உயிர் குடிக்கும் டீ!
நூடுல்ஸ் மற்றும் சீன உணவுகளைத் தொடர்ந்து சாப்பிடுவ தன் மூலம் ரத்த அழுத்தம், நுரையீரல் ஒவ்வாமை, சரும நோய்கள், கிட்னி பாதிப்பு உள்ளிட்ட உடல்நலக் கோளாறுகள் உருவாகின்றன. அதற்கு முக்கியக் காரணம் மோனோசோடியம் குளுட்டாமேட் எனப்படும் சுவையூட்டி. இதன் காரணமாக நமது சுவை அரும்புகள் பாதிக்கப்படுகின்றன. சீன உணவு களைத் திரும்பத் திரும்ப சாப்பிடச் செய்வதற்கே இந்தச் சுவையூட்டி பயன்படுத்தபடுகிறது.
சீன உணவில் அதிகம் உப்பும் கொழுப்பும் இருக்கின்றன. அது நமது அன்றாட தேவையைப்போல மூன்று மடங்கு அதிகமானது. நூடுல்ஸில் உலரவைத்த கோழிக்கறி, காய்கறிகள் உள்ளன. அவற்றைப் பதப்படுத்துவதற்காக செயற்கை ரசாயனப் பொடிகள் பயன்படுத்தபடுகின்றன. இவை உடலுக்குக் கெடுதல் செய்யக் கூடியவை.
நூடுல்ஸ் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்ளாமல் இருக்க வாக்ஸ் தடவப்படுகிறது. சுவையூட்ட அதிக அளவு சோடியம் கலக்கப்படுகிறது. செயற்கை நிறமூட்டி, சுவையூட்டியான propylene glycol போன்ற வேதிப்பொருட்கள் உடலுக்குத் தீங்கு செய்கின்றன.
மலேசியாவில் ஆண்டுக்கு 1,210 மில்லியன் நூடுல்ஸ் பாக்கெட்கள் உணவாக உட்கொள்ளப்படுகின்றன. இதன் மோசமான பின்விளைவுகள் காரணமாக சிறுநீரகப் பாதிப்புக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 13,000. அங்கே துரித உணவுப் பழக்கம் காரணமாக ஒவ்வொரு மணி நேரத்திலும் ஆறு பேர் உடல்நலம் பாதிக்கப்படுகிறார்கள். ஆகவே உடனடி நூடுல்ஸை தவிருங்கள் என்கிறது மலேசிய உணவு தர நிறுவனத்தின் அறிக்கை.
சீனாவில் இருந்து உலகுக்கு அறிமுகமான முதல் உணவு தேநீர். தேநீரைக் கண்டுபிடித்தவர்கள் சீனர்களே. ஆரம்ப காலங்களில் தேநீரில் உப்பு சேர்த்து குடித்து வந்தனர். சீனாவில் தேயிலைகளை அரைத்து மூட்டுவலிக்கு பத்து போடுவார்களாம்.
சீனச் சக்கரவர்த்தி ஷென் நுங் குடிப்பதற்காக வைத்திருந்த சுடுநீரில் தேயிலைச் செடியின் இலைகள் பறந்துவந்து விழவும், அதைக் குடித்த மன்னர் புதிய பானமாக இருக்கிறதே என டீயை சிறப்பு பானமாக அறிமுகம் செய்தார் என ஒரு கதை சொல்கிறார்கள்.
இங்கிலாந்துக்குத் தேநீர் 1650-களில்தான் அறிமுகமானது. விலையுயர்ந்த, பிரபுக்களின் பானம் என்று அறிமுகமாகி, பிறகு அடிதட்டு மக்களும் குடிக்கும் பானமாக உருமாறியது. ஆரம்ப காலத்தில் பிரிட்டிஷ் அரசு தேயிலையை சீனாவில் இருந்துதான் இறக்குமதி செய்தது.
பண்டமாற்று செய்ய சீனாவுக்குத் தேவையான பொருள் ஆங்கிலேயரிடம் எதுவும் இல்லாததால், அபின் எனும் போதை மருந்தை இந்தியாவின் கங்கை சமவெளியில் விளைவித்து, அதைக் கப்பலில் ஏற்றி சீனாவுக்கு விற்றது கிழக்கிந்திய கம்பெனி. அபினுக்கு ஈடான தேயிலை விற்கப்பட்டது.
இந்தியாவில் தேநீர் அறிமுகமான நாட்களில் அது இலவசமாகத் தரப்பட்டு டீ குடிக்கும் பழக்கம் உருவான பிறகு, தேநீருக்கு காசு வசூலிக்கப்பட்டது. இதைப்பற்றி கி.ராஜநாராயணன் கரிசல்காட்டு கடுதாசியில் சிறப்பாக எழுதியிருக்கிறார்.
சீனர்கள் மருத்துவ மூலிகையாகவே தேயிலையை முதலில் அறிந்திருந்தனர். பௌத்த துறவிகள் மூலமாக கி.மு 800-களில் ஜப்பானுக்குத் தேயிலை பரவியது. அங்கிருந்து டச்சுக்காரர்கள் வழியாக இங்கிலாந்து, ஃபிரான்ஸ் நாடுகளில் பரவியது. 18-ம் நூற்றாண்டில் தென்கிழக்கு ஆசியா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுக்குத் தேயிலை பரவியது. இன்று உலகளவில் தேயிலை உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடத்தில் இருக்கிறது. ஒயிட் டீ, பிளாக் டீ, ஜாஸ்மின் டீ, ஒலங் டீ, ஹெர்பல் டீ என 1,000-க்கும் மேற்பட்ட ரகங்கள் இருக்கின்றன.
தேயிலையில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடன்ட் புத்துணர்வு தரக்கூடியது என்கிறார்கள். குறிப்பாக கெமோமில் தேநீர், க்ரீன் டீ குடிப்பது உடல் நலத்துக்கு ஏற்றது. இதை ஜப்பானியர்கள் விரும்பி அருந்துகிறார்கள். தேநீரில் எலுமிச்சையைச் சேர்த்து பருகும் லெமன் டீ பழக்கத்தை அறிமுகம் செய்தவர்கள் ரஷ்யர்கள்.
கேத்ரின் என்பவர்தான் தேநீர் குடித்த இங்கிலாந்தின் முதல் மகாராணி. 18-ம் நூற்றாண்டில் லண்டனில் புகழ்பெற்றிருந்த காபி கிளப்களில் பெண்களுக்கு இடம் கிடையாது. ஆகவே வீட்டில் மாலை நேரங்களில் டீ பார்ட்டி தரும் வழக்கம் உருவானது. இதற்காக அழகான தோட்டங்கள் உருவாக்கப்பட்டன. 1750-களில் தான் சாசருடன் கூடிய டீ கோப்பைகள் தயாரிக்கப்பட்டன.
தொழில்புரட்சிக்குப் பிறகு இங்கிலாந்தில் மாலையில் வீடு திரும்பும் தொழிலாளர்கள் தேநீர், பிஸ்கட், ரொட்டித்துண்டு உண்ணும் வழக்கத்தைக் கைக்கொண்டனர். இந்த டீ சாப்பிடும் மேஜை உயரமாக இருந்த காரணத்தால் இது ஹை டீ என அழைக்கப்பட்டது.
ஒககூரா எழுதிய 'தேநீர் கலை’ என்ற நூல் தேநீரின் வரலாற்றையும் பருகும் விதத்தைப் பற்றியும் அழகாக எடுத்துச் சொல்கிறது. தேநீர் கலை என்பது ஒரு தத்துவம். அழகுணர்ச்சியும் உடல்நலமும் புத்துணர்வும் ஒன்று சேர்ந்த கலை அது. சரியான தேயிலையைத் தேர்வு செய்வதில்தான் நல்ல தேநீர் தயாரிப்பு துவங்குகிறது. ஆகவே தேயிலையைத் தேர்வு செய்வதில் கவனம் வேண்டும். டீ தயாரிப்பதில் 300-க்கும் மேற்பட்ட முறைகள் உண்டு. தயாரிக்கப்பட்ட தேநீரை எந்தக் கோப்பையில் ஊற்றுவது என்பது முக்கியமானது. சீனர்களின் பீங்கான் பாத்திரங்கள் டீ குடிப்பதற்கு என்றே தனித்து உருவாக்கபடுகின்றன. இதில் 'நீலநிறமான குவளைகளே டீ குடிப்பதற்குச் சிறந்தவை’ என்கிறார் ஒககூரா.
ஜப்பானில் தேநீர் தயாரிக்க 24 வகையான பொருட்கள் தேவைப்படுகின்றன. இதில் தேநீர் தயாரிக்கப்படும் தண்ணீர், மலை ஊற்றுகளில் அல்லது சுனைகளில் கிடைத்த தூய்மையான தண்ணீராக இருக்க வேண்டியது அவசியம்.
தண்ணீரைக் கொதிக்க விடும்போது மீன்களின் கண்கள் விழிப்பதைப்போல சிறிய கொப்பளங்கள் தோன்றும். அது முதல் நிலை, அதே தண்ணீர் மேலும் கொதித்து கோலி உருண்டைகளை தரையில் உருட்டிவிட்டது போல பெரியதாக மாறும். அது இரண்டாம் நிலை. நீராவியுடன் அது கொதிக்கத் துவங்கும். அதுவே மூன்றாம் நிலை. அந்த நிலைக்கு தண்ணீர் வந்த பிறகே அதை தேநீர் தயாரிக்கப் பயன்படுத்த வேண்டும்.
தேயிலையை மிருதுவாகப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். கொதிக்கும் தண்ணீரில் தேயிலையைப் போட்டு கொதிக்கவிட்டு நன்கு கொதித்த பிறகு அதன் மீது குளிர்ந்த தண்ணீரைத் தெளித்து அதைத் தணிக்க வேண்டும். அப்படி தயாரிக்கப்பட்ட தேநீரை அழகிய குவளைகளில் பரிமாற வேண்டும். சூடான தேநீரைக் குடித்தவுடன் தனிமை பறந்து போய்விடும். சிறகு முளைத்துப் பறப்பது போன்ற அனுபவம் உண்டாகும். மனதைத் தூய்மைப்படுத்தும்’ என்கிறார் ஒககூரா.
தேநீர் கலையை உலகம் முழுவதும் பிரபலம் ஆக்கியது ஜென் பௌத்தம்.
இன்று இந்தியாவில் 83 சதவிகிதம் பேர் டீ குடிக்கிறார்கள். ஆகவே, அதை தேசிய பானமாக அறிவிக்க வேண்டும் என்கிறார்கள். இத்தனை பேரும் நல்ல டீயைத் தான் குடிக்கிறார்களா எனக் கேட்டால், 'இல்லை’ என்றுதான் சொல்வேன். 90 சதவிகிதம் பேர் மோசமான, கலப்பட தேயிலையால் உருவாக்கப்பட்ட டீயைத் தான் குடிக்கிறார்கள். தலைவலிக்கு டீ குடிக்கப்போய் வயிற்றுவலியை உண்டாக்கிக் கொள்கிறார்கள்.
தேயிலைத்தூளில் இலவம்பஞ்சு காயை அரைத்துக் கலப்பது, முந்திரிக்கொட்டை தோலைப் பொடியாக்கிச் சேர்ப்பது, மஞ்சனத்தி இலை, குதிரைச் சாணம், மரத்தூள், தேங்காய் நார் ஆகியவற்றை அரைத்துக் கலப்பது என... விதவிதமாகக் கலப்படம் செய்கிறார்கள், இந்தத் தேநீரை தினமும் மூன்றோ நான்கோ குடிப்பதால் குடல், கல்லீரல் பாதிப்படையும். குடல் புண் உண்டாகும். அல்சர், மூட்டுவலி, கிட்னி பாதிப்பு ஏற்பட்டு நாளடைவில் புற்றுநோய்கூட உண்டாகலாம்.
உணவுப்பொருளில் கலப்படம் செய்து விற்றால், ஆயுள் தண்டனை வழங்கலாம் என்கிறது சட்டம். ஆனால், நடைபாதை சீன உணவகங்களிலும் கலப்பட தேயிலை தயாரிப்பதிலும் கட்டுப்பாடோ கண்காணிப்போ இல்லை. கள்ளச்சந்தை டீத்தூள் ஒருபுறம் ஆக்கிரமிக்கிறது என்றால், நூடுல்ஸ் சந்தை மறுபக்கம் குழந்தைகளைத் தனது பிடிக்குள் இழுத்துக் கொண்டிருக்கிறது.
100 கிராம் நூடுல்ஸில் 130 முதல் 600 மில்லி கிராம் வரை அனுமதிக்கப்பட்ட சோடியம் அளவாகும். ஆனால், இந்தியாவில் விற்கப்படும் பல்வேறு நூடுல்ஸ் நிறுவனங்களின் தயாரிப்புகளில் 821 மில்லி கிராம் முதல் 1,943 மில்லி கிராம் வரை சோடியம் இருக்கிறது. இதனால் உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், கிட்னி பாதிப்பு எனப் பல்வேறு ஆபத்துகளுக்கும் குழந்தைகள் ஆளாக நேரிடும்.
வயிற்றுக்கு எந்தக் கெடுதலும் செய்யாத ஆவியில் வேகும் அருமையான உணவு இடியாப்பம். அதை சாப்பிடுவதற்கு நமக்கு விருப்பமே இல்லை. ஆனால் இரண்டு நிமிஷ நூடுல்ஸ் சாப்பிடத் துடிக்கிறோம். தொலைக்காட்சி வழியாக ஒருநாளில் குறைந்தபட்சம் 230 உணவு விளம்பரங்களைக் குழந்தைகள் பார்க்கிறார்கள் என்கிறது ஒரு புள்ளிவிவரம். உணவு நிறுவனங்கள் சந்தைப் போட்டிக்காகப் புதுப்புது ரக நூடுல்ஸ்களை அறிமுகப்படுத்துகிறார்கள். அந்த உணவில் இருப்பதாக அவர்கள் கூறும் வைட்டமின், உப்பு, கொழுப்பு எல்லாவற்றின் அளவும் பொய்யானவை. இந்தப் பொய்களை நாம் ஆராய்ந்து பார்ப்பது இல்லை.
உங்கள் குழந்தைகளின் நலனில் உங்களுக்கு உண்மையான அக்கறை இருந்தால் இரண்டு நிமிட துரித உணவுகளை விலக்கி சரியான, சத்தான, உணவை அவர்களுக்கு அளியுங்கள். இரண்டு நிமிட உணவை சாப்பிடுகிறவர்கள் ஐந்து நிமிடத்தில் நோயாளி ஆகிவிடுவார்கள் என்பதே நிஜம்.
உணவு யுத்தம் 3
உணவு யுத்தம் 3
No comments:
Post a Comment