றன என இரவெல்லாம் பரபரப்புடன் 15 நிமிடங்களுக்கு ஒரு முறை செல்போனைச் சீண்டும் இளசுகளுக்கு, உறக்கம் தொலைத்த தன் உடம்புக்கு நோய்க்கூட்டம் 'லைக்’ போட்டிருக்கும் விஷயம் தெரியவில்லை. இதுவும் இன்னபிறவுமாக நல்வாழ்வு தொடர்பான விசாலமான பார்வையை விதைப்பதே நலம் '360’-ன் நோக்கம்!



'எண்சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்’ என்பது முதுமொழி. ஆனால், அந்த எண்சாண் உடம்பு, நலத்தோடு அன்றாடம் நகர்வதற்கு அடிப்படையான விஷயம் வயிறும் அதில் நடக்கும் செரிமானமும்தான். சாப்பிட கொஞ்சமே கொஞ்சம் தாமதமானாலும் லேசாக நெஞ்சாங்கூட்டுக்குக் கீழே எரிவதும், 'எண்ணெய் பலகாரம் வீணாகுதே’ என என்றைக்கோ ஒரு நாள் சாப்பிட்டதற்கு, அடுத்த இரண்டு நாள்கள் ஏப்பத்தில் வாசம் காட்டி வதைப்பதையும் நாம் பல சமயம் அலட்சியப்படுத்திவிடுவது உண்டு. அரிசியையும், கம்பையும், சோளத்தையும், மணத்தக்காளிக் கீரையையும் பல ஆயிரம் ஆண்டுகளாகப் பார்த்துப் பழகிய நம் ஜீரண மரபுக்கு, சிவப்பு சிக்கன் பீஸுடன் வரும் 'அலூரா சிவப்பு’, 'எரித்ரோசைன்’ ஆகியவை கொஞ்சம் திகிலாகத்தான் இருக்கும். இந்தத் திகிலில், சில துளி ஜீரணசுரப்பைக் கூட்டவோ குறைக்கவோ செய்யும்போதுதான் அல்சரில் இருந்து கொலைட்டிஸ் வரை குடலின் இயல்பு தாறுமாறாகச் சிதைகிறது. கடைசிப் பந்தில் சிக்ஸர் விளாசி ஜெயித்துவிடலாம் என்று பழகிவிட்ட டி-20 மனம், அலுவலகம், பள்ளி, கல்லூரிகளுக்கு கடைசி நிமிடத்தில் அள்ளிப் போட்டுக்கொண்டு அரக்கப் பரக்கக் கிளம்பும் பழக்கம்... இவைதான் வியாதிக்குச் சிவப்பு கம்பளம் விரிக்கும்!



உமிழ்நீரில் தொடங்குகிறது ஜீரணம். உணவு மேஜையில் மூக்கின் மோப்பத்தில் தொடங்குகிறது என்றுகூட சொல்லலாம். 24 மணி நேரத்தில் சுரக்கும் சுமார் 11.25 லிட்டர் எச்சில், அதனுடன் நாம் உண்ணும் கார்போஹைட்ரேட்டை உடைத்து, குளுக்கோஸ் துகள்களாக்கி ஜீரணத்துக்கு பிள்ளையார் சுழி போடுகிறது.



ஒரு துண்டு உணவு உள்ளே போனதும் வாயில் ஊறும் எச்சிலில் உணவைச் செரிக்க உதவும் மியூசின் அமைலோஸ் சுரப்புகளும், உடலுக்கு ஒவ்வாத பொருள்களை முறித்து வெளியேற்றும் லைபேஸ் நொதியும் சுரக்கத் தொடங்கும். உணவை மெதுவாக நொறுக்கி, அந்த உமிழ்நீருடன் கலந்து உள் அனுப்ப வேண்டும். இதற்கு எல்லாம் அறுசுவையை உணரும் ஆசுவாசமான மனம் நிச்சயம் வேண்டும். இடது கையில் கம்ப்யூட்டர் மவுஸோ, ஸ்மார்ட் போனோ, தொலைக்காட்சி ரிமோட்டோ... ஏன் 'ஆறாம்திணை’ புத்தகமோ வைத்துக்கொண்டு வலது கையில் பாற்கடல் அமிர்தம் சாப்பிட்டால்கூட அது பாழ் தான். உணவு உத்தமமாக ஜீரணிக்க பரபரப்பு இல்லாத மனம் அடிப்படைத் தகுதி.



உடலை நோய்ப்பிடிக்குச் சிக்காமல் தற்காக்கும் பொடி வகைகளை நம் முன்னோர்கள் காலம் காலமாக உணவில் சேர்த்து வந்திருக்கின்றனர். சாதாரண சளி, இருமலில் இருந்து சர்க்கரை வியாதி வரை காக்கும் அப்படியான ஒரு பொடி அன்னப் பொடி. சமீபமாக எக்குத்தப்பு இரவு விருந்து உண்டாக்கும் எதுக்களிப்பு, வயிறு முதல் தொண்டை வரை எரியவைத்து நாள்பட்ட வயிற்று வியாதியை (Gastroesophageal Reflux Disease) வரவைக்கிறது. இதற்கு அன்னப்பொடி மிகச் சிறந்த மருந்து. ஜீரணத்தை வரைமுறைப்படுத்தும் அன்னப்பொடியின் செய்முறை பெட்டிச் செய்தியில்.



தாய்ப்பாலுக்குப் பின் அரிசி/கஞ்சியில் தொடங்கி, ஐந்து வயதுக்குள்ளாகவே ஹைதராபாத் தம் பிரியாணி வரை ஜீரணிக்கப் பழகும் நம் ஜீரண மண்டலம், உடலுக்கான மிகப் பெரிய பாதுகாப்பான அரண். அதில் ஓட்டை உடைசல் ஏற்படுவதற்குக் காரணம்... வாயைக் கட்டாமல் வளைத்து அடிக்கும் மனோபாவமும், எதைத் தின்கிறோம் என்ற அக்கறையில்லாத வாழ்வியலும், 'ஒரு வாய் சாப்பிட்டுவிட்டுப் போயேன்’ என்ற கரிசனக் குரலை அலட்சியப்படுத்தி நகர்வதும்தான். சின்னச் சின்ன அக்கறைகளை சிறுவயது முதல் உண்டாக்குவது மட்டுமே நாளைய நலவாழ்வுக்கான நம்பிக்கைகள்.



நம்பிக்கையோடு நலம் காப்போம்!



- நலம் பரவும்...



அன்னப்பொடி

தேவையான பொருள்கள்: சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலம், சீரகம், நிழலில் உலர்த்திய கறிவேப்பிலை, கல் உப்பு அனைத்தும் தலா 50 கிராம். பெருங்காயம் 25 கிராம்.

செய்முறை: சுக்கின் புறத்தோலைச் சீவி உலர்த்தி, மற்றவற்றை எல்லாம் நன்கு குப்பை நீக்கி உலர்த்தி, அனைத்தையும் பொன்வறுவலாக வாணலியில் வறுத்து, பொடித்துவைத்துக்கொண்டு வாரம் மூன்று நாள் முதல் உருண்டைச் சோற்றில் பிசைந்து சாப்பிடுவது அஜீரணத்தைப் போக்கும் எளிய மருந்து.

உணவுக்கு முன் வெந்தயப்பொடி, உணவோடு அன்னப்பொடி அல்லது ஐங்காயப்பொடி, உணவில் தூதுவளை ரசம், உணவுக்குப் பின் கடுக்காய்ப்பொடி என்று உணவை மருந்தாக்கிச் சாப்பிட்டவர்கள் நாம். நவீனத்தில் மாடுலர் கிச்சனாக மாறிப்போன அடுப்பங்கரையில், ஆலிவ் ஆயிலும் மயோனைஸும் குடியேறி, ஓமத்தையும் திப்பிலியையும் ஓரங்கட்டி ஒழித்துவிட்டன. கொஞ்சம் அவற்றை மீட்டெடுத்து சாம்பார் பொடி, ரசப்பொடி செய்வது போல அன்னப்பொடி செய்து சாப்பிட்டுப் பாருங்கள். ஆரோக்கியம் உங்கள் வீட்டில் ஆயுளுக்கும் குடியிருக்கும்! 
சுகர், பி.பி., போன்றவற்றை தவிர்க்க, தமிழர்கள் 'கை’க்கொள்ளும் ஒரே உத்தி... நடைப்பயிற்சி! ஆனால், நாம் மேற்கொள்ளும் நடைப்பயிற்சி முறையானதா? இதுகுறித்த சில சரி, தப்பு விவரங்கள் இங்கே...

நடைப்பயிற்சிக்கு மாற்றாக மருந்து கிடையாது. இந்தப் பயிற்சி இல்லாமல் எடை குறைக்கவோ, சர்க்கரை நோயை வெல்வதோ சாத்தியமே இல்லை.

எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். காலையில்தான் நடக்க வேண்டும் என்பது இல்லை. இரவில் நடக்கையில் 5-10 சதவிகிதம் பயன் குறையலாமே தவிர, தப்பு கிடையாது.

ஓடுவதற்கும் நடப்பதற்கும் கலோரி எரிப்பில் அதிக வித்தியாசங்கள் இல்லை. 30 நிமிடங்களில் 3 கி.மீ கடக்கும் வேகத்தில் 45 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் நடக்கலாம். ஆனால், 'விண்டோ ஷாப்பிங்’ போல பராக்குப் பார்த்துக்கொண்டே நடப்பது அதிகம் பயன் தராது.

நடைக்கு முன்னர் தேநீர் அருந்தலாம். குறிப்பாக, சர்க்கரை நோயாளிகள் நடைப்பயிற்சிக்கு முன்னர் பச்சைத் தேநீரும், கொஞ்சம் முளைகட்டிய பயறு அடங்கிய சுண்டலும் சாப்பிடலாம்.

நடக்கும் 45 மணித்துளிகளும் பாட்டு கேட்டுக்கொண்டே நடப்பேன்’ எனப் பிடிவாதம் பிடித்தால், கூடிய விரைவில் ஆரோக்கியமான காதுகேளாதவராக மாறக்கூடும்.

குடும்ப உறவுச் சிக்கல்கள், ஷேர் வேல்யூ, பட விமர்சனம், தோனியின் ஹெலிகாப்டர் ஷாட் எனப் பேசிக்கொண்டு நடப்பது உடற்சோர்வையும் மன உளைச்சலையுமே தரும்.

'அதான் கிச்சன்ல, மொட்டைமாடில நடக்கிறேனே... அதுவே ரெண்டு கி.மீ வரும்!’ போன்ற சமாதானங்கள் உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்வது.

சர்க்கரை நோயாளிகள், கண்டிப்பாக வெறும் காலில் நடக்கக் கூடாது. தரமான, எடை குறைவான, மெத்தென்ற கேன்வாஸ் ஷூ அல்லது செருப்பு நல்லது.

நன்றி ஆனந்த விகடன் 

Jun 17, 2014

கிரீன் டீ ஆரோக்கியத்துக்கான “கிரீன்” சிக்னல்!

ஆன்டிஆக்சிடன்ட் நிறைந்தது
கிரீன் டீ-யில் உள்ள பாலிபீனால் நம் உடலில் உள்ள திசுக்களில் நடக்கும் ரசாயன மாற்றத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தடுக்கிறது. இதன் மூலம், வயதாகும் செயல்பாட்டைத்தாமதப்படுத்தி, வாழ்க்கையை நீட்டிக்கிறது.
புற்றுநோய்க்கு எதிராகச் செயல்படும்
வைட்டமின் சி-யைக் காட்டிலும், இதில் உள்ள ஆன்டிஆக்சிடன்ட் 100 மடங்கு புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடக்கூடியது. இதன் மூலம் புற்றுநோய்க்கான வாய்ப்பு குறைகிறது.
 உடல் எடை குறையும்
உடலில் உள்ள கொழுப்பு செல்களை எரித்து, உடலின் வளர்சிதை மாற்றப் பணிகளை இயற்கையான முறையில் விரைவுபடுத்துகிறது. தோராயமாக நாள் ஒன்றுக்கு 70 கலோரி வரை இதன் மூலம் எரிக்கலாம்.
உயர் ரத்த அழுத்தம் குறையும்
கிரீன் டீ-யில் உள்ள ரசாயனங்கள் உயர் ரத்த அழுத்தத்துக்குக் காரணமான ஹார்மோன் அளவைக் கட்டுப்படுத்தி, ரத்த அழுத்தத்தையும், ரத்தத்தில் சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
இதயநோய் வரும் வாய்ப்பு குறையும்
கிரீன் டீ குடிப்பவர்களுக்கு, உடலில் கொழுப்புக் குறைந்து, இதய நோய்க்கான வாய்ப்பு 31 சதவிகிதமாகக் குறைகிறது. மாரடைப்புக்குப் பிறகு செல்கள் இறப்பதைத் தவிர்த்து, இதய செல்கள் வளர்ச்சியை விரைவுபடுத்துகிறது. ரத்தம் உறைவதைத் தடுக்கிறது.

உணவு நஞ்சாவதைத் தடுக்கும்
பாக்டீரியா கிருமிக்கு எதிராகச் செயல்படும். பாக்டீரியா கிருமியால், உணவு நஞ்சாவது (ஃபுட் பாய்சனிங்) தடுக்கப்படுகிறது. வயிற்றில் கெடுதலை ஏற்படுத்தும் பாக்டீரியாவின் வளர்ச்சியைத் தடுத்து, நன்மை செய்யும் பாக்டீரியாவின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. அதேபோல், வைரஸ் கிருமித் தொற்றையும் தடுக்கிறது.
எலும்புகளுக்கு வலு சேர்க்கும்
கிரீன் டீ-யில் அதிக அளவு ஃப்ளோரைட் உள்ளதால், எலும்புகள் உறுதிப்படும். தினமும் கிரீன் டீ பருகுவதன் மூலம், எலும்பின் அடர்த்தி பாதுகாப்பாக இருக்கிறது.
 
மன அழுத்தம் நீங்கும்
எல்-தினைன் (L-theanine) என்ற அமினோ அமிலம் இதில் உள்ளது. மன அழுத்தம், பதற்றத்தைப் போக்க இது உதவுகிறது. மேலும், டோபோமைன் அளவை அதிகரிக்கச் செய்கிறது. இதில் காபியைக் காட்டிலும் மிகக் குறைந்த அளவே காஃபைன் உள்ளதால், உடனடி புத்துணர்வைத் தந்து, மூளையின் செயல்திறனை மேம்படுத்துகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும்
கிரீன் டீ-யில் உள்ள பாலிபீனால் மற்றும் ஃபிளவனாய்ட் என்ற ரசாயனங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி, நோய்க் கிருமித் தொற்றில் இருந்து நம்மைப் பாதுகாக்கிறது.
கிரீன் டீ ரெடி:
கிரீன் டீ தூளாகவும், ஒரு கப் தேநீர் தயாரிக்கும் வகையில் பாக்கெட் வடிவிலும் கிடைக்கும். அருந்தும்போது சாதாரண தேநீர் போலச் சுவையாக இல்லாவிட்டாலும், மிகவும் ஆரோக்கியமானது என்பதால் இதைத் தினமும் பருகுவது நல்லது.
கிரீன் டீ தயாரிக்க 80 முதல் 85 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை போதுமானது. நீரை நன்றாகச் சுடவைக்கவும். அதில் ஒரு டீஸ்பூன் கிரீன் டீ சேர்த்து, நன்றாக கொதிநிலைக்குக் கொண்டுசெல்லவும். ஆனால் கொதிக்கவிடக் கூடாது. தேயிலையின் சாறு நீரில் இறங்க ஒரு சில நிமிடங்கள் அப்படியே விட வேண்டும். பிறகு, வடிகட்டி அப்படியே அருந்தலாம்.
பால் சேர்க்கவே கூடாது. சர்க்கரையைத் தவிர்ப்பது நல்லது. சர்க்கரைக்குப் பதில் சிறிது தேன் சேர்த்துக்கொள்ளலாம்.
- பா.பிரவீன் குமார்
-டாக்டர் விகடனிலிருந்து...

Jun 2, 2014

எப்படியுள்ளது இந்திய இராணுவ பலம்?


இந்திய இராணுவத்தைப் பொறுத்தவரை நம் முன்னே உள்ள பெரிய சவால், அதை வலிமை வாய்ந்ததாக மாற்றுவது மட்டுமல்ல ,  இந்தியாவில் தயாராகும் போர்க் கருவிகள், ஆயுதங்கள், குண்டுகள், போக்குவரத்து வாகனங்கள், போர் விமானங்கள், கடற்படைக்கான கப்பல்கள், ரேடார்கள், கவச வாகனங்கள், நவீனக் காலணிகள், பனிமலைகளுக்கான பாதுகாப்பு உடைகள் போன்றவற்றுடன் இராணுவத்தைத் தன்னிறைவு கொண்டதாக மாற்றுவதும் பெரிய சவாலாகும்.


உலகிலேயே அதிக அளவு இராணுவ சாதனங்களை இறக்குமதி செய்வதில் முதலிடம் வகிக்கும் நாடு சீனா என்பதை மாற்றி, 2011 முதல் இந்தியா அந்த இடத்தைப் பிடித்துவிட்டது. ஆனால், சீனாவைவிட நாம் அதிகமாக வாங்குகிறோமா? இல்லை, சீனா பெரும்பாலானவற்றை இப்போது உள்நாட்டிலேயே தயாரித்துக்கொள்வதுடன் பிற நாடுகளுக்கும் விற்கத் தொடங்கிவிட்டது. நாம் நம்முடைய தேவைக்கே வெளிநாடுகளைத்தான் நம்பியிருக்கிறோம்.


200405 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் இராணுவத் தேவைகளுக்கான இறக்குமதி 111% அதிகரித்துவிட்டது என்று "ஸ்டாக்ஹோம் சர்வதேச சமாதான ஆய்வுக் கழகம்' தெரிவிக்கிறது.

பாகிஸ்தானுக்கு உதவும் சீனா

சீனாவில் இப்போது இராணுவத் தேவைகளுக்கான எல்லாமும் உற்பத்தி செய்யப்படுகின்றன. அவற்றில் பெரும்பாலானவை ஏற்றுமதியும் செய்யப்பட்டு நல்ல இலாபமும் ஈட்டப்படுகிறது. சீன இறக்குமதியில் முதலிடத்தைப் பிடிப்பது பாகிஸ்தான். பாகிஸ்தானின் ஜே.எஃப்.17 ரக போர் விமானம் உட்பட எல்லாமே சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. அவ்வளவு ஏன், பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் அனைத்துமே சீனாவில் வடிவமைக்கப்பட்டவைதான். மியன்மர், பங்ளாதேஷ், இலங்கை ஆகிய இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகளுக்கும் சீனாதான் தொடர்ந்து ஆயுதங்களை விற்றுவருகிறது.


அமெரிக்கா எங்கள் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டால், உள்நாட்டுப் பாதுகாப்புக்கு எங்களுக்கு இதெல்லாம் தேவை என்று ஆப்கானிஸ்தான் சில ஆயுதங்கள், தளவாடங்கள், கருவிகள் டங்கிய பட்டியலை இந்தியாவிடம் அளித்தது. அவற்றில் பெரும்பாலானவற்றைத் தர முடியாது என்று இந்தியா கூறிவிட்டது. இது ஒன்றே போதும் நம்முடைய பாதுகாப்புத் துறை எந்த அளவுக்குத் தன்னிறைவு பெற்றிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள.

போஃபர்ஸ் பீரங்கி
அக்னி5 ரக ஏவுகணையும் கடற்படைக்குத் தேவைப்படும் அணுவிசை
 நீர்மூழ்கிக் கப்பல்களும் முழுமையாகப் பயன்பாட்டுக்கு வந்தால்தான் நாம் ஓரளவுக்குத் தன்னிறைவு பெற்றிருக்கிறோம் என்று பொருள். பெரிய அளவில் எந்த இராணுவ சாதனத்தையும் ஏற்றுமதி செய்யும் நிலையில் நாம் இல்லை. நம்முடைய நாட்டில் தயாராகும் "இன்சாஸ்' ரக துப்பாக்கியைக் கூடப் பிற நாடுகள் வாங்காது என்பதே நம்முடைய ஆயுதங்களின் தரம்.

இந்தியாவுக்குத் தேவைப்படும் இராணுவ சாதனங்களையும் கருவிகளையும் தயாரிக்கும் பொறுப்பு எவருடையது, இதில் ஏற்படும் காலதாமதங்களுக்கு யாரைத் தண்டிப்பது என்பதில் கூட நம்மிடையே தெளிவான பதில் இல்லை. போஃபர்ஸ் எஃப்.எச்.77 ரக பீரங்கிகளை உள்நாட்டிலேயே தயாரிப்பதில் கூட முடிவெடுக்காமலும் நடவடிக்கை எடுக்காமலும் காலம் தாழ்த்தியது நம்முடைய திறமைக்கும் அக்கறைக்கும் நல்லதொரு சான்று!


சுவீடனிலிருந்து 410 போஃபர்ஸ் பீரங்கிகளை வாங்க சுமார் ரூ1,710 கோடி மதிப்பில் 1986 இல் ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது. அதற்குப் பிறகு தேவைப்படும் 1,000 பீரங்கிகளை இந்தியாவிலேயே தயாரித்துக்கொள்ள உதவ வேண்டும் என்று அந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது.

அந்தக் கொள்முதலுக்காக கமிஷன் பெறப்பட்டதாகக் கூறி பிரச்சினை பெரிதானதால் அந்த ஒப்பந்தம் பாதியில் கைவிடப்பட்டது.

இந்தியாவுக்குத் தேவைப்படும் பீரங்கிகளை உள்நாட்டிலேயே தயாரிக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. இறக்குமதி செய்யவும் மாற்று வழி யோசிக்கப்படவில்லை. இராணுவம் தன்னுடைய தேவைக்காக மாற்று நிறுவன பீரங்கிகள் வேண்டும் என்று கேட்டபோது 


சிங்கப்பூர், தென்னாபிரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பீரங்கிகள் பரிசீலிக்கப்பட்டன. அவற்றுடனும் கமிஷன் புகார் உருவானதால் அவையும் நிராகரிக்கப்பட்டன.


யார் பொறுப்பு


போஃபர்ஸ் பீரங்கி மட்டும் இல்லையென்றால், கார்கில் போரில் இந்திய இராணுவம் எளிதில் வெற்றி பெற்றிருக்க முடியாது. போஃபர்ஸ் பீரங்கிகளை இந்தியாவில் தயாரித்துக் கொள்வதற்கு வசதியாக அதன் வடிவமைப்பு, தொழில்நுட்பம் பற்றிய விபரம் ஆகிய அனைத்தும் 1987 லேயே இந்திய அரசிடம் சுவீடனால் தரப்பட்டுவிட்டது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக அவை தூசிபடிந்து கிடந்தன.

வேறு எந்த மாற்றும் இல்லையென்ற நிலைமைக்குப் பிறகே அதில் கவனம் செலுத்தினார்கள். உள்நாட்டிலேயே பீரங்கியைத் தயாரிக்கும் முதல் முயற்சி தோல்வியில் முடிந்தது. பிறகு, அதில் வெற்றி ஏற்பட்டது. சுவீடன் தயாரித்துத் தந்த பீரங்கியால் 30 கிலோ மீற்றர் தொலைவு வரை உள்ள இலக்கைத்தான் சுட முடியும்.

இப்போது இந்தத் திறன் 38 கிலோ மீற்றராக அதிகமாகியிருக்கிறது. ஒரே சமயத்தில் பல ரொக்கெட்டுகளை வெடிக்க வைக்கும் லாஞ்சர்களையும் அடுத்து வெற்றிகரமாகத் தயாரித்திருக்கிறார்கள். இத்தனை ஆண்டுகளாக இந்த பீரங்கியின் வடிவமைப்புத் தகவல்களை வாங்கி வெறுமனே வைத்திருந்ததற்கும் உள்நாட்டில் தயாரிக்காமல் காலம் கடத்தியதற்கும் யார் பொறுப்பேற்கப் போகிறார்கள்?

உடனடியாகச் செய்ய வேண்டியவை

இராணுவம் தொடர்பான, உயர் தொழில்நுட்பம் தேவைப்படுகிற தொழில்துறைகளில் அந்நிய முதலீட்டுக்கு இப்போது நிர்ணயித்துள்ள வரம்பை நீக்க வேண்டும்.
இராணுவத்துக்குத் தேவைப்படும் சாதனங்களையும் கருவிகளையும் தயாரிக்க அரசுத் துறை நிறுவனங்களுக்கு மட்டும் உள்ள ஏகபோக உரிமை முடிவுக்கு வர வேண்டும்.

அணுசக்தி நீர்மூழ்கிகள், டேங்குகள், போர்க் கப்பல்கள் ஆகியவற்றுக்குத் தேவைப்படும் மிகவும் நுட்பமான கருவிகள், பாகங்களைத் தனியார் துறையிடமிருந்துதான் வாங்கிக்கொள்கின்றனர். அப்படியிருக்க, அந்த நிறுவனங்களும் அரசுத் துறை நிறுவனங்களுடன் போட்டியிட வாய்ப்பு தர வேண்டும். ஏகபோக உரிமையை நீக்க வேண்டும்.


இராணுவத்துக்குத் தேவைப்படுவனவற்றை இறக்குமதி செய்தோ, அல்லது கருவிகளை இறக்குமதி செய்து இணைத்தோ பூர்த்திசெய்துகொள்ளும் இப்போதைய முறையை கைவிட வேண்டும். இறக்குமதி செய்வதற்குப் பதிலாக தனியார் துறையும் பாதுகாப்பு ஆராய்ச்சி, வளர்ச்சி அமைப்பும் (டி.ஆர்.டி.ஓ.) இணைந்து செயல்பட ஊக்குவிக்க வேண்டும். எடை குறைவான விமானங்கள் தயாரிப்பு போன்றவற்றில் இந்த ஒத்துழைப்பைத் தொடங்கலாம்.


இராணுவத் தொழில்நுட்பம், தற்காப்புச் சாதனங்கள் போன்றவற்றை ஐரோப்பிய நாடுகளிடமிருந்தும் அமெரிக்காவிடமிருந்தும் சீனாவால் எளிதில் பெற முடியாது. இந்தியா அப்படியல்ல. இஸ்ரேல், ரஷ்யாவிடமிருந்தும் கூட வாங்கிக்கொள்ள முடிந்த வாய்ப்பை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.


பாதுகாப்பு அமைச்சகத்தை சிவில் அதிகாரிகள் நிர்வகிக்கும் இப்போதைய அமைப்பு முறை மாற வேண்டும். முப்படைகளின் தலைமைக்கும் பாதுகாப்புத் துறையின் தலைமைக்கும் நெருங்கிய ஒத்துழைப்பும் நட்பும் தேவை. அப்படியிருந்தால்தான் இப்போதைய அவலநிலை நீங்கும்.


ஜி. பார்த்தசாரதி

The Hindu