Dec 6, 2011

இரு மாநிலங்களுக்கிடையே வன்முறையைத் தூண்டும் கேரள அரசை டிஸ்மிஸ் செய்க- தமிழக பாஜக கோரிக்கை


 தமிழக, கேரள மக்களுக்கிடையே துவேஷத்தை அதிகரிக்கும் வகையிலும், குரோதத்தை அதிகரிக்கும் வகையிலும் நடைபெற்று வரும் வன்முறைச் செயல்களைத் தடுக்காமல் ஊக்கமளித்து வரும் கேரள அரசை உடனடியாக மத்திய அரசு டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துல்லார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் பொன்.ராதாகிருஷ்ணன். அப்போது அவர் கூறுகையில், முல்லைப் பெரியாறு விவகாரத்தில் மக்களின் உணர்ச்சியைத் தூண்டி விட்டு தமிழர்கள் மீதான தாக்குதலை ஊக்குவித்து வருகிறது கேரள அரசு. தேசிய ஒருமைப்பாட்டை நிலைகுலையச் செய்து வரும் கேரள அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.


முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக கட்சிகள் ஓரணியில் நிற்கின்றன என்பதை உறுதி செய்யும் வகையி்ல தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். 

சபரிமலைக்குச் செல்லும் தமிழக ஐயப்ப பக்தர்கள் யாருக்கேனும் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு கேரள அரசுதான் பொறுப்பாகும். மேலும், கேரள அரசு மோசமான விளைவுகளையும் சந்தித்தாக வேண்டும்.

முல்லைப் பெரியாறு அணைக்கு மத்திய பாதுகாப்புப் படையினரை, தேவைப்பட்டால் ராணுவத்தையும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த வேண்டும்.

கள நிலவரங்களை ஆராயவும், மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் பாஜக மாநிலத் துணைத் தலைவர் திருமலை தலைமையில் ஐவர் குழு நாளை கம்பம் செல்கிறது என்றார் பொன்.ராதாகிருஷ்ணன்.