Jun 22, 2014

நலம் 360’ - 2


மருத்துவர் கு.சிவராமன், ஓவியம்: ஹாசிப்கான்
தொழில்நுட்பம், நம் விரல் நுனிக்குள் உலகை அடக்கிவிட்டது உண்மைதான். நியூயார்க் நகரத்து வெள்ளைக்காரன், தான் பயணிக்க வேண்டிய விமானத்தின் இருக்கையை உறுதிசெய்ய, சென்னையின் கடற்கரை சாலையின் அடுக்குமாடி கம்பெனியில் இருந்து தெலங்கானா ராமண்ணாவிடம்தான் பேசியாக வேண்டும். 'யோசனைகாத தூரங்கள்’ எல்லாம் எலெக்ட்ரான் துகள்களுக்குள் நெருக்கப்பட்டு மைக்ரோ விநாடிகளில் கடந்துபோக ஆரம்பித்தாயிற்று. அதே சமயம், நம்மில் பலருக்கும் அடிக்கடி எழும் கேள்வி... இந்தத் தொழில்நுட்ப வீச்சில் நாம் எல்லோரும் நெருங்கி இருக்கிறோமா... விலகி இருக்கிறோமா? என்பதுதான்.

இன்று இணையமும், முகநூலும், கைபேசிக் குறுஞ்செய்திகளும் நாம் எழுதிய அடுத்த கணத்தில், எமோட்டிக்கான் புன்னகையுடன் என்னதான் அதனையே பரிமாறினாலும், தொலைவும் காத்திருப்பும் தந்த உயிர்ப்பசையை உலரவைத்துவிட்டது என்பதே உண்மை. 

'நாட்டார் வழக்காற்றியல்’ மூத்த பேராசிரியர் தொ.பரமசிவம் தன்னுடைய 'வழித்தடங்கள்’ என்ற நூலில், ஒரு பொருளின் உற்பத்திக்கும் நுகர்வுக்கும் இடையிலான பண்பாட்டு விலகல் எந்த அளவு நம் சமூகத்தைச் சிதைக்கிறது என, மிக முக்கியமான ஒரு விஷயத்தைக் குறிப்பிடுகிறார். உற்பத்தி செய்யப்படும் பொருள் குறித்த முழுமையான அறிவை மரபுவழித் தொழில்நுட்பம் அறிந்திருக்கும். அது வீட்டுக்கான வாசற்கதவு செய்வதாக இருந்தாலும் சரி, மாதவிடாயின்போது வாந்தியுடன் வரும் வயிற்றுவலிக்கான கைப்பக்குவ மருந்து செய்வதாக இருந்தாலும் சரி, யாருக்காகச் செய்கிறோம், எப்படிச் செய்கிறோம், எதைக்கொண்டு செய்கிறோம், நுகர்வோரின் மனம் அதில் எப்படிக் களிக்கும் என்ற பார்வை, மரபுவழித் தொழில்நுட்பத்தில் இருந்தது.

மூட்டு அறுவை மருத்துவர் 'எலும்புமுறிவை நான் இணைத்துவிட்டேன். நடக்கவைப்பதற்கு பிசியோதெரபிஸ்ட் வருவார்’ என்று மறைவதும், அதற்குள் அவசரமாக, 'சா£ர்... நான் என்ன சாப்பிடலாம்?’ என்றால், 'டயட்டீஷியனிடம் அப்பாயின்மென்ட் வாங்கிட்டீங்கல்ல...’ என்று பதில் வருவதும், தொழில்நுட்பம் புகுத்தும் விலகலுக்கான நிதர்சன அடையாளங்கள்.

பாரதிதாசனின் கவிதையில் வரும் 'கொண்டவர்க்கு ஏது பிடிக்கும், குழந்தைகள் எது விரும்பும், தண்டூன்றி நடக்கும் மாமன் மாமிக்குத் தக்கதென்ன?’ என, உண்பவர் தம்மைக் காணும் அக்கறையைத் தொலைத்தோம். 'என்னென்ன சேர்க்கப்பட்டுள்ளன?, எப்படித் தயாரித்தார்கள்?’ என்ற விவரங்கள் படுநேர்த்தியாக மறைக்கப்பட்ட குப்பை உணவுக்கூட்டம் ஒவ்வொரு வீட்டிலும் ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளன. இந்தத் துரித உணவின் படைப்புகள், பெரும்பாலும் நுகர்வோரிடம் இருந்து வெகுதூரம் திட்டமிடப்பட்டு விலகியே இருக்கிறது. மெக்ஸிகோ சோளம், ஜெர்மானிய இயந்திரத்தில் இத்தாலியன் நறுமணத்துடன், கிழக்காசியக் கூலிகளால் தயாரிக்கப்பட்டு, பின்னர் இங்கிலாந்து கம்பெனியால் இந்தியாவில் வணிகப்படுத்துவதில் எப்படி விலகுகிறோம், எப்படித் தொலைந்துபோகிறோம் என்பது தெளிவாகவே புரியும். படைப்பும் நுகர்வும் அந்நியப்பட்டுப்போனது, ஆதிக்க சக்திகளுக்கான அதிகபட்ச லாபத்துக்கான சுரங்கம் என்பது ஒரு பக்கம். இன்னொரு பக்கம், அது விளிம்பு நிலையில் உள்ள விலாசமற்ற மனிதர்களின் நலவாழ்வை மிதித்து நசுக்கி நாசமாக்குவது வேதனையான விஷயம். படைப்பின் சூட்சுமம் நேர்த்தியாக மறைக்கப்பட்டு, அதீத அலங்காரத்துடன் விற்கப்படும் 'ரெடி டு ஈட்’ உணவுகளில் பெருவாரியானவை, ஜீரண நலத்துக்குச் சிக்கல் வைப்பவை. காலை எழுந்ததும் சிரமம் ஏதுமின்றி மலத்தை வெளியேற்றும் பழக்கத்தைச் சிதைப்பவை.

'காலைக் கடன்’ என்ற வார்த்தையை யார் முதலில் அழகாகச் செதுக்கினார்கள் எனத் தெரியவில்லை. உடனே பைசல் பண்ணாவிட்டால், வட்டியைக் குட்டியாகப்போட்டு வாழ்வைச் சிதைக்கும் கடன் சுமைபோல... மலச்சிக்கல் பல நோய்களைப் பிரசவித்து நல்வாழ்வுச் சிக்கலை உண்டாக்கும். நவீன மருத்துவம், வாரத்துக்குக் குறைந்தபட்சம் மூன்று நாட்களாவது மலம் கழிக்கவில்லை அல்லது இறுகிய வலியுடன்கூடிய மலம் கழித்தலை மட்டும்தான் 'மலச்சிக்கல்’ என வரையறுக்கிறது. ஆனால், பாரம்பரிய மருத்துவம் அனைத்தும், எந்த மெனக்கெடலும் இல்லாத சிக்கலற்ற காலை நேர மலம் கழித்தலை மிக ஆணித்தரமாக அறிவுறுத்துகிறது. 'கட்டளைக் கலித்துறை’ என்ற நூலோ நாள் ஒன்றுக்கு மூன்று முறை மலம் கழிப்பது நல்லது என்றும், சித்த மருத்துவ நோய் அணுகா விதியோ... 'மலத்தை அடக்கினாலோ

'முழங்காலின் கீழ் தன்மையாய் நோயுண்டாகும்
தலைவலி மிக உண்டாகும்
சத்தமானபான வாயு பெலமது குறையும்
வந்து பெருத்திடும் வியாதிதானே’

என்று அறிவுறுத்துகிறது. மூலநோய், மூட்டுவலி, தலைவலி முதல் எந்த ஒரு தசை, நரம்பு சார்ந்த நோய்க்கும், மலச்சிக்கலை நீக்குவதைத்தான் தலையாய முதல் படியாக, சித்த மருத்துவமும் தமிழர் வாழ்வியலும் சத்தமாகச் சொல்கின்றன. சமீபமாக, துரித நவீன வாழ்வியலில் இந்தப் புரிதல் கொஞ்சம் கொஞ்சமாக ஓரங்கட்டப்படுகிறது. வரும்போது அல்லது வசதிப்படும்போது போய்க்கொள்ளலாம் எனும் மனோபாவம் பலமாக வளர்கிறது, 6.30 மணிக்கு எழுந்து 7 மணிக்குள் வண்டியேற வேண்டிய பால்குடி மறந்த பச்சிளம் கேஜி முதல், சில நேரங்களில் பல் துலக்காமல், குளிக்காமல்கூட ஆனால் மறக்காமல் செல்போன் ஹியர் பீஸை மட்டும் காதில் செருகிவிட்டு, பஸ் இருக்கையில் தூங்கிக்கொண்டே பயணிக்கும் கல்லூரி இளசுகள் வரை காலைக் கடன் கடைசிபட்சமாகிவிட்டது. பின்னாளில் இதுவே பழக்கமாகி காலைக் கடன் பலருக்கும் மதியம், மாலை, இரவுக் கடனாக இஷ்டத்துக்கு மாறிவிட்டது. 'அதுதான் போகுதே... அப்புறமென்ன?’ என அலட்சியப்படுத்துவதுதான் பல வியாதிகளுக்கும் ஆரம்பம். அதிகாலையில் மலம் கழிப்போருக் குத்தான், பகல் பொழுதில் பசி, ஜீரணம் சரியாக இருக்கும்; வாயுத்தொல்லை இருக்காது; அறிவு துலங்கும். நேற்று சாப்பிட்ட உணவில் கொஞ்சம் துவர்ப்பு கூடிருச்சோ, அதனால்தான் மலச்சிக்கலோ என வீட்டுப் பெரியவர் யோசித்து, அடுத்த முறை வாழைப்பூவின் அளவைக் குறைத்து சமைக்கும் தொழில்நுட்ப சாத்தியம், 'டூ மினிட்ஸ்’களில் சாத்தியம் இல்லை.

பாரம்பரியப் புரிதலின்படி அன்றாடம் நீக்கப்படாத 'அபான வாயு’ உடல், உள்ளம் இரண்டையும் நிறையவே சங்கடப்படுத்தும். ஸ்கூல்விட்டு வந்ததும், புத்தகக் கட்டோடு நேரே கழிப்பறைக்குப் பறந்தோடும் குழந்தைக்கு மாலை, இரவு, நள்ளிரவில்தான் பசிக்கும். பகலில் கொண்டுசெல்லும் உணவைப் பத்திரமாகத் திருப்பிக் கொண்டுவர வைக்கும். நாள்பட்ட மூட்டுவலி முதல் பக்கவாதம், தோல் நோய்கள் வரை உடலில் சீரற்று இருக்கும் வளி, அழல், ஐயம் எனும் முக்குற்றங்களை முதலில் சீராக்கி மருத்துவம் செய்ய முதல் மருந்தாக பேதி கொடுப்பதுதான் பல ஆயிரம் ஆண்டுப் பழக்கம். ஆரோக்கியமான உடலுக்கு வருடம் இரண்டு முறை பேதி எடுத்துக்கொள்வது நல்லது. உடனே 'பேதி மருந்து ரெண்டு பார்சல்...’ என மளிகைக் கடை சாமான் மாதிரி வாங்கி வராமல், குடும்ப மருத்துவரை அணுகி நாடி பார்த்து, உடல் வன்மை பார்த்து, உடலுக்கு ஏற்ற பேதி மருந்து எடுப்பதுதான் உத்தமம்.

மலச்சிக்கலைத் தவிர்க்க, கொஞ்சம் மலம் இறுகத் தொடங்கினாலோ அல்லது அதற்கான அழைப்பு காலையில் வரவில்லை என்றாலோ மெனக்கெடுவது மிக மிக அவசியம். பெருங்குடலில் தண்ணீர் அதிகம் உறிஞ்சப்படுவது, குடலின் இயல்பான அசைவுவேகம் குறைவு, இரும்பு வலிநிவாரணி மாத்திரைகள், நார்ச்சத்து அற்ற குப்பை உணவுகள்... என மலச்சிக்கலை வரவழைக்கும் அன்றாட விஷயங்கள் நிறைய. அலட்சியமும் சோம்பேறித்தனமும் கூடுதல் காரணங்கள்.

மைக்ராஸ்கோப் டெலஸ்கோப் வைத்து பார்த்தாலும், எந்த இணையத்தில் தேடினாலும் சிக்கவே சிக்காத சூத்திரத்தில் செய்யப்படும் இது மாதிரி உணவுகளுக்குள் சிக்காமல், நிறையவே கரிசனத்துடன் உருவாக்கப்பட்ட உணவையும் வாழ்வியலையும் அப்படியே பின்பற்றுவது நிறையவே நலம் பயக்கும். ஆனால், 'கொஞ்சம் கோணலா இருந்தாலும் குத்தமில்லை’ எனக் கும்மியடித்து விற்கப்படும் பல உணவுகள், சில நேரம் நல்வாழ்வை முற்றும் கோணலாக்கும் வாய்ப்பு உண்டு.

- நலம் பரவும்...


இரவில் படுக்கும்போது இளஞ்சூடான நீர் இரண்டு குவளை அருந்துவதும், காலை எழுந்ததும் பல் துலக்கி, பின்னர் இரண்டு குவளை சாதாரண நீர் அருந்துவதும் நல்லது.

பச்சிளங்குழந்தைகளுக்கு 5-10 திராட்சைகளை (அங்கூர் திராட்சை அதிலும் குறிப்பாக ஆர்கானிக் கிஸ்மிஸ் வாங்குவது நல்லது. திராட்சைக்குத்தான் சகட்டுமேனிக்கு பூச்சிக்கொல்லி தெளிக்கிறார்கள்.) நீரில் 2-3 மணி நேரம் மாலையில் ஊறவைத்து, பின் அதனை நன்கு நீருடன் பிசைந்து கொடுக்கலாம்.

கடுக்காய்ப் பிஞ்சை லேசாக விளக்கெண்ணெயில் வறுத்து, பொடித்த பொடியை ஒரு ஸ்பூன் அளவுக்கு முதியோர் சாப்பிடலாம். மலம் சுகமாகக் கழிவதுடன் கடுக்காயின் எக்கச்சக்கமான ஆன்ட்டிஆக்சிடன்ட்கள் வயோதிக மாற்றங்களைக் குறைக்கவும் செய்யும்.

மேலே சொன்னதுக்கு எல்லாம் பெப்பே காட்டும் நபருக்கு, நிச்சயம் மருத்துவ ஆலோசனை அவசியம். ஊசிப்பட்டாசு / பொட்டுவெடியில் இருந்து ஏகே 47 வரையிலான பல வகையான மலமிளக்கிகள் பாரம்பரிய மருத்துவத்தில் உண்டு.

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் எனும் மூன்று மூலிகைக்காய்களின் உலர்ந்த (விதை நீக்கிய பின்) தூள், ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய மிக முக்கிய மருந்து; உன்னதமான உணவு. மாலையில் இந்தப் பொடியை ஒரு ஸ்பூன் வரை சாப்பிடுவது காலையில் மலத்தை எளிதாகக் கழியவைப்பதுடன் பல ஆரோக்கிய அசைவுகளை உடலில் நிகழ்த்தும். 'திரிபலா’ என்றழைக்கப்படும் இந்த மும்மூர்த்திக் கூட்டணி, வீடுதோறும் இருக்க வேண்டிய நலப்பொக்கிஷம்.



ஐங்காயப் பொடி செய்முறை:

வயிறு சம்பந்தமான உபாதகளைத் தவிர்க்க ஐங்காயப் பொடி நல்ல உபாயம். அதன் செய்முறை இங்கே...

தேவைப்படும் பொருட்கள்: வேப்பம் பூ ஒரு டேபிள்ஸ்பூன், சுண்டைக்காய் வற்றல் ஒரு டேபிள் ஸ்பூன், மணத்தக்காளி வற்றல் ஒரு டேபிள்ஸ்பூன், மிளகு ஒரு டீஸ்பூன், திப்பிலி 6, சீரகம் ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் 4, துவரம்பருப்பு ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயம் சிறிதளவு, தனியா ஒரு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு.

இவை அத்தனையையும் உலர்த்தி, வறுத்து, பருப்புப் பொடி செய்வதுபோல் மிக்ஸியில் பொடித்து வைத்துக்கொள்ளவும். சுடுசோற்றில், குறிப்பாக வரகரிசி சாதத்தில் செக்கில் ஆட்டிய நல்லெண்ணெயுடன் கொஞ்சம் ஊற்றிப் பிசைந்து சாப்பிட்டால், சுவையுடன் ஆரோக்கியம் அலவன்சாகக் கிடைப்பது உறுதி!


No comments: