Jun 25, 2014

உணவு யுத்தம்!-11

‘கரகாட்டக்காரன்’ வாழைப்பழம்!
மதுரை செல்லும் ரயிலில் ஒரு கல்லூரி மாணவனுடன் பயணம் செய்தேன். எதிர் சீட்டில், காதில் ஹெட்போன் மாட்டியபடியே பாட்டுக் கேட்டுக்கொண்டிருந்தான். ரயில் கிளம்பும் நேரத்தில் சிவப்பு நிற உடை அணிந்த பீட்சா விற்பனையாளன் ஒருவன் வேகமாக வந்து அந்தப் பையனுக்கு பீட்சா டெலிவரி செய்தான். அந்த மாணவன் புன்சிரிப்புடன், ‘ஆர்டர் கொடுத்தால் ரயிலிலும் வந்து விநியோகம் செய்வார்கள்’ என்றபடி பீட்சாவை வாங்கினான்.
‘இதுதான் உனது வழக்கமான இரவு உணவா?’ என்று கேட்டேன்.
‘வீட்டில் இருந்தால் இரவு ஃபிரைடு ரைஸ், சப்பாத்தி சாப்பிடுவேன். வெளியூர் கிளம்பினால் இப்படி பீட்சா ஆர்டர் பண்ணி சாப்பிடுவேன், அல்லது பழங்கள் சாப்பிடுவேன்’ என்றான்.
‘என்ன பழம்?’ என்று கேட்டேன்
‘ஆப்பிள் அல்லது ஆரஞ்சு சாப்பிடுவேன்’ என்றான்.

‘அது வயதானவர்கள் சாப்பிடும் பழம்’ என்று சொல்லிச் சிரித்தான்.
வாழைப்பழம் வயதானவர்கள் சாப்பிடும் பொருள் என்ற எண்ணம் இந்தப் பையன் மனதில் எப்படி வந்தது? பழம் சாப்பிடுவதற்கு வயது ஒரு பொருட்டா என்ன?
அந்தப் பையன் சொன்னது உண்மை. அந்த ரயில் பெட்டியில் இருந்தவர்களில் 16 வயது முதல் 30 வரை இருந்த ஒருவர்கூட வாழைப்பழம் சாப்பிடவில்லை. இதை எல்லாம் எப்படிச் சாப்பிடுகிறார்கள் என்பது போலத்தான் அவர்கள் பார்த்தார்கள்.
வாழைப்பழத்தின் மீது இளம் தலைமுறைக்கு ஏன் இத்தனை வெறுப்பு, அல்லது இளக்காரம்? வாழைப்பழம் சாப்பிடும் பழக்கத்தை இளம்தலைமுறை அறிந்திருக்கவில்லை என்பதுதான் உண்மை. அதை ஊதுபத்தி ஸ்டாண்ட் என்று சிலர் கேலி செய்வதையும் பார்க்கிறோம்.
‘கரகாட்டக்காரன் படத்தில் கவுண்டமணி செந்தில் வாழைப்பழ காமெடி நினைவிருக்கிறதில்லையா? அது வெறும் நகைச்சுவை காட்சி மட்டுமில்லை. ஒரு ரூபாய்க்கு இரண்டு வாழைப்பழம் விற்கப்பட்ட காலத்தை அது நினைவுபடுத்துகிறது. வாழைப்பழம் வாங்க வேண்டும் என்றால் பெட்டிக்கடைக்குப் போக வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. இத்தோடு அன்றாடம் வாழைப்பழம் சாப்பிடுகிற பழக்கம் உள்ளவர்களுக்குப் பழம் சாப்பிடாவிட்டால் நிறைவு வராது. அதற்காக உணர்ச்சிவசப்பட்டு சண்டையிடுவார்கள் என்பதையும் அடையாளம் காட்டுகிறது.
1989-ல் ‘கரகாட்டக்காரன்’ வெளியானது. இந்த 25 வருடங்களில் வாழைப்பழத்தின் விலை 12 மடங்கு ஏறியிருக்கிறது. இன்றைக்கு ஒரு வாழைப்பழம் ஐந்து ரூபாய் முதல் எட்டு ரூபாய் வரை மாநகரில் விற்கப்படுகிறது. பெட்டிக்கடைகளில் நாட்டு வாழைப்பழங்களைக் காணமுடிவது இல்லை. குளிர்பான நிறுவனங்களும் சிப்ஸ் கம்பெனிகளும் பெட்டிக்கடைகளை ஆக்கிரமித்துவிட்டன.
பகட்டான கூல் ட்ரிங்குகளுக்குப் பொருத்தமில்லாமல் வாழைப்பழங்கள் உடன் விற்கப்படுவதைப் பன்னாட்டு கம்பெனிகள் விரும்புவதில்லை. ‘வாழைக் குலைகளைத் தொங்கவிட்டால் விளம்பரப் பலகையை மறைத்துவிடுகிறது’ என குளிர்பான கம்பெனியினர் தடுத்துவிடுகிறார்கள் என்றார் ஒரு பெட்டிக்கடைக்காரர்.
வீதியில் தள்ளுவண்டியில் வாழைப்பழம் விற்பவரிடம் பேசியபோது, ”முன்பு போல நாட்டு வாழைப்பழம் வருவது இல்லை.  பொதுவாக மக்கள் நீளமாக உள்ள பச்சை பழம் சாப்பிடுவதை விரும்புகிறார்கள். பெரும்பான்மை இளைஞர்களுக்கு வாழைப்பழம் என்றாலே பிடிப்பது இல்லை. காரணம், அது வெளிநாட்டுப் பழமில்லையே… நாட்டு வாழைப்பழத்தை விரும்பிக் கேட்பவர்கள் வயசானவர்கள் மட்டுமே” என்றார்
கோயில் கடைகளில் விற்பதற்கு என்றே தனியாக வாழைப் பழங்களை விளைவிக்கிறார்கள் போலும். அங்கே வாங்கிய வாழைப்பழங்களை உரித்துச் சாப்பிட்டால் அழி ரப்பரைத் தின்பது போல சுவையற்று இருக்கிறது. அதை சாப்பிடும் கடவுள்கள் நிலை பாவம்!
திண்டுக்கல்லுக்குப் போயிருந்தபோது மலைவாழைப்பழம் வாங்க கடைக்குப் போனேன். எத்தனை கிலோ வேண்டும் என்று கேட்டார்கள். எண்ணிக்கையில்தானே வாழைப்பழம் வாங்குவோம் எனக் கேட்டால் இப்போது கிலோவுக்கு மாறிவிட்டோம் என்கிறார்கள்.
கீழ் பழநி மலை, தாண்டிக்குடி மற்றும் சிறுமலையில் மலை வாழை விளைச்சல் அதிகம் காணப்படுகிறது. உலகில் வேறு எந்தப் பகுதியிலும் இதுபோன்ற ருசியான ரகம் கிடையாது என்பதால் இதன் சிறப்பு கருதி உலக ரக உரிமம் பெறப்பட்டிருக்கிறது.
மருத்துவ குணம் நிறைந்த இந்தப் பழத்துக்குச் சந்தையில் அதிக கிராக்கி நிலவுவதுடன், மலைப்பழம் என போலியான பழங்கள் அதிகம் விற்கப்படுகின்றன. உண்மையான மலை வாழைப் பழம் 15 நாள் ஆனாலும் கெடாது. தோல் சுருங்குமே அன்றி சுவை குறையாது. போலிப் பழங்கள் எளிதில் அழுகிவிடுகின்றன.
உலகெங்கும் 300-க்கும் மேற்பட்ட வாழை ரகங்கள் இருக்கின்றன. நம் ஊரிலே 30-க்கும் மேற்பட்ட வாழைப்பழ ரகங்கள் சந்தையில் கிடைத்தன. இன்று கற்பூரவல்லி, மலைவாழை, பேயன், சக்கை, ரஸ்தாளி, பச்சை, பெங்களூரு மஞ்சள், நேந்திரன், மொந்தன், பூவன், கதலி, ஏலரிசி, மோரீஸ், செவ்வாழை, மட்டி, சிங்கன் ஆகியவையே சந்தையில் கிடைக்கின்றன.
வாழைப்பழத்தின் சுவையும் அளவும் மாறிக்கொண்டேயிருக்கிறது. என்ன காரணம் என விவரம் அறிந்த பழவியாபாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘அசிட்டிலீன் வாயு அல்லது கால்சியம் கார்பைட் மூலம் பழுக்க வைக்கப்படுவது முக்கியக் காரணம். தண்ணீர், நிலம் இரண்டும் சீர்கெட்டுப்போனது இன்னொரு காரணம்’ என்றார்.
இந்தியாவில் ஆண்டு தோறும் 29,77,991 ஆயிரம் டன் வாழைப்பழம் உற்பத்தி செய்யப்படுகிறது. அதில் தமிழகமே முன்னணியில் உள்ளது. இந்தியாவில் விளையும் வாழைப்பழங்கள், துபாய், ஓமன், கொரியா, ஈரான், குவைத், மாலத்தீவு போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
வாழை, வெறும் பழம் மட்டுமில்லை. உலகையே ஆட்டுவைத்த பழம். இதற்காக கரீபியத் தீவுகளிலும் லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் எவ்வளவு போராட்டங்கள், உள்நாட்டுப் போர்கள் நடந்திருக்கின்றன… எவ்வளவு பேர் இறந்திருக்கிறார்கள்? இந்த வரலாறு இன்னமும் முழுமையாக வெளிச்சத்துக்கு வரவில்லை. வாழைப்பழங்களுக்கான போர் நம் காலத்தின் முக்கியமான உணவு யுத்தம். அதைத் தெரிந்து கொள்வதற்கு முன்பாக வாழையின் வரலாற்றை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
வாழை முதன்முதலாக பப்புவா நியூ கினியில் பயிரிடப்பட்டது என்கிறார்கள். இதற்கு ஆதாரமாக நியூகினியாவின் குக் பகுதியில் அகழ்வாராய்ச்சியில் தடயங்கள் கிடைத்திருக்கின்றன. அதைக்கொண்டு அங்கே வாழை கி.மு 5000 முதலே பயிரிடப்பட்டிருக்கக்கூடும் என்கிறார்கள். இந்தியாவுக்கு எப்போது வந்தது என்ற காலக்கணக்கு தெரியவில்லை.
ஆனால் புத்தர் காலத்திலேயே வாழைப்பழம் இருந்திருப்பதாக பௌத்த நூல்கள் கூறுகின்றன. மொகலாயர்கள் இந்தியாவிலிருந்து வாழையை மத்திய கிழக்குப் பகுதிக்குக் கொண்டு சென்றனர். அதன் பின்பு அரேபிய வணிகர்கள் வாழையை ஆப்பிரிக்கா எங்கும் பரப்பினர். போர்ச்சுகீசிய வியாபாரிகள் மூலமாக வாழை அமெரிக்காவுக்குச் சென்றது.
கி.பி 1402-ல் போர்ச்சுகீசிய மாலுமிகள் ஆப்பிரிக்காவில் கிடைத்த வாழைப்பழத்தை கனாரி தீவுக்கு எடுத்துச் சென்று பயிரிட்டார்கள். கி.பி 1516-ம் வருஷம் தாமஸ் டி பெர்லாங்கோ என்ற போர்ச்சுகீசிய பாதிரியார் கனாரி தீவிலிருந்து வாழை மரத்தை, மேற்கிந்திய தீவுகளில் ஒன்றான சாண்டோ டொமிங்கோ என்ற இடத்துக்குக் கொண்டுசென்றார். இங்கிருந்து மத்திய அமெரிக்க தேசங்களுக்கு வாழை பரவியது. இப்படித்தான் ஒவ்வொரு நாடாக வாழை பரவியது.
வெப்பமண்டல நாடுகளில் வாழை அதிகம் விளையக்கூடியது. வாழைப்பழத்தில் கார்போஹைடிரேட், புரதம், சர்க்கரை சத்து, இரும்புச் சத்து, பொட்டாசியம், சோடியம், பாஸ்பரஸ் ஆகியவை அடங்கியுள்ளன. நார்ச்சத்தும், ரிபோஃபிளேவின், தயாமின் முதலான வைட்டமின்களும் உள்ளன. வாழைப்பழத்தில் இயற்கையாகவே சுக்ரோஸ், குளூக்கோஸ், ஃப்ரக்டோஸ் உள்ளதால் வாழைப்பழம் தின்றவுடனே உடலுக்கு சக்தி கிடைக்கிறது. இதன் காரணமாகவே விளையாட்டு வீரர்கள் விரும்பி உண்ணுகிறார்கள்.
வாழையின் ஆங்கிலப் பெயரான ‘பனானா’  என்பது ஸ்பானிஷ் அல்லது போர்ச்சுகீசிய மொழியிலிருந்து உருவாகியிருக்கலாம் என்று கூறுகிறார்கள். இதன் அறிவியல் பெயரான ‘மூசா’ அரபுப் பெயரிலிருந்து உருவானது. வாழைப்பழத்தின் மற்றொரு ஆங்கிலப் பெயரான Plantain  என்பது ஸ்பெயின் மொழியில் வாழைப்பழத்தின் பெயரான ‘Platano’ விலிருந்து மருவியது.
வாழை சிறந்த நஞ்சு முறிப்பான் ஆகும். கிராமப் பகுதிகளில் யாரையாவது பாம்பு கடித்துவிட்டால் உடனடியாக வாழைச்சாறு பருகக் கொடுப்பார்கள். நஞ்சு முறிந்துவிடும். இது போலவே நாம் சாப்பிடும் உணவில் நஞ்சு கலந்திருந்தாலும் முறித்துவிடும் என்பதாலே வாழை இலையில் உண்ணுகிறோம்.
ஒவ்வொரு வாழைப்பழ ரகத்துக்கும் எப்படி பெயர் வந்தது என்பதற்குக்கூட கதையிருக்கிறது. ரஸ்தாலி எனப்படும் கோழிக்கோடு பழம், கப்பலில் ஏற்றிக்கொண்டு போய் இலங்கை உள்ளிட்ட நாடுகளில் விற்பனை செய்யப்பட்டது. அதன் காரணமாகவே இலங்கையில் அதன் பெயர் கப்பல்பழம்.
இப்போது சந்தையில் கிடைக்கக்கூடிய பெங்களூரு வாழைப்பழம் எனும் பெரிய மஞ்சள் வாழைப்பழம் மரபணு மாற்றம் செய்த பழமாகும். அதைச் சாப்பிடுவதால் சைனஸ் மற்றும் சுவாச ஒவ்வாமை நோய்கள், வயிற்றுக் கோளாறுகள் உருவாகின்றன. ஆகவே மரபணு மாற்று செய்த வாழைப்பழங்களை சாப்பிடாதீர்கள் என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.
வாழையில் ஏற்படும் பூச்சிக் கொல்லிகளை அழிப்பதற்கு பதிலாகப் பூச்சிகளைக் கொல்லும் விஷச்சத்தை வாழைமரத்தின் மரபணுவில் செலுத்திவிடுகிறார்கள். இதைத்தான் பி.டி. வாழை என்று அழைக்கிறார்கள். இப்படி உருவாக்கப்படும் வாழை மரம் ஒருமுறை மட்டுமே பழம் கொடுக்கும். வாழையடி வாழையாக வளராது. ஆகவே, வாழையின் இயல்பான தன்மைகள் மாறிவிடுகின்றன என்கிறார்கள் சுற்றுச்சூழல் அறிஞர்கள்.
உலகிலேயே அதிகமாக வாழைப்பழத்தை உபயோகிக்கும் நாடு அமெரிக்கா. அதற்கு அடுத்தபடி ஜெர்மனி. உகாண்டாவில்தான் தனி நபர் அதிகமான அளவு வாழைப்பழங்களைச் சாப்பிடுகிறார்கள். அதாவது, ஒரு நாளைக்கு சராசரியாக ஏழு முதல் 11 வாழைப்பழங்கள் சாப்பிடுகிறார்கள். அவர்களின் விருப்ப உணவான மதோகே வாழைப்பழத்தைக் கொண்டுதான் தயாரிக்கப்படுகிறது.
வாழைநாரின் இழையைப் பிரித்தெடுத்து கயிறு செய்கிறார்கள். கப்பல்களில் பயன்படுத்தப்படும் இவ்வகை கயிறுகள் கடல்நீரின் உப்பால் அரிக்கப்படாத தன்மை கொண்டவை. வாழைநாரில் உருவாக்கப்படும் கார்க், கப்பல்களில் எண்ணெய் கசிந்தால் அடைப்பதற்குப் பயன்படுகிறது. கிராமப்புறங்களில் எண்ணெய் டின்களில் வாழைத்தார் வைத்து அடைத்திருப்பது இந்தக் காரணத்தால்தான்.
தஞ்சை கல்வெட்டுகள் பற்றி முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியம் அவர்கள் ஓர் ஆய்வுக் கட்டுரையில் வாழைப்பழம் பற்றிய சோழ மாமன்னன் ராஜராஜன் கல்வெட்டைக் குறிப்பிடுகிறார். அந்தக் கல்வெட்டு கோயிலுக்கு வாழைப்பழம் வாங்க வைப்புநிதி சேகரிக்கப்பட்டதை விவரிக்கிறது.
விநாயகருக்கு நிவேதனம் செய்ய தினந்தோறும் 150 வாழைப்பழம் வழங்குவதற்கு 360 காசுகளை முதலாகப் போட்டு வைப்புத் தொகை வைத்திருந்தான் சோழன்.
ஒரு நாள் நிவேதனத்துக்கு 150 பழங்கள் தேவை என்றால் ஆண்டொன்றுக்கு 54,000  பழங்கள் தேவை. அன்றைய காலகட்டத்தில் வாழைப்பழ விலை ஒரு காசுக்கு 1,200 பழங்கள். 360 காசுகளுக்கு ஒரு வருடத்துக்கான வட்டித் தொகை 45 காசுகள் என்றால் வட்டி விகிதம் 12.5% என்று தெரிகிறது.
மன்னனுடைய இந்த ஏற்பாட்டின்படி மூலதனம் அப்படியே இருக்கும். ஆண்டு வட்டி வருமானத்தை மட்டும் செலவுக்கு எடுத்துக்கொள்வார்கள். இதுபோல சோழர் காலத்தில் பருப்பு, மிளகு, சீரகம், சர்க்கரை, நெய், உப்பு, வாழை இலை, வெற்றிலை, பாக்கு, கற்பூரம், விறகு ஆகிய பொருட்களின் விலைகளும் எவ்வாறு கட்டுப்பாட்டுக்குள் இருந்தன என்கிறார் குடவாயில் பாலசுப்ரமணியம்.
இது ஒரு வாழைப்பழ விஷயத்தில்கூட அரசு எந்த அளவுக்கு அக்கறை காட்டியிருக்கிறது என்பதற்கான உதாரணம்!

No comments: