இந்தியாவின் முதல் பேக்கரி!
வேட்டை சமூகத்தில் இருந்து வேளாண் சமூகமாக மனிதன் மாறிய காலத்திலேயே, ரொட்டி சாப்பிடும் வழக்கம் உருவாகிவிட்டது.
ரோமானியர்கள் ரொட்டி தயாரிப்பதில் முன்னோடியாக இருந்த தகவல்களை அவர்களின் வரலாற்று நூல்களில் காண முடிகிறது. கி.மு. 168-ல் ரோமில் அடுமனை தொழிலாளர்களின் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. அந்த நாட்களில் செய்யப்பட்ட ரொட்டியும், இன்று நாம் சாப்பிடும் ரொட்டியும் ஒன்று இல்லை. அப்போது அவை அரைத்த தானியத்துடன் உப்பும் வெண்ணெய்யும் சேர்த்து செய்யப்பட்டவை. மாவு அரைக்கும் இயந்திரங்கள் உருவாகாத காலம் என்பதால், ரொட்டி கடினமானதாக இருந்தது. ஏதென்ஸ் நகரின் சாலையில் வைத்து ரொட்டிகள் கூவி விற்கப்பட்டன.
சிறந்த ரொட்டி செய்பவர்களுக்குப் பெரிய கிராக்கி இருந்தது. விருந்துகளில் ரொட்டி செய்வதற்காக வெளிநாடுகளில் இருந்து ஆட்கள் வரவழைக்கப்பட்டனர், ரொட்டியின் அளவு, எடை, விலை ஆகியவற்றை முறைப்படுத்த வேண்டும் என்று மக்கள் புகார் தெரிவித்தார்கள். இதற்காக 1266-ல் ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டது.
அதன் முன்பு வரை ரொட்டியின் விலை என்பது ரொட்டி சுடுபவரின் சம்பளம், அவரது வீட்டுச் செலவு, மனைவியின் செலவுகள், கடை நிர்வாகச் செலவு, எரியும் விறகுகளுக்கான பணம், வீட்டு நாய்களின் உணவு ஆகிய அத்தனையும் சேர்த்தே நிர்ணயிக்கப்படும்.
அதை எதிர்த்த மக்கள், ரொட்டி விலையை முறைப்படுத்தக் கோரி போராடினார்கள். 13-ம் நூற்றாண்டில் ரொட்டியின் தரமும் விலையும் வரையறை செய்யப்பட்டன. ஆனாலும், முழுமையாக அதை நடைமுறைப்படுத்த முடியவில்லை.
1718-ல் ரொட்டி தயாரிப்பதற்காக சிறப்புப் பள்ளி தொடங்கப்பட்டு, முறையான பயிற்சிகள் அளிக்கப்பட்டன. பயிற்சி பெற்ற ரொட்டி செய்பவர்கள் புது வகை ரொட்டிகளை உருவாக்கினார்கள். உணவு மேஜையில் எப்படி ரொட்டியைப் பரிமாற வேண்டும்… யாருக்கு எத்தனை ரொட்டிகள் வழங்கப்பட வேண்டும் என்ற ஒழுங்குமுறைகளும் உருவாக்கப்பட்டன.
ரஷ்யாவில் உப்பும் ரொட்டித்துண்டும் கொடுத்து வரவேற்பது சம்பிரதாயம். நோன்பு இருப்பவர்களுக்காக விசேஷமான ரொட்டிகள் தயாரிப்பது ஐரோப்பாவில் மரபு. உலகெங்கும் 1,000-க்கும் மேற்பட்ட விதங்களில் ரொட்டிகள் தயாரிக்கப்படுகின்றன.
ஆட்டோ ரோவெடர் என்ற அமெரிக்கர், மிசூரி மாகாணத்தைச் சேர்ந்தவர். இவர் 1928-ல் ஓர் இயந்திரத்தை உருவாக்கினார். அதன் மூலம் ரொட்டிகளைச் சரியான அளவில் துண்டுசெய்து ஒரு பாக்கெட்டில் அடைத்து விற்க முயன்றார். இயந்திரத்தால் துண்டிக்கப்பட்ட ரொட்டித் துண்டுகளைப் பற்றி பெரிய அளவில் விளம்பரம் செய்த ரோவெட்டர், 1928-ல் தனது விற்பனையைத் தொடங்கினார்.
துண்டாக்கப்பட்ட ரொட்டிகள் மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றன. இதைக் கொண்டு உடனடியாக சாண்ட்விச் செய்ய முடிகிறது என்பதால், அதன் விற்பனை பெருகியது. அப்படித்தான் துண்டிக்கப்பட்ட ரொட்டித் துண்டுகள் பாக்கெட்டில் விற்பனைசெய்வது உலகெங்கும் பரவியது.
17-ம் நூற்றாண்டுக்குப் பிறகு பேக்கரி தொழிலில் புதிய மாற்றங்கள் உருவாகின. அறிவியல் கண்டுபிடிப்புகளின் மூலமும், புதிய தொழில்நுட்பக் கருவிகளின் வருகையும் ரொட்டித் தயாரிப்பில் வளர்ச்சியை உருவாக்கின.
தொழில் புரட்சியின் முன்பு வரை, பிறந்தநாள் கொண்டாட்டங்கள் வசதியானவர்களுக்கு மட்டுமே உரியதாக இருந்தன. அவர்கள் மட்டுமே கேக் வெட்டி கொண்டாடினார்கள். தொழில் புரட்சியால் உருவான மாற்றங்களால், பேக்கரி தொழிலுக்குத் தேவையான ஈஸ்ட் தயாரிப்பு எளிதாகியது; மாவு அரைக்கும் இயந்திரங்கள் உருவானது. புதிய உபகரணங்களின் வருகை, கேக்குகளின் விலையை மலிவாக்கின. அதனால், ஏழை எளிய மக்களும் பிறந்தநாள் கொண்டாடத் தொடங்கினார்கள். அப்படித்தான் பிறந்தநாள் கொண்டாட்டம் பரவத் தொடங்கியது.
கேக் மற்றும் பிஸ்கட் வகைகளை உண்பதில் பிரெஞ்சுகாரர்களும் பெல்ஜியர்களும் இத்தாலியர் களும் மிக விருப்பம் கொண்டிருந்தார்கள். முதன்முதலாக பாரீஸில் விதவிதமான கேக்குகள் செய்து விற்கும் பேக்கரி தொடங்கப்பட்டது, அதன் வெற்றியே உலகெங்கும் பேக்கரிகள் உருவாகக் காரணமாகின.
பிறந்தநாளில் நாம் பாடும், ‘ஹேப்பி பர்த் டே டு யூ’ என்ற பாடலை இயற்றியவர்கள் மில்ட்ரெட் ஜே.ஹில், பட்ரி ஸ்மித் ஹில் என்ற சகோதரிகள். இவர்கள் அமெரிக்காவின் கென்டெகி மாநிலத்தில் பிறந்தவர்கள். இவர்கள் இதே மெட்டில், ‘குட் மார்னிங் டு ஆல்’ என்ற ஒரு பாடலை உருவாக்கினார்கள். அந்த மெட்டிலே, ‘ஹேப்பி பர்த் டே’ பாடப்பட்டது.
1893-ம் ஆண்டு முதன்முதலில் பிறந்தநாள் பாடல் வெளியிடப்பட்டிருந்தாலும், 1935-ம் ஆண்டுதான் காப்புரிமை பெற்றது. இன்று வரை அதன் காப்புரிமை நீடிக்கப்படுகிறது.
இதுகுறித்து அமெரிக்க நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நடைபெற்றது. தனி நிகழ்வுகளில் பிறந்தநாள் வாழ்த்துப் பாடுவதற்கு அனைவருக்கும் உரிமை இருக்கிறது. ஆனால், இதை வணிகரீதியாகப் பயன்படுத்தினால் அதற்கான உரிமைத் தொகை கொடுக்க வேண்டும் என்றது நீதிமன்றம்.
இந்த பாடலின் வருகைக்குப் பின்னரே கேக்குகளில், ‘ஹேப்பி பர்த் டே’ என எழுதப்படுவது வழக்கமானது.
இந்தியாவில் 100 ஆண்டுகளுக்கு முன்னதாகவே கேரளத்தில் பேக்கரி ஆரம்பிக்கப்பட்டது. 1880-ல் தலைச்சேரியைச் சேர்ந்த மாம்பள்ளி பாபு என்பவர் ராயல் பிஸ்கட் ஃபேக்டரி என ஒரு கடையைத் துவங்கினார். அப்போது இந்தியாவில் இரண்டே இரண்டு பேக்கரிகள் மட்டுமே இருந்தன. ஒன்று மேற்கு வங்கத்தில். அதை நடத்தியது ஒரு பிரிட்டிஷ்காரர். இந்தியரால் ஆரம்பிக்கப்பட்ட முதல் பேக்கரி தலைச்சேரியில்தான் ஆரம்பிக்கப்பட்டது என்கிறார்கள்.
அந்த பேக்கரிக்கு 1883-ம் ஆண்டு வருகை தந்த தேயிலைத் தோட்ட உரிமையாளரான முர்டாக் பிரௌன் என்ற வெள்ளைக்காரர் தனது குதிரை வண்டியை நிறுத்தி, கடையினுள் வந்து இங்கிலாந்தில் இருந்து தனக்கு அனுப்பி வைக்கப்பட்ட பிளம் கேக் ஒன்றைக் காட்டினார். ‘இதுபோல ஒன்றை செய்துத்தர முடியுமா?’ என விசாரித்தார்.
அதேபோல ஒரு கேக்கை சில தினங்களில் செய்து தந்தார் மாம்பள்ளி பாபு. இந்த கேக்கின் சுவை இங்கிலாந்தில் செய்த கேக்கை விடவும் சிறப்பாக இருந்தது. அதன் பிறகு அந்தக் கடையின் வியாபாரம் புகழ்பெறத் தொடங்கியது.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் கேக் அதுவே. அந்த நிகழ்வு நடைபெற்று 129 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் விதமாக சென்ற வருடம் 1,200 கிலோ எடையில் 300 அடி நீளமான கேக் ஒன்றை உருவாக்கி கிறிஸ்துமஸ் பரிசாக அளித்திருக்கிறார்கள்.
கேக் என்ற ஆங்கிலச் சொல் 13-ம் நூற்றாண்டில்தான் அறிமுகமாகியது. சந்திரனை வழிபடும் ரோமானியர்கள் அதன் வடிவம் போலவே வட்டமாக கேக் தயாரித்தனர் என்கிறார்கள். இதுபோலவே சீனாவிலும் நிலவின் வடிவமாக கேக் அடையாளப்படுத்தப்படுகிறது. ஆனால், ரஷ்யாவில் சூரியனை வழிபடுவதால் வட்ட கேக்குகள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன.
தங்களின் 50-வது பிறந்தநாளை கொண்டாட தேனில் செய்த கேக் தயாரிப்பது ரோமானியர்களின் வழக்கம். ஸ்பாஞ்ச் கேக்குகளை உருவாக்கியவர்கள் ஸ்பானியர்கள். 1840-ல் பேக்கிங் சோடாவும் 1860-களில் பேக்கிங் பவுடரும் அறிமுகமான பிறகே பேக்கரி தொழில் வளர்ச்சி கண்டது.
க்ரீம் மற்றும் சாக்லேட் கொண்டு தயாரிக்கப்படும் பிளாக் ஃபாரஸ்ட் கேக்குகளுக்கு அந்தப் பெயர் வரக் காரணம், அது ஜெர்மனியின் பிளாக் ஃபாரஸ்ட் ஏரியாவில் முதன்முறையாகத் தயாரிக்கப்பட்டதே.
இன்றும் ஃபிரான்ஸும் இத்தாலியும் ஜெர்மனியும் கேக் தயாரிப்பில் முதன்மையான நாடுகளாக உள்ளன. அவர்களின் தனிச்சுவை மிக்க பேக்கரிகள் உலக நாடுகளில் கிளைபரப்பி வணிகம் செய்து வருகின்றன. இந்தியாவின் பல இடங்களிலும் ஜெர்மன் பேக்கரி இருப்பதற்கு அதுவே காரணம். புதுச்சேரி போன்ற ஃபிரெஞ்சு பண்பாடுள்ள நகரில் ஃபிரான்ஸின் புகழ்பெற்ற பேக்கரிகள் இன்றும் இருந்துவருவது இந்த மரபின் சான்றாகும்.
கேக் இல்லாத கிறிஸ்துமஸ் கிடையாது. அதிலும் பிளம் கேக் என்பது கிறிஸ்துமஸ் பண்டிகைக்காகவே பிரத்யேகமாகத் தயாரிக்கப்படுவதாகும். இந்தியாவில் கேக் விற்பனை கிறிஸ்துமஸை ஒட்டி 10 மடங்கு அதிகமாகிவிடுகிறது என்கிறார்கள் பேக்கரி உரிமையாளர்கள்.
பிறந்தநாளில் கேக் வெட்டி, பரிசு கொடுத்து, விருந்து அளிப்பதுடன் நமது கொண்டாட் டங்களை ஏன் சுருக்கிக் கொள்கிறோம். எத்தனையோ ஏழை குழந்தைகள் கல்விபெற இயலாமல் தவிக்கிறார்கள். அவர்களுக்கு நாம் நிதி உதவி செய்யலாம். கைவிடப்பட்ட முதியவர்கள் வாழும் இல்லங்களுக்குச் சென்று உதவி செய்யலாம்.
கிராமப்புறப் பள்ளிகளுக்குத் தரமான 100 புத்தகங்களை வாங்கிப் பரிசளிக்கலாம். சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நிறுவனங்களுக்கு உதவி செய்யலாம். கிராமியக் கலைகளை வளர்க்க ஆதரவு தரலாம். மாற்றுத் திறனாளிகளுக்கு முடிந்த உதவிகளை செய்து தரலாம். பார்வையற்றவர்கள் அறிந்துகொள்வதற்காக தமிழின் சங்க இலக்கியம் முதல் நவீன இலக்கியம் வரை அத்தனையும் ஆடியோவில் பதிவுசெய்து அதற்காக விசேஷ நூலகம் அமைக்கலாம். இப்படி உருப்படியாக செய்வதற்கு எத்தனையோ அரிய வழிகள் இருக்கின்றன. ஆனால் நாம் பிறந்தநாளின் பெயரில் பெருமளவு பணத்தை உணவு சந்தையில் வீணடிக்கிறோம்.
மெழுகுவத்தியை ஊதி அணைப்பதை விடவும் யாரோ ஒரு முகம் அறியாத மனிதருக்கு உதவும்படியாக வெளிச்சம் ஏற்றி வைப்பது முக்கியமானது இல்லையா? பிறந்தநாள் என்பது எப்படி வாழ்கிறோம் என்பதை அடையாளம் காட்டுவது. அதை அர்த்தம் உள்ளதாக்கிக்கொள்வது நம் கையில்தான் இருக்கிறது.
No comments:
Post a Comment