May 22, 2013

''தண்ணி அடிக்கும் இடத்தில் யார் படம் வைப்பது என்று அண்ணிக்குத் தெரியாதா?'' வெளுத்துகட்டும் நாஞ்சில் நம்பத்


'டாஸ்மாக் கடைகளில் ஜெயலலிதா படத்தைத்தான் மாட்ட வேண்டும்’ என்று, பிரேமலதா விஜயகாந்த் கொளுத்திப் போட்டிருக்கும் தீ, அ.தி.மு.க. வட்டாரத்தைக் கொந்தளிக்கவைத்துள்ளது. சென்னை தேனாம்பேட்டையில் நடந்த கூட்டத்தில் பேசிய அ.தி.மு.க. கொள்கை பரப்புத் துணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத், விஜயகாந்தை திட்டித் தீர்த்தார். அவரைச் சந்தித்தோம். 
'டாஸ்மாக் கடைகளுக்கு 'அம்மா டாஸ்மாக்’ என்று பெயர்சூட்டி முதல்வர் ஜெயலலிதா படத்தை ஒவ்வொரு கடையிலும் வைக்க​வேண்டும்’ என்று, திருப்பூர் கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேசியுள்ளாரே?'
''இதுவரை விஜயகாந்த் மட்டும்தான் பிதற்றி வந்தார். இப்போது பிரேமலதாவும் தொடங்கிவிட்டார்.
நீதியை நிலைநாட்டும் இடங்களில் எல்லாம், மகாத்மா காந்தி படம் இருக்கும். மனிதநேயம் குடியிருக்கும் இடங்களில், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். படம் இருக்கும். தன்மானம் உள்ள இடத்தில், தந்தை பெரியார் படம் இருக்கும். தமிழ்நாட்டை நேசிப்பவர்கள் இல்லங்களில், தமிழ்நாடு என பெயர் சூட்டிய அண்ணா படம் இருக்கும். பசித்த வயிற்றுக்கு பால் சோறுபோட்டு அன்னம் பாலிக்கும் இடத்தில் எல்லாம், எங்கள் அன்னபூரணி மாண்புமிகு புரட்சித்தலைவி டாக்டர் அம்மா படம்தான் இருக்கும். சரக்கு விற்கும் இடங்களில் தண்ணி அடிப்பவன் படத்தைத்தான் வைக்க வேண்டும். இதை அண்ணி புரிந்துகொள்வது நல்லது.''
'என் பேச்சு முன்ன, பின்னத்தான் இருக்கும். அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை. எனக்கு ஜெயிக்கத் தெரியும்’ என்று விஜயகாந்த் பேசியதை கவனித்தீர்களா?'
''அவர் என்ன பேசுகிறார் என்று எதிரில் இருப்பவர்களுக்கே புரியவில்லை. அவர் பேசவில்லை. அவரை ஒரு 'சக்தி’ பேசவைக்கிறது. ஓர் எதிர்க்கட்சித் தலைவர் புள்ளிவிவரங்களை அள்ளிக்கொட்டி ஆதாரங்களை அடுக்கிக்காட்டி ஆளும் அரசாங்கத்தை ஆற்றுப்படுத்த வேண்டும். வெந்ததைத் தின்று வாயில் வந்ததைப் பேசுகிற ஒரு பேட்டை பிஸ்தாவைப் போல, எதிர்க் கட்சித் தலைவர் பேசுகிறார். மக்கள் உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அம்மாவின் ஆட்சி மீது எந்தவிதமான குற்றச்சாட்டுகளையும் சொல்வதற்கு அவருக்கு வக்கும் இல்லை. துப்பும் இல்லை. இவர் எதிர்க் கட்சித் தலைவர் ஆனதே எங்கள் அம்மா போட்ட பிச்சை.

அவருக்கு ஜெயிக்கத் தெரிந்தது ஒரே ஒரு தொகுதியில்தான். அம்மாவின் கருணைப் பார்வையால் 29 இடங்களையும் எதிர்க் கட்சி அந்தஸ்தையும் பெற்றார். 'எனக்கு ஜெயிக்கத் தெரியும்’ என்று அவர் சொல்வதைக் கேட்டு, அவரது கட்சிக்காரர்களே சிரிக்கிறார்கள். நாங்கள் அதை வேடிக்கை பார்க்கிறோம்.''
'வரும் நாடாளுமன்றத் தேர்தலில் விஜயகாந்த் விஸ்வரூபத்தை பார்ப்பீர்கள்  என்கிறாரே? '
''எம்.எல்.ஏ.வாக இருந்தவர், எதிர்க் கட்சித் தலைவர் ஆனது எங்கள் அம்மாவின் விஸ்வரூபம். அகலிகை மீது ராமன் கால்வைத்ததால் சாபவிமோசனம் கிடைத்தது. காக்கையின் மீது அம்மா கால் வைத்ததால், அவர் எதிர்க் கட்சித் தலைவராகிவிட்டார். நாடாளுமன்றத் தேர்தல் இருக்கட்டும். உள்ளாட்சித் தேர்தலில் எங்கே போனார்?
இந்திய அரசியல் வரலாற்றிலேயே ஆளும் கட்சிக்கு 95 சதவீகித வெற்றி கிடைத்தது கடந்த உள்ளாட்சித் தேர்தலில்தான். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் கிடைக்காத இந்த வெற்றி, அம்மா ஆட்சிக் காலத்தில் சாத்தியமானது. கட்டிய மனைவிக்காகவும் மச்சானுக்காகவும் மட்டும் கட்சி நடத்துகிற புட்டிப் பேர்வழி, விஸ்வரூபம் எடுப்பதெல்லாம் நடக்கிற காரியமல்ல. கூவம், பாவத்தைப் போக்கினாலும் போக்கும்... கள்ளிப்பால், கண் நோயை நீக்கினாலும் நீக்கும்... ஓலமிடும் கடல், ஊமை ஆனாலும் ஆகும். ஒரு நாளும் இனி தே.மு.தி.க தேறாது. அவர் அகந்தையின் உச்சியில் நின்று ஆரவாரம் செய்கிறார். இந்த மாயாஜாலப் பேர்வழி மண்ணைக் கவ்வும் நாள் வெகுதொலைவில் இல்லை.''
''எதிர்க் கட்சித் தலைவராக விஜயகாந்தின் செயல்பாடு எப்படி?''
''எதிர்க் கட்சித் தலைவர், நிழல் அமைச்சரவைக்குத் தலைமை தாங்குகிறவர். ஆளும் கட்சி கொண்டுவரும் தீர்மானங்களை நிறைவேற்ற ஆரோக்கியமான விவாதங்களை முன்வைக்க வேண்டியவர். ஆனால், இவர் அப்படிச் செய்கிறாரா? முல்லைப் பெரியாறு பிரச்னையில் தமிழகத்தின் உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது என்று காலத்தால் அழியாத தீர்மானத்தை அம்மா கொண்டுவந்தபோது, அதைக்கூட ஆதரிக்கும் மனோபாவம் இல்லாதவர்.
கோவை கருத்திருமன், பொன்னப்ப நாடார், அகிலமே ஆச்சரியப்படும் மாண்புமிகு அம்மா ஆகியோர் உட்கார்ந்த எதிர்க் கட்சி ஆசனத்தில் எதுவுமே தெரியாத ஒருவர் உட்கார்ந்திருப்பது தமிழகத்துக்கு இழுக்கு. இந்த அழுக்கும் இழுக்கும் எப்போது விலகும் என மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.''
- எஸ்.முத்துகிருஷ்ணன்
படம்: கே.ராஜசேகரன்

நாஞ்சில் சம்பத் இல்ல திருமண விழா: முதல்வர் ஜெயலலிதா நேரில் வாழ்த்து

அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத்தின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.  அவரது மகள் மதிவதனிக்கும், ஆனந்த் என்பவருக்கும் கடந்த சில தினங்களுக்கு முன்பு  திருமணம் நடைபெற்றது.  இவர்களது திருமண வரவேற்பு, சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸில் நேற்று நடைபெற்றது. இந்த திருமண வரவேற்பு விழாவிற்கு மாலை 4 மணிக்கு முதல்வர் ஜெயலலிதா வந்தார். அவரை நாஞ்சில் சம்பத் குடும்பத்தினர் மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர். மேடைக்கு வந்த முதல்வர் தயாராக இருந்த மாலைகளை எடுத்து மணமக்களிடம் கொடுத்தார். அவர்கள் மாலை மாற்றிக் கொண்டு முதல்வர் காலில் விழுந்து ஆசி பெற்றனர்.

May 5, 2013

ப்ளஸ் 2 தேர்வு முடிவுகளை எந்தெந்த வலைத்தளங்களில் பார்க்கலாம் அரசு அறிவிப்பு


சென்னை, மே 3: ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் அரசு வலைத்தளங்களின் முகவரிகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்து உள்ளது.

இந்த ஆண்டு ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள், இணையத்தில் தனியார் வலைத்தளங்களில் வெளியிடப்படாது என்று அரசு அறிவித்துள்ளது.எனவே, அரசு வலைதளங்களின் வேகம் குறையாமல் இருக்க 16 சர்வர்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

தேர்வு முடிவுகள் வெளியாகும் அரசு வலைத்தளங்களின் இணைப்புகள்:

http://tnresults.nic.in
http://dge1.tn.nic.in
http://dge2.tn.nic.in
http://dge3. tn.nic.in

இந்த நான்கு வலைத்தளங்களிலும் மே 9-ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் http://dge3.tn.nic.in என்ற இணையதள முகவரியில் ஜி.பி.ஆர்.எஸ். வசதியுடன் செல்போனிலும் தேர்வு முடிவுகளைப் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

தேர்வு முடிவுகளை மாணவர்கள் உடனடியாக அறிந்துகொள்ளும் வகையில் தேசிய தகவல் மையத்தில் 16 சர்வர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவல் மையங்களிலும், மாநிலத்தில் உள்ள அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் மாணவ, மாணவியர் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

செல்போன், எஸ்.எம்.எஸ். மூலமும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளைத் தெரிந்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எஸ்.எம்.எஸ். மூலம் தேர்வு முடிவுகளைப் பெறுவதற்கான நடைமுறைகள் மே 8-ஆம் தேதி அறிவிக்கப்படும்.

மாணவர்கள் தங்களது பள்ளிகளில் மதிப்பெண்களைத் தெரிந்துகொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Apr 7, 2013

விடுதலைப் புலிகளால் 30 ஆண்டுகளாக முடியாததை, பாரதீய ஜனதா கட்சி தமிழ் ஈழம் அமைத்து கொடுத்துவிடும்-ஜஸ்வந்த் சிங்

இலங்கையில் திடீர் அலறல்

“இலங்கை அரசு சும்மா பார்த்துக் கொண்டு இருந்தால், இந்தியாவின் பாரதீய ஜனதா கட்சி, இலங்கைக்குள் தமிழர்களுக்கு தமிழ் ஈழம் ஒன்றை உருவாக்கி கொடுத்துவிட்டு போய்விடும். அதன்பின் நாம் எதுவும் செய்ய முடியாது” என்று அபாய எச்சரிக்கை கொடுத்துள்ளது, இலங்கை எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி.

இலங்கை ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர்களில் ஒருவரான லக்ஷ்மன் கிரியெல்ல, கொழும்புவில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இந்தக் கருத்தை தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து பேசுகையில், “பா.ஜ.க., இந்தியாவில் தற்போதுள்ள ஆளும் கட்சியான காங்கிரஸ் போன்ற ‘கொட்டாவி விடும்’ கட்சி அல்ல. அவர்கள் (பா.ஜ.க.) தீவிரவாத இந்துத்துவா அமைப்பு. அந்த கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஜஸ்வந்த் சிங், ‘இலங்கை அரசு இனியும் தமிழர்களுடன் விளையாடினால், எமது கட்சி அங்கே ஈழத்தை அமைத்து கொடுத்து விடும்’ என டில்லியில் வைத்து கடந்த வியாழக்கிழமை கூறியுள்ளார்.

இந்தக் கட்சியினர் சொல்வதை செய்யக் கூடியவர்கள். விடுதலைப் புலிகளால் 30 ஆண்டுகளாக சாதிக்க முடியாததை, பாரதீய ஜனதா கட்சி சாதித்து, ஈழத்தை அமைத்து கொடுத்துவிடும்.

பா.ஜ.க. ஈழம் உருவாக்கி கொடுக்கப்படும் என்று கூறுவதை நாம் லேசாக எடுத்துக் கொள்ள கூடாது. இந்தியாவின் தேசியக் கட்சி ஒன்று, அது ஆளும் கட்சியோ, எதிர்க் கட்சியோ, முதல் தடவையாக ஈழம் பற்றி பேசியிருப்பது ஒரு அபாய எச்சரிக்கை” என்றார்.

லக்ஷ்மன் கிரியெல்ல, “வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரீஸூக்கு சமீபத்தில் நான் நாடாளுமன்றத்தில் வைத்து கூறியதைதான் மீண்டும் கூறுகிறேன். இலங்கை தற்போது போகும் பாதை, சூடான், மற்றும் கிழக்கு திமோர் சென்ற அதே பாதை. அங்கெல்லாம் அரசுக்கு என்ன நடந்தது?

இப்போது, இந்தியாவின் பா.ஜ.க.வினால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. நாம் உடனடியாக இந்தியா தொடர்பான எமது வெளியுறவு கொள்கையில் மாற்றம் கொண்டுவர வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.


Mar 31, 2013

அன்று பராசக்தி... இன்று 'பல்டி'யேசக்தி!




'சாந்தா அல்லது பழனியப்பன்’ - இது கருணாநிதி  போட்ட முதல் நாடகம். 'டெசோ அல்லது புஸ்ஸோ’ - இது கருணாநிதி நடத்த ஆரம்பித்திருக்கும் இறுதி நாடகம். கோபாலபுரம் வீட்டு வாசலில் முதலமைச்சர் கார் வந்து நிற்க ஆரம்பித்தால், 'தமிழினத் தலைவர்’ நாற்காலியைப் புறவாசலில் கொண்டுபோய்ப் போட்டுவிடுவதும், அந்தக் கார் காணாமல் போனால், தூசி தட்டி 'தமிழினத் தலைவர்’ நாற்காலியை எடுத்துவந்து உட்காருவதும் கருணாநிதிக்குக் கைவந்த கலை. இந்த நூற்றாண்டின் வரலாற்றுச் சோகமான ஈழத் தமிழர் வாழ்க்கையைவைத்தும் அவர் இப்படி நாடகம் ஆடுவதைத் தான் பார்க்கச் சகிக்கவில்லை.
ஈழத்தில் கொடுமை நடந்து 100 ஆண்டுகள் ஆகிவிடவில்லை. மூன்று ஆண்டுகளே முழுமையாக முடியவில்லை. அந்த அவலம் அரங்கேறியபோது, தமிழ்நாட்டின் அதிகாரம் பொருந்திய நாற்காலியில் அமைச்சர்களோடு அமர்ந்து நாளரு பாராட்டு விழா, நித்தம் ஒரு கொண்டாட்டம், கவர்ச்சி ஆட்டம்பாட்டங்களைக் கண்டுகளித்தவர் கருணாநிதி. அப்போது அவரது கட்சியின் தயவை நம்பித்தான் மத்தியில் காங்கிரஸ் அரசாங்கம் இருந்தது. மன்மோகன், சோனியா, பிரணாப் முகர்ஜி ஆகிய மூன்று அதிகார மையங்களிடமும் அரை மணி நேரத்தில் தொடர்புகொண்டு, தான் நினைத்ததைச் சொல்லும் சக்தி கருணாநிதிக்கு இருந்தது. அப்போதெல்லாம் கேளாக் காதினராய், பாராக் கண்ணுடையவராய் இருந்துவிட்டு, 'என்னது... சிவாஜி செத்துட்டாரா?’ என்று மறதி நாயகன் கேட்பதுபோல, இப்போது 'ஈழத்தில் எவ்வளவு அவலம் பார்த்தாயா உடன்பிறப்பே!’ என்று கேட்பது சினிமாவுக்கு வேண்டுமானால் சிரிப்பைத் தரலாம். அரசியலில் இதற்குப் பெயர் துரோகம்... பச்சைத் துரோகம்!
 
முதலமைச்சராக இருக்கும்போது ஒரு பேச்சு, எதிர்க் கட்சி ஆனதும் மறுபேச்சு. நரம்பு இல்லாத நாக்கு எப்படி வேண்டு மானாலும் வளையும் என்பார் கள். ஆனால், இப்படியெல்லாம் வளையமுடியுமா என்று கருணாநிதியின் அறிக்கை களைப் பார்த்து அதிர்ச்சியடையத்தான் வேண்டும். கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக கருணாநிதி எதையெல்லாம் சொல்லிவந்தாரோ, அதை எல்லாம் கடந்த இரண்டு, மூன்று வாரங்களாக உல்டா அடிக்க ஆரம்பித்திருக்கிறார்.
''இலங்கையை சர்வாதிகாரப் பாதையில் செலுத்திக்கொண்டு இருக்கும் ராஜபக்ஷேவை, மனித உரிமைகள், மனிதநேயம் ஆகியவற்றுக்கு எதிராகப் பல்வேறு வகையான போர்க் குற்றங்களைப் புரிந்த சர்வதேசக் குற்றவாளி என உலக நாடுகள் பார்க்கின்றன. அவர் இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்று கேட்கும் அளவுக்குப் பேசி இருக்கிறார். சிங்களப் பேரினவாதத்தின் சின்னம் ராஜபக்ஷே. நமது இந்தியப் பேரரசு தற்போதாவது விழித்துக்கொண்டு ராஜபக்ஷே வின் சுய உருவத்தையும், குணத்தையும், நோக்கத்தையும் புரிந்துகொள்ள வேண்டும்'' என்று இப்போது அறிக்கைவிட்ட கருணாநிதிதான் தமிழ்நாடு சட்டசபையில் 'முதல்வராக’ இருந்தபோது, ''நாம் தமிழர்களைக் காப்பாற்ற அவர்களுடைய வாழ்வாதாரத்தை வளமாக்கப் பாடுபடப்போகிறோமா? அல்லது ராஜபக்ஷேவை குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தப்போகிறோமா? வாழ்வா தாரத்தைப் பெருக்க வேண்டுமானால், இன்றைக்கு இருக்கிற சிங்கள அரசின் மூலமாகத்தான் அதைச் செய்ய முடியும். அங்கே இருக்கிற தமிழர்களுக்கு நன்மை செய்ய வேண்டுமானால், நாம் இங்கே ஆத்திரப்பட்டோ அல்லது வெறுப்பு உணர்வுடனோ அங்குள்ள சிங்கள இனத்தினரைப் பற்றி ஒன்றைச் சொல்லி, அது வேறு விதமான விளைவுகளை உண்டாக்கினால் நல்லதல்ல. இலங்கையிலே உள்ள தமிழனைக் காப்பாற்ற வேண்டுமானால், சிங்களவர்கள் கோபத்தை அதிகமாக ஆக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எதிலும் ஒரு நீக்குப்போக்கு வேண்டும்'' என்று சொல்லிச் சமாளித்தவர்.
 
 
லட்சக்கணக்கான தமிழர்கள் கொத்துக் கொத்தாகக் கொலை செய்யப்பட்டது மே மாதம் 17-ம் தேதி. கருணாநிதி இப்படிச் சொன்னது ஜூலை 1. லட்சம் பேர் செத்ததைப் பார்த்து ஆத்திரம் வரவில்லை. அனுதாபம் கூட வரவில்லை. 'கோபப்படாதே’ என்று ஈழ தாகத்தின் வேரில் வெந்நீர் ஊற்றினார். அதற்கு ஒரே காரணம்தான். அதையும் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்குக் கொடுத்த பேட்டியில் அவர் ஒப்புக்கொண்டார். 'இலங்கைப் பிரச்னையில் மத்திய அரசின் நிலைக்கு மாறாக நடந்திருந்தால், என் ஆட்சியையே இழக்க வேண்டி வந்திருக்கும்’ என்பது பட்டவர்த்தனமான அவரது வாக்குமூலம். ''பதவி என் தோளில் கிடக்கும் துண்டு, கொள்கைதான் வேட்டி'' என்று பேசியது எல்லாம் ஊருக்குத்தானோ?!
''இலங்கை அரசு அறிவித்த போர் நிறுத்தத்தை உண்மைஎன்று நானும் நம்பி, இந்திய அரசும் அதை நம்பி எனக்குத் தெரிவித்ததால், உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றேன்'' என்று புதுக்கதை விட ஆரம்பித்துள்ளார் கருணாநிதி. அவரை இத்தனை சுலபமாக ஏமாற்ற முடியும் என்பதை அவரது எதிரிகளும் ஏற்க மாட்டார்கள். அவர் அப்போதும் இப்போதும் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுகிறார் என்பதே உண்மை. 'போரை நிறுத்திவிட்டோம்’ என்று ராஜபக்ஷே சொன்னதை, ப.சிதம்பரம் நம்பலாம். ப.சி. சொன்னதை மு.க-வும் நம்பலாம். தவறில்லை. ''அன்றைய தினம்தான் எட்டு இடங்களில் கொத்துக் குண்டுகளைப் போட் டார்கள்'' என்று விடுதலைப் புலிகளின் அரசியல் பொறுப் பாளர் நடேசன், பி.பி.சி. வானொலியில் அன்று இரவே கதறினாரே... அப்போது கருணாநிதி அளித்த பதில் என்ன? கருணாநிதியின் அறிவிப்பைப் பார்த்துதான் 'பாதுகாப்பான இடத்துக்கு’ அப்பாவி மக்கள் இடம்பெயர்ந்தார்கள். அந்த இடத்தில் குண்டு கள் போடப்பட்டு கொலைகள் நடந்தன. கருணாநிதி சொன்னதை நம்பியதால் தமிழர்கள் உயிரைவிட்டார்கள். ஆனால், இப்போது கருணாநிதி அறிக்கைவிட்டு ஊதுபத்தி ஏற்றுகிறார்.
 
 
 
''நீங்கள் போர் நிறுத்தம் செய்துவிட்டதாகச் சொல்லி  உண்ணாவிரத்தத்தை முடித்துவிட்டீர்கள். ஆனால், அன்றைய தினம்கூட குண்டுபோட்டுள்ளார்களே?'' என்று மனசாட்சிஉள்ள ஒரு பத்திரிகையாளன் கேட்டபோது, ''மழைவிட்டும் தூவானம் தொடர்வது வழக்கம்தான். இதைப் போலத்தான் இலங்கையிலே இப்போதும் தொடரும் விமானத் தாக்குதல்களைக் கருத வேண்டும்'' என்று கருணாநிதி சொன்ன வாசகம், மிகக் கொடூரமான சினிமா வில்லன்கள்கூடப் பேசாத வசனம். உரிமை மனோபாவம் கொண்டவன் உடலில் உடைகூட இருக்கக் கூடாது என்று நிர்வாணப்படுத்திக் கண்ணைக் கட்டி சிட்டுக்குருவிகளைப் போல சுட்டுக் கொன்ற காட்சிகளைப் போர் முடிந்த நான்கா வது மாதம் சேனல் 4 வெளிப்படுத்தியது. 'கொன்றுவிட்டார் கள்... கொடுமைப்படுத்தினார் கள்... சித்ரவதை செய்தார்கள்’ என்று அதுவரை சொல்லிக் கொண்டுதான் இருந்தார்கள். முதன்முதலாக அந்த வீடியோ காட்சிகள், அம்பலப்படுத்தி அதிரவைத்தன. அப்போதும் 'முதல்வர்’ கருணாநிதி, ''இந்தக் காட்சிகள் பழையவை. இப்போது எடுக்கப்பட்டவை அல்ல'' என்று எல்லாம் தெரிந்தவராகச் சொன்னார். ராஜ பக்ஷேவின் கண்துடைப்பு நாடகத்தில் தானும் ஒரு பாத்திர மாகப் பங்கேற்கும் வகையில் 10 பேரை அனுப்பிவைத்தார் கருணாநிதி. அவர்களை சென்னை விமான நிலையத்தில் வரவேற்கும் தினத்திலும், ''போரின்போதுதான் சித்ரவதை கள் நடந்தன. இப்போது அல்ல. இப்போது தமிழர்கள் யாரும் கடத்திச் செல்லப்படுவது இல்லை'' என்றார். அதாவது, இலங்கை அரசாங்கத்தை, ராஜபக்ஷேவைக் குற்றம்சாட்டி யார் கேள்வி கேட்டாலும் கருணாநிதிக்குச் சுருக்கென்றது. அதனால்தான் ராஜபக்ஷேவும் மன்மோகனும் பதில் சொல்ல வேண்டிய கேள்விகளுக்கு எல்லாம் கருணா நிதியே வலியப் போய் பதில் சொன்னார். இந்த அதீத ஆர்வத்துக்கு ஒரு பின்னணி இருந்தது. இலங்கையில் நடந்த அனைத்தும் அவருக்கு முன்கூட்டியே சொல்லப்பட்டன.
 
''இறுதிப் போர் நடந்த காலகட்டத்தில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே அதிகாரப்பூர்வமற்ற முறையில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஒரு குழுவை அமைத்தோம். எங்கள் நாட்டின் சார்பில் நானும் பசில் ராஜபக்ஷே, லலித் வீரதுங்க ஆகிய மூவரும் இடம்பெற்றோம்.
இந்தியாவின் சார்பில் எம்.கே.நாராயணன், சிவசங்கர்மேனன், விஜய்சிங் ஆகிய மூவரும் இருந்தார்கள்'' என்று கோத்த பய ராஜபக்ஷே சொன்னார். போர் நடந்த காலகட்டத்தில் கருணாநிதியை எம்.கே.நாராயணன் எத்தனையோ தடவை சந்தித்தார். இலங்கை போய்விட்டு இங்கே வருவார். அல்லது கருணாநிதியைப் பார்த்துவிட்டு அங்கே போவார். போரை வழி நடத்திய ஒருவர் தன்னை அடிக்கடி வந்து சந்திக்கிறாரே என்று அப்போதாவது கருணாநிதிக்குக் குற்றவுணர்ச்சி வந்திருக்க வேண்டும். 'போர் நிறுத்தம் செய்வதற்கு இந்தியா முயற்சிக் காவிட்டால், உங்களுக்குத் தரும் ஆதரவை வாபஸ் பெறுவேன்’ என்று மானஸ்தர் சொல்லி இருக்க வேண்டும்.
 
''போர் நிறுத்தம் செய்யச் சொல்வது எங்களது வேலை அல்ல'' என்று கருணாநிதி வீட்டு வாசலில் நின்றுகொண்டு அன்றைய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி சொன்னபோதாவது, கருணாநிதிக்கு ஆத்திரம் வந்திருக்க வேண்டும். ''அங்கே போர் முடிவுக்கு வரப்போகிறது'' என்று சந்தோஷ அறிவிப்பை நாடாளுமன்றத்தில் பிரணாப் வெளியிட்டபோதாவது, கோபம் வந்திருக்க வேண்டும். ''ராஜபக்ஷே என்ன முடிவெடுத்தாலும் இந்தியா வழக்கம்போல ஆதரிக்கும். இந்தியாவின் போரை நாங்கள் நடத்தினோம் என்று ராஜபக்ஷே சொன்னது ஒருவகையில் சரியானதுதான்'' என்று சிவசங்கர் மேனன் சொன்னபோதாவது, அவமானம் வந்திருக்க வேண்டும். இத்தனை கழுத்தறுப்புகளையும் மறைப்பதற்கு டெசோ ஷோவை கருணாநிதி இப்போது ஆரம்பிக்கிறார்.
போர் உச்சகட்டத்தில் இருந்த போது, ''முதல்வர் கருணாநிதி யின் உயிருக்கு விடுதலைப் புலிகளால் ஆபத்து'' என்று சென்னை போலீஸ் கமிஷனரை வைத்து அறிக்கை விடவைத்து, முத்துக்குமார் உள்ளிட்ட 17 தமிழ்த் தியாகிகள் தங்களது தேகங்களை ஈழத் தாய்க்கு அர்ப்பணித்தபோது வேடிக்கை பார்த்ததுடன், ''அவர்கள் ஈழத் தமிழர்களுக்காகத் தீக்குளிக்கவில்லை... பொண்டாட்டியிடம் தகராறு. அதனால் தீக்குளித்தனர்'' என்று கொச்சைப்படுத்தும் காரியத்தை போலீஸ்காரர்களை வைத்து முடுக்கிவிட்டு, தமிழ்நாடு ஒரே உணர்வில் இருக்கிறது என்பதைக் காட்ட கடையடைப்பு நடத்தப் பட்டபோது, ''இது சட்டப்படி குற்றம். கடையை அடைக்கச் சொன்னால் தேசப் பாதுகாப்புச் சட்டப்படி கைது செய்வோம்'' என்று மிரட்டல் விடுத்து,  பிரபாகரன் படத்தைப் பார்த்தாலே கிழிக்கும் வேலையை போலீஸாருக்குக் கொடுத்து... இப்படிச் செய்த அனைத்துப் பாவங்களுக்கும் இப்போது பரிகாரம் தேட நினைக்கிறார் கருணாநிதி.
 
  
சென்னையில் இருந்த இலங் கைத் தூதரக வட்டாரத்துக்கும் அன்றைய தி.மு.க. ஆட்சியின் போலீஸ் உளவுத் துறைக் கும் இருந்த பிரிக்க முடியாத பாசத்தை கருணாநிதி உணரத் தவறியதன் விளைவுதான், இன்று நித்தமும் உடன்பிறப்பு களுக்குக் கடிதம் எழுதியாக வேண்டிய அவஸ்தையைக் கொடுக்கிறது. உயிரோடு வந்த பாட்டி பார்வதியை, அநாதை யாக வானத்தில் திருப்பி அனுப்பிய சோகத்தை பேரன் பாலச்சந்திரன் படம் பார்த்து அறிக்கை வெளியிட்டுப் போக்கியாக வேண்டியிருக் கிறது. ''பாவிகளின் கொலை வெறிக்குப் பலியான பாலகன் பாலச்சந்திரன்'' என்று இன்று கண்ணீர்க் கவிதை வடிப்பவர், ''விடுதலைப் புலிகள் கல்லறை கள் கட்டுவதில் காலம் கழித்து விட்டார்கள்'' என்று கிண்டல் அடித்ததும், ''இன்று அனை வரும் ஒன்று சேர்ந்து போராடுவோம்'' என்பவர், அன்று, ''ஈழ ஆதரவாளர்கள் அனைவரும் கடல் வழியாகப் போய் போராட வேண்டியதுதானே. நான் கரையில் இருந்து கண்டுகளிப்பேன்'' என்று வயிற்றெரிச் சலைக் கொட்டியதும் தமிழன் மறக்கக் கூடாத வாக்குமூலங்கள்.

ஊழல் வழக்கில் ஏ.சி முருகேசன் தன் கையைப் பிடித்துத் தூக்கியதால் ஏற்பட்ட சிவப்புக் காய்ப்பை 100 வீடியோ கேமராக்களுக்கு முன்னால் காட்ட வேண்டுமானால், பாளையங்கோட்டை சிறையில் பல்லி ஓடியதையே 50 ஆண்டுகள் சொல்ல முடியுமானால், வளரும் கருவை வயிற்றில் இருந்து எடுத்துப் பொசுக்கிய காட்டுமிராண்டிக் கூட்டத்தைப் பற்றி இன்னும் எத்தனை ஆண்டுகள் சொல்லித் தொலைத்தாலும் ஆத்திரம் அடங்காது. அந்த சோகத்தில்கூட அரசியல் செய்ய நினைப்பது, அந்தக் கொடூரத்தை விடக் கொடூரமானது. காங்கிரஸை மிரட்டுவதற்கு, அல்லது காங்கிரஸ் தங்களை விரட்டிவிட்டால் ஈழ ஆதரவுக் கட்சிகளைக்கொண்ட கூட்டணி அமைப்பதற்கு, அதுவும் இல்லா விட்டால் ஈழப் பிரச்னையை எதிர் அணியினர் பயன்படுத்தாமல் இருப்பதற்கு... என்று சாவு வீட்டிலும் லாபநஷ்டங்களுக்கு, கடல் தாண்டிய சொந்தங்களின் சோகத்தை முதலீடு ஆக்குவது ஆபத்தானது. தன்னுடைய கடந்த காலத் தவறுகளை மறைக்க இன்றைக்கு கருணாநிதிக்குத் தேவை முகமூடி. ஏற்கெனவே வீரமணி, திருமாவளவன் ஆகிய இருவரும் சிக்கிவிட்டார்கள். பெரியாரைக் காப்பாற்றுவதைவிட, அம்பேத்கர் புகழைப் பரப்புவதைவிட இவர்களுக்கு கருணாநிதியை நியாயப்படுத்துவதே முழு நேரத் தொழிலாக மாறிவிட்டது. ''ஓட்டுக்காக எவனும் எதையும் செய்வான். யார் காலையும் நக்குவான். இதற்கு யாரும் விதிவிலக்கு இல்லை!'' என்று தந்தை பெரியார் சொன்னார்.
அதற்காக, ஈழத் தமிழர் பிணங்களையுமா?
 
நன்றி ஆனந்த விகடன்