ருசியில்லாத காய்கறிகள்!
காய்கறிக் கடைக்குச் சென்றிருந்தேன். முழுவதும் குளிர்சாதனம் செய்யப்பட்ட கடை; பகட்டான கண்ணாடியில் கீரைகளும் காய்கறிகளும் ஒளிர்கின்றன. காய்கறி கடைகள் இப்படியாகும் என நான் கனவிலும் நினைத்தவன் இல்லை.
ரஷ்ய முட்டைகோஸ்களில் இருந்து நாசிக் வெங்காயம் வரை பல்வேறு காய்கறி ரகங்கள். காய்கறிகளின் விலை கண்ணைக் கட்டுகிறது. ஒருவர்கூட பேரம் பேசவில்லை. புழு விழுந்திருக்கிறது என புகார் சொல்லவில்லை.
காய்கறிகளை துண்டுகளாக நறுக்கியும் வெங்காயத்தை, பூண்டை உரித்துவைத்தும் பாக்கெட்களில் வைத்திருந்தார்கள். விசேஷ நாட்களில் அம்மாவும் சித்திகளும் எவ்வளவு வெங்காயம் உரித்திருப்பார்கள். எவ்வளவு கண்ணீர் சிந்தியிருப்பார்கள். ‘நாளும் கிழமையும் நலிந்தோருக்கு இல்லை; ஞாயிற்றுகிழமையும் பெண்களுக்கு இல்லை’ என்று எங்கோ படித்த வரி மனதில் தோன்றியது.
தேங்காயைத் துருவி பாக்கெட்டில் போட்டு வைத்திருந்தார்கள். தேங்காய் சில் வாங்குவதற்காகப் பலசரக்கு கடையில் நிற்கும்போது, தேங்காயை கண்முன்னே உடைத்து சிரட்டையில் தேங்காய் தண்ணீர் குடிக்கத் தருவார்களே… அந்த நாட்கள் இனி வராது என்று நினைத்துக்கொண்டேன்.
காய்கறி வாங்கவந்த ஒருவர் கையிலும் பையோ, கூடையோ கிடையாது. அதைக் கொண்டுவருவது கூடவா சுமை? என்ன மனிதர்கள் இவர்கள்? இவ்வளவு விழிப்பு உணர்வு பேசியும் கடைக்காரர்கள் பிளாஸ்டிக் பைகளில்தான் காய்கறிகளைப் போட்டுத் தருகிறார்கள்.
வாழைப்பழச் சோம்பேறி என்று எங்கள் ஊரில் திட்டுவார்கள். அதாவது, வாழைப்பழத்தை தானே தோல் உரித்துச் சாப்பிட இயலாதவன் என்று பொருள். அதை நிஜமாக்குவதுபோல உதிர்த்துவைக்கப்பட்ட மாதுளைகள், துண்டுகள் போடப்பட்ட அன்னாசிப் பழம், உரித்த கொடுக்காபுளி ஆகியவை பாக்கெட்களில் இருந்தன.
விதையில்லாத பழங்களைத்தான் மக்கள் விரும்புகிறார்கள் என்றார் கடைக்காரர். விதையின் மீது ஏன் இத்தனை வெறுப்பு, விதையில்லாமல் பழம் எப்படி வரும்? ஒரு திராட்சை விதையைக்கூடவா மனிதர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை? விதையில்லாத பழங்கள் என்றால், விலை இரண்டு மடங்கு அதிகம்; விதை இருந்தால் ருசியிருக்காது என்றார் கடைக்காரர். அது சுத்தப் பொய். அப்படி நம்மைப் பழக்கிவைத்திருக்கிறார்கள்.
பெருநகரங்களில் அன்றாடம் காய்கறி வாங்குபவர்கள் குறைவு. வாரம் ஒருமுறை வாங்கி குளிர்சாதனப் பெட்டியில் நிரப்பிக்கொள்கிறார்கள். அதனாலே கீரைகள் சாப்பிடுவது குறைந்து போய்விட்டது.
அரைக் கீரை, முளைக் கீரை, பசலைக் கீரை, முருங்கைக் கீரை, அகத்திக் கீரை, மணத்தக்காளி கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, சிறு கீரை, வெந்தயக் கீரை, புளிச்சக் கீரை, தண்டுக் கீரை, வல்லாரைக் கீரை, முடக்கத்தான் கீரை, பாலக் கீரை, கரிசலாங்கண்ணி கீரை, லட்சக் கொட்டை, பருப்புக் கீரை, சுக்கான் கீரை புதினாக் கீரை, கொத்துமல்லிக் கீரை என எத்தனையோ விதமான சிறந்த கீரைகள்.
இவை உணவுப் பொருட்கள் மட்டுமல்ல… சிறந்த மூலிகைகள்; மருத்துவ குணம் மிக்கவை. இவற்றின் மகிமை தெரியாமல் நாம் அவற்றை ஒதுக்கிவருகிறோம். பள்ளிப் பிள்ளைகளில் பெரும்பான்மையினர் கீரைகள் சாப்பிடுவதற்குப் பழகவே இல்லை. கீரை என்றாலே பதறி ஓடுகிறார்கள்.
பழங்காலம் முதலே மனிதனின் ஆகாரத்தில் முக்கிய இடம் பெற்றது கீரை. உடலுக்குத் தேவையான தாதுப் பொருட்களையும் வைட்டமின் சத்துக்களையும் பெறுவதற்கு ஒருவர் தினசரி 125 கிராம் கீரைகளையும் 75 கிராம் காய்கறிகளையும் பருப்பையும் சாப்பிட வேண்டும்.
முட்டை, பால், மீன் எண்ணெய் முதலியவற்றில் வைட்டமின் ஏ இருந்தாலும், கீரைகளில் இருந்து ஏ வைட்டமினைப் பெறுவதுதான் எளிதானது. அகத்திக் கீரை, முளைக் கீரை, தண்டுக் கீரை, முருங்கைக் கீரை, கொத்தமல்லி, கறிவேப்பிலை முதலியவற்றில் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது.
இதுபோலவே அகத்திக் கீரை, முளைக் கீரை, புளிச்சக் கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை ஆகியவற்றில் வைட்டமின் பி அதிகமாகக் காணப்படுகிறது. அகத்திக் கீரை, முருங்கைக் கீரை, புண்ணாக்குக் கீரை, முளைக் கீரை, முட்டைகோஸ், கொத்தமல்லி முதலிய கீரைகளில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது.
வைட்டமின்கள் மட்டுமின்றி நம் உடல் வளர்ச்சிக்குத் தேவையான பாஸ்பரஸ், மக்னீசியம், சோடியம், பொட்டாசியம் போன்ற தனிமங்களும் கீரை வகைகளில போதிய அளவில் கிடைக்கின்றன.
மதுரையின் அரசரடி பகுதியில் பால் அட்டை போல கீரை அட்டை என்ற ஒன்றை நடைமுறைபடுத்தி இருக்கிறார்கள். தினசரி காலை ஆறரை மணிக்கு உங்கள் வீட்டு வாசலில் இரண்டு கட்டு கீரை கொண்டுவந்து தருகிறார்கள். எந்த நாளில் என்ன கீரை வேண்டும் என்று பட்டியிலிட்டுத் தந்துவிட்டால், அந்தக் கீரை வீடு தேடி வரும். தமிழ்நாட்டில் வேறு எங்கும் இப்படியான கீரை அட்டை இருக்கிறதா எனத் தெரியவில்லை. ஆனால், நடைமுறைப்படுத்த வேண்டிய முக்கியமான உணவுப் பழக்கம் தினசரி கீரை சாப்பிடுவதாகும். தினமும் சாப்பாட்டில் ஏதேனும் ஒரு கீரை இருந்தால், மருத்துவச் செலவைக் குறைக்கிறீர்கள் என்று அர்த்தம்.
சமீபத்தில் ஜப்பானுக்குப் போயிருந்தபோது அங்கேயுள்ள காய்கறிக் கடைக்குச் சென்றிருந்தேன். விதவிதமான கீரைகள், காய்கறிகள். ஒரு கத்தரிக்காயை வாங்கினால், முழு குடும்பமும் மூன்று வேளை சாப்பிட்டுவிடலாம். அவ்வளவு பெரியது. எல்லா காய்கறிகளும் அளவில் பெரியதாக இருந்தன. காய்கறிகளை முகர்ந்து பார்த்தால், மனம் வேறுவிதமாக இருந்தது. காரணம், ரசாயன உரங்கள்.
இந்த நிலை இந்தியாவிலும் வந்துவிட்டது. மார்க்கெட்டில் விற்கப்படும் கத்தரிக்காய் பார்க்க அழகாக உள்ளது. ஆனால், வாயில் வைக்க முடியவில்லை. பூசணி பெரியதாக இருக்கிறது. ஆனால் ருசியே இல்லை. எந்தக் காய்கறியை சமைத்தாலும் வாசனை வருவது இல்லை.
இன்று காய்கறிகள் விளைச்சலைப் பெருக்கவும் அளவில் பெரியதாக காய்ப்பதற்கும் அதிகமான அளவில் ஆக்சிடோசின் என்ற ஹார்மோனை பயிர்களுக்குச் செலுத்துகின்றனர். இதனால், காய்கறிகள் அதிக எடையும் வடிவமும் கொள்கின்றன. கூடுதல் நிறத்தையும் பெறுகின்றன. குறிப்பாக பரங்கிக்காய், சுரைக்காய், தர்பூசணி, வெள்ளரிக்காய் மற்றும் கத்தரிக்காயில் ஆக்சிடோசின் ஹார்மோன் அதிக அளவில் செலுத்தப்படுகிறது.
ஆக்சிடோசின் பயன்படுத்தி விளைவிக்கப்பட்ட காய்கறிகளைத் தொடர்ந்து சாப்பிடும்போது நரம்புத் தளர்ச்சி, மலட்டுத்தன்மை, புற்றுநோய், குறைந்த ரத்த அழுத்தம் உருவாகும் எனக் கூறப்படுகிறது.
காய்கறிகள் வாடாமல் இருக்க, அலுமினியம் பாஸ்பைட், பேரியம் கார்பனேட் போன்ற ரசாயனங்கள் தெளிக்கப்படுகின்றன.
இதுபோலவே தமிழகத்தில் பல இடங்களில், கழிவுநீரைப் பயன்படுத்தி கீரை வளர்த்து, விற்பனை செய்து காசு பார்க்கிறார்கள். இந்த வகை கீரைகளை சாப்பிடுவதால் பல நேரங்களில் வயிற்றுப்போக்கு, ஒவ்வாமை போன்ற நோய்கள் உருவாகின்றன. உணவுப் பொருட்கள் விற்பனையில் ஏமாற்றுவது என்பது மன்னிக்க முடியாத குற்றம். கடுமையான தண்டனை தரப்பட வேண்டும்.
காய்கறி உணவை இன்று சைவ உணவு என்று அழைக்கிறோம். சமண மதம் செல்வாக்கு பெற்றிருந்த காலத்தில் இதற்கு ‘ஆருகத உணவு’ என்று பெயர். இலங்கை தமிழர்கள் மத்தியில் இன்றும் ‘ஆரத உணவு’ என்ற சொல் வழக்கில் உள்ளது. ஆரத உணவு என்பது ஆருகத உணவு என்பதன் திரிந்த நிலையாகும்.
அவரவர் வாழ்வியல் முறைக்கும் வசிப்பிடத்துக்கும் ஏற்பதான் உணவு முறைகள் அமைகின்றன. பண்பாட்டின் பிரதான அம்சங்களில் ஒன்று உணவு. இதில் காய்கறிகள் சாப்பிடுவது மட்டும்தான் சரி என்று முழங்கவும் முடியாது. அசைவம் சாப்பிடுவது மட்டுமே உயர்வானது என பெருமை கொள்ளவும் முடியாது.
உணவு அவரவர் வாழ்வுமுறை சார்ந்த தேர்வு. உழைப்பும் சூழலும் மரபும் உடல்வாகும் பருவகால மாற்றங்களும்தான் உணவைத் தேர்வுசெய்ய வைக்கின்றன. நாம் கவனம்கொள்ள வேண்டியது… நமது உணவை நமது தேவை கருதி தேர்வுசெய்கிறோமா, வணிகர்களின் மோசடி விளம்பரங்களுக்காக நமது உடலை பாழ்படுத்திக்கொள்கிறோமா என்பதையே.
திங்கள் முதல் சனி வரை காய்கறிகள், ஞாயிறு ஒரு நாள் அசைவம் என்பது பெரும்பான்மை குடும்பங்களில் எழுதப்படாத விதிபோலவே கடைப்பிடிக்கப்படுகிறது. அதிலும் செவ்வாய், வெள்ளி அன்று சாம்பார் என்பது சைவக் குடும்பங்களில் இன்றும் தொடரும் முறை.
இந்தியர்களின் உணவில் 23 சதவிகிதம் காய்கறிகள் இடம் பெற்றுள்ளன. 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை திருமண விருந்தில் நாட்டுக் காய்கறிகள் மட்டுமே ஆதிக்கம் செலுத்திவந்தன. வாழைக்காயும் பூசணியும் இல்லாத திருமண விருந்து ஏது?
30 ஆண்டுகளுக்கு முன் எனக்குத் தெரிந்த குடும்பம் ஒன்றில் திருமணத்தின்போது அவியலில் பீன்ஸ், கேரட் போட்டுவிட்டார்கள் என்று பந்தியில் தகராறு நடந்து, வயதானவர்களில் பலர் சாப்பிடாமல் எழுந்து போனார்கள். அவியலில் பீன்ஸ் போட்டுவிட்டார்கள் என்ற ஆவலாதி ஊர் முழுவதும் ஒரு வாரத்துக்கு இருந்தது.
அதே ஊரில்தான் இன்று கல்யாண வீடுகளில் பஃபே முறையில் சப்பாத்தி குருமாவும், ஃபிரைடு ரைஸ், காலிஃப்ளவர் மஞ்சூரியனும் ஆனியன் ரய்தாவும் பரிமாறுகிறார்கள். வயது வேறுபாடின்றி ருசித்து சாப்பிடுகிறார்கள். சாப்பாடு விஷயத்தில் மனிதர்கள் ரொம்பவும் ரோஷம் பார்ப்பவர்கள் இல்லை என்பதற்கு இது ஒரு உதாரணம்.
பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் வேலைசெய்யும் ஒரு நண்பரின் வீட்டுக்குப் போயிருந்தேன். அவர்கள் நான்கு நாளைக்கு ஒருமுறை சமைத்து குளிர்சாதனப்பெட்டியில் வைத்து ஒவ்வொரு பாத்திரத்திலும் தேதி எழுதி ஒட்டியிருந்தார்கள். படித்தவர்கள் அல்லவா?
கணவன் மனைவி இருவருமே வேலைக்குப் போகிறவர்கள் என்பதால் நேரம் இருப்பது இல்லை என்று சொல்லியபடியே 20-ம் தேதி செய்த பொரியலையும் 16-ம் தேதி செய்த வத்தக்குழம்பையும் சூடுபடுத்தி சாப்பிடக்கூட விருப்பமின்றி, அப்படியே குளிர்ச்சியாகத் தட்டில் போட்டு சாப்பிட்டுவிட்டு வேலைக்குக் கிளம்பினார்கள்.
‘ஏன் நண்பா இப்படி சாப்பிடுகிறாய்?’ என ஆதங்கத்துடன் கேட்டபோது, ‘ரசித்து, ருசித்து சாப்பிடுவதற்கெல்லாம் இப்போது நேரம் இல்லை. சம்பாதிக்க வேண்டும்’ என்று கணவன் மனைவி இருவரும் ஒரே குரலில் சொன்னார்கள்.
‘அப்படி சம்பாதித்து என்ன செய்யப்போகிறீர்கள்… சம்பாதித்த பணத்தை டாக்டருக்குக் கொடுக்கவா?’ என்று கேட்டேன்.
‘அதை எல்லாம் நோய் வரும்போது பாத்துகிடலாம். இப்போ பணம் பண்ணுவது மட்டும்தான் குறிக்கோள்!’ என்றார் நண்பர்.
மரபான தமிழ் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ஒரு ஆணும் பெண்ணும் எப்படி இதுபோன்ற மாற்றத்துக்குள் வர முடியும் என்பது புரிந்து கொள்ளமுடியாத விஷயமாக மனத்தை உறுத்தியது.
இப்படிப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகிக்கொண்டேயிருக்கிறது. இவர்களுக்காகத்தான் துரித உணவகங்கள், குளிர்சாதனம் செய்யப்பட்ட காய்கறி கடைகள் முளைக்கின்றன. இவர்கள் உடலை வெறும் இயந்திரம் போலவே நினைக்கிறார்கள். உயிர் வாழ்தலின் அர்த்தம் புரியாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
காய்கறி மார்க்கெட் என்பது ஒரு தனி உலகம். அதற்குள் நுழையும்போது நுகரும் மணமும் காய்கறிகளின் பச்சை சிவப்பு, ஊதா, ஆரஞ்சு நிறமும் உவகை தருவதாக இருக்கும். எந்த நாட்டுக்குப் போனாலும் அங்குள்ள காய்கறி மார்க்கெட்டை அவசியம் பார்வையிடுவேன். அது அவர்கள் பண்பாட்டின் மையம்.
வாரச் சந்தைகள், தள்ளுவண்டிக் கடைகள், வீதியோரக் கடைகள், உழவர் சந்தை, மலிவுவிலை காய்கறிக் கடைகள் என்று காலந்தோறும் காய்கறிக் கடைகள் மாறிக்கொண்டே வந்தபோதும், இன்று அது எதிர்நோக்கி இருப்பது பன்னாட்டு நிறுவனங்களின் ஆக்கிரமிப்பை.
No comments:
Post a Comment