நூடுல்ஸ் ராஜ்ஜியம்
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக ஹாங்காங் சென்றிருந்தேன். அங்குள்ள உணவு வளாகம் ஒன்றுக்கு நண்பர் அழைத்துக்கொண்டு போயிருந்தார். ஒரே இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட உணவு அங்காடிகள். ஒவ்வொன்றிலும் கூட்டம் கூட்டமாக உட்கார்ந்து சாப்பிடும் மனிதர்கள். விதவிதமான உணவு வகைகள். உயிருள்ள மீன்களைத் தொட்டியில் விட்டிருக்கிறார்கள். கண்முன்னே பிடித்து சமைத்துத் தருகிறார்கள்.
பொறித்த முழுப்பன்றி அப்படியே ஒரு மேஜையில் வைக்கப்பட்டிருக்கிறது. கம்பியில் குத்தப்பட்ட கோழி இறைச்சி, அவித்த வாத்து முட்டைகள், நண்டு, இறால், மாட்டிறைச்சி எனக் கலவையான மணம். நிதானமாக அரட்டை அடித்தபடியே சாப்பிடுகிற முகங்களைப் பார்த்தபடியே நடந்தேன்.
ஒருவர் மேஜையில்கூட குடிப்பதற்குத் தண்ணீர் கிடையாது. சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கும் பழக்கம் வெளிநாட்டவர்களுக்குக் கிடையாது. ஒயினோ, பழச்சாறோ, குளிர்பானங்களோதான் குடிக்கிறார்கள். நமக்குத்தான் தண்ணீர் அருகில் இல்லாமல் சாப்பிட முடியாது.
இரண்டு மூன்று உணவுகள் ஒன்றுசேர்ந்த காம்போ முறைகள்தான் அங்கு பிரபலம். தனியாக உணவை ஆர்டர் செய்து சாப்பிடுவது விலை அதிகம் என்றார்கள். என்ன சாப்பிடுவது எனப் புரியாமல் தேடியபோது நண்பர் கேட்டார்... 'சீன உணவுகள் சாப்பிடுவீர்கள்தானே’ என்று!
'சாப்பிட்டிருக்கிறேன்’ என்றேன்.
இருவரும் ஒரு சீன உணவகத்தில் அமர்ந்து சாப்பாடு ஆர்டர் செய்தோம். நமது ஊரில் கிடைக்கும் சீன உணவுகள் தானே என நினைத்தேன். ஆனால், அதே பெயர்கள் கொண்ட வேறு உணவு வந்தது. எப்படி எனக் கேட்டபோது, 'இந்தியாவில் கிடைக்கும் சீன உணவுகள் இந்தியர்களுக்கு என்றே தயாரிக்கபடுவது, அது நிஜமான சீன உணவு இல்லை’ என்றார்.
பரிமாறப்பட்ட சீன உணவை என்னால் சாப்பிட முடியவில்லை. குமட்டிக்கொண்டு வந்தது. நமது கொழுக்கட்டை போலவே ஜியாவ்ஜி என்று சீனர்கள் தயாரிக்கிறார்கள். அது வேகவைத்த உணவு.
உள்ளே மீனோ, கறியோ, இனிப்போ இருக்கும். 'குடும்ப விருந்தில் இந்தக் கொழுக்கட்டை ஒன்றில் நாணயம் வைத்து விடுவார்கள். யாருக்கு இந்தக் கொழுக்கட்டை கிடைக்கிறதோ அவர் அதிர்ஷ்டசாலியாகக் கருதப்படுவார்’ என்றார். நான் இனிப்பு ஜியாவ்ஜி, பச்சைக் காய்கறிகளும் பழங்களும் மட்டும் சாப்பிட்டேன்.
நண்பர் சிரித்தபடியே சொன்னார். 'எங்கள் கிராமத்தில் நூடுல்ஸ் சாப்பிடாத குழந்தைகளே கிடையாது. வெள்ளைக்காரனால்கூட எங்கள் கிராமத்து மக்களை பிரெட் ஜாம் சாப்பிட வைக்க முடியவில்லை. ஆனால், சீன உணவுகள் எளிதாக மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டன. இன்று ஒட்டுமொத்த இந்தியாவின் உணவுப் பழக்கத்தை சீன உணவு வகைகள் புரட்டிப்போட்டுள்ளன. சில்லி சிக்கன், ஃப்ரைடு ரைஸ், நூடுல்ஸ், கோபி மஞ்சூரியன் மட்டுமே விற்கும் தள்ளுவண்டி கடைகள் இல்லாத ஊர்களே இல்லை. வீட்டிலேயே நூடுல்ஸ், ஃப்ரைடு ரைஸ் என தயார் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். சீனச் சுவைதான் இன்று சிறுவர்களுக்கு அதிகம் பிடித்திருக்கிறது. கடவுளுக்கு மட்டும்தான் நூடுல்ஸ் படைக்கவில்லை. மற்ற எல்லோருக்கும் நூடுல்ஸ் பிடித்திருக்கிறது’ என்று சிரித்தபடி சொன்னார்.
அவர் சொன்னது உண்மை. தமிழகத்தின் கடைக்கோடி வரை நூடுல்ஸ், ஃப்ரைடு ரைஸ் பரவிட்டது. துரித உணவு என்பதாலும், விலை மலிவு என்பதாலும், சுவை புதிதாக இருப்பதாலும் அதை பெருவாரியான மக்கள் சாப்பிடுகிறார்கள்.
சீன உணவு வகைகள் இந்தியாவில் மட்டுல்ல; உலகெங்கும் பெரும் சந்தையை உருவாக்கி உள்ளன. இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் கனடாவிலும்கூட சீன உணவு வகைகளுக்குப் பெரும் கிராக்கி உருவாகி உள்ளது.
சீனர்கள் எந்த நாட்டுக்குப் புலம் பெயர்ந்து போனாலும் அங்கே சைனா டவுன் ஒன்றை உருவாக்கிவிடுவார்கள். அங்கே ஒரு பௌத்த கோயில், சீன அங்காடிகள், சீன உணவுக் கடைகள் உருவாகிவிடும். தங்களின் விழாக்களைக் கொண்டாடுவார்கள். இசை, ஓவியம், கலை, உணவு, மொழி ஆகியவற்றை எந்த நாட்டுக்குச் சென்றாலும் சீனர்கள் மறப்பதே இல்லை.
ஆனால், தமிழ் மக்கள் எந்த நாட்டுக்குப் போனாலும் உடனடியாக தங்களின் சுய அடையாளங்களை மறைத்துக் கொண்டுவிடுகிறார்கள்... அல்லது மறந்துவிடுகிறார்கள். இன்று நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் சைனா டவுன் இருக்கிறது. ஆனால், தமிழர்கள் வாழும் எத்தனை நாடுகளில் தமிழ் டவுன் இருக்கிறது? இந்த விஷயத்தில் ஈழத் தமிழ் மக்கள் பாராட்டுக்குரியவர்கள். தாங்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் எல்லாம் தமிழ் அடையாளங்களைக் காப்பாற்றிக்கொள்ளவும் வளர்த்து எடுக்கவும் பெருமுயற்சி எடுத்துவருகிறார்கள்.
சீன உணவு எப்படி உலகெங்கும் பரவியது? ஒன்று ரயில் பாதை அமைப்பதற்கும், கட்டுமானப் பணிகளுக்கும், கூலித்தொழிலாளர்களாகப் பல்லாயிரம் சீனர்கள் கனடா, அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவுக்குச் சென்றார்கள். இன்னொரு பக்கம் சீன வணிகர்கள் வியாபாரம் செய்வதற்காக உலகெங்கும் பயணம் செய்திருக்கிறார்கள். சோழ அரசுடன் சீனா வணிகத் தொடர்பு கொண்டிருக்கிறது.
சீனாவில் இருந்து யுவான்சுவாங், பாஹியான் போன்ற யாத்ரீகர்கள் இந்தியாவுக்கு வந்து போயிருக்கிறார்கள். இவர்களைப் போன்ற யாத்ரீகர் வழியாக சீன உணவு அறிமுகமாகியிருக்கக் கூடும். இவை தவிர கடலோடிகள், பட்டு வணிகர்கள், சீனாவுக்கு அபின் விற்பனைக்காக பிரிட்டிஷ் அரசு மேற்கொண்ட பரிவர்த்தனைகள் வழியாக சீன உணவுகள் உலகுக்கு அறிமுகமாகி இருக்கலாம்.
தமிழகத்தில் நாம் உண்ணுகிற நூடுல்ஸ், ஃப்ரைடு ரைஸ் போன்றவை அசலான சீன உணவு கிடையாது. இது சீன உணவின் செய்முறையில் அமைந்த இந்திய உணவு. மரபான சீன உணவுகளின் சுவை பெரிதும் மாறுபட்டது. இந்தியாவுக்கு என்றே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட சீன உணவுகளைத்தான் நாம் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். இவைதான் இங்குள்ள சீன உணவகங்களில் விற்கப்படவும் செய்கிறது. ஒருவேளை யாராவது சீனர்கள் தமிழ்நாட்டுக்கு வந்து சீன உணவுகளை சாப்பிட்டால் அவர்களுக்கு இந்த சுவை புதியதாக இருக்கும். இவை சந்தை உருவாக்கிய சீன உணவுகள். இந்தியாவில் ஆண்டுதோறும் 4,500 கோடி ரூபாய்களுக்கு நூடுல்ஸ் விற்கப்படுகின்றன.
அசலான சீன உணவு என்பது எது? சீனா மிகப்பெரிய நாடு. அதன் ஒவ்வொரு பிராந்தியத்திலும் ஒருவகை உணவு பிரபலம். உணவை கடைகளில் வைத்து விற்பனை செய்கிற பழக்கம் சீனாவில் இரண்டு மூன்றாம் நூற்றாண்டுகளிலே இருந்திருக்கிறது. சந்தைகளில் விதவிதமான உணவு வகைகள் எப்படி விற்கப்பட்டன என்பதைப் பற்றி சீன இலக்கியத்தில் குறிப்புகள் காணப்படுகின்றன.
சீனாவின் முக்கிய உணவு அரிசி. வட சீனாவில் அதிகம் கோதுமை விளைகிறது. ஆனாலும், அவர்கள் அரிசியைத்தான் தங்களின் முக்கிய உணவாகக் கொண்டிருக்கிறார்கள். கோதுமையில் இருந்து நூடுல்ஸ் தயாரித்து உண்கிறார்கள். அரிசியில் இருந்து தயாரிக்கப்படும் நூடுல்ஸ்களும் உண்ணப்படுகின்றன. சீனாவில் ஹான் அரசு காலத்தில்தான் முதன்முறையாக நூடுல்ஸ் சமைக்கப்பட்டது என்கிறார்கள். இல்லை ஏழாம் நூற்றாண்டில் பாஸ்தாவை ரோமாபுரிக்குக் கொண்டுவந்துவிட்டார்கள் என்று நிறைய ஆதாரங்களைத் தருகிறார்கள் இத்தாலியர்கள். இந்த சண்டை இன்றும் ஓயவில்லை.
உணவை மருந்தாகக் கருதுவது சீனர்களின் பழக்கம். அதுதான் அவர்களின் நீண்ட ஆயுளுக்கு ஆதாரம். ஆகவே மூலிகைகளை உணவில் சேர்த்துக்கொள்வது அவர்களின் பண்பாடு. காய்கறிகள், பழங்கள், அவித்த உணவு வகைகள், மீன், பன்றி, வேட்டையாடப்பட்ட விலங்குகளின் இறைச்சி - இவையே சீனர்களின் ஆரம்பகால உணவு வகைகள். தெற்கு சீனாவில் நாய்க்கறி உண்பதும், வட சீனாவில் பாம்பும் பூனையும் சாப்பிடுகிற பழக்கமும் இருந்திருக்கிறது.
ஒன்றாகக் கூடி உண்பதில் சீனர்கள் விருப்பம் கொண்டவர்கள். சாப்ஸ்டிக் மூலம் சாப்பிடும்போது கிண்ணத்தில் குச்சி மோதி ஓசை உண்டாகக் கூடாது. அது சமையல் சரியில்லை என்பதன் அடையாளம். அத்துடன் பிச்சைக்காரன் மட்டும்தான் உணவு கிண்ணத்தில் சப்தமிடுவான். ஆகவே, சாப்பிடும்போது குச்சிகளால் கிண்ணத்தைத் தட்டுதல் கூடாது. இதற்கு மாறாக சூப்பை சப்தமாக உறிஞ்சிக் குடிப்பதோ, உஷ் உஷ் என நூடுல்ஸை சூடாக இழுத்துச் சாப்பிடுவதோ சந்தோஷத்தின் அடையாளமாகக் கொள்கிறார்கள்.
மார்கோ போலோவின் மூலமே ஐரோப்பாவுக்கு சீன உணவுகள் அறிமுகமாகியிருக்கின்றன. அதன் பிறகு 16-ம் நூற்றாண்டு வணிகர்கள், கிறிஸ்துவ மிஷனரிகள் மூலம் சீன உணவு பல்வேறு நாடுகளுக்கும் பரவியது. சர்க்கரையைக் குறிக்கும் சீனி என்ற சொல் சீனர்கள் வழி அறிமுகமானதே.
ஆதிகாலத்தில் சீனர்கள் சோளமும், அரிசியும், சோயாவில் செய்த சாற்றையும் சாப்பிடுவதை விருப்பமாகக் கொண்டிருந்தார்கள். சீன முட்டைக்கோஸ், மூங்கில் குருத்து, தாமரை தண்டுகள், வெங்காயம் இவற்றை ஆசையாக சீனர்கள் சாப்பிடுவார்கள். அவர்களின் சாப்பாட்டு மேஜை வட்ட வடிவமானது. ஆங்கிலேயர்களைப்போல செவ்வக மேஜையோ, நடுநாயகமாக விருந்து தருபவர் அமர்வதோ அங்கே கிடையாது.
தாமரை இலைகளில்தான் உணவைப் பரிமாறுவார்கள். சூப் மற்றும் உணவைப் பரிமாற மரக்கலன்களை அதிகம் பயன்படுத்துகிறார்கள். சீனர்கள் முட்டை சாப்பிடுவதை அதிகம் விருப்பக் கூடியவர்கள். ஒருவர் குறைந்தபட்சம் ஒருநாளில் 8-ல் இருந்து 10 முட்டைகளை சாப்பிட்டுவிடுவார். குழந்தை பிறந்தால் முட்டையில் செய்யப்படும் விசேஷ உணவுதான் விருந்தினர்களுக்குப் பரிமாறப்படும். முட்டை என்பது இனவிருத்தியின் அடையாளம் என்பது அவர்களின் எண்ணம்.
இதுபோலவே மகிழ்ச்சியின் அடையாளம் என்பதற்காக வாத்து, செல்வ வளம் பெருக வேண்டும் என்பதன் அடையாளமாக பொறித்த முழு மீன், நீண்ட ஆயுளின் அடையாளமாக நூடுல்ஸ், குழந்தைகள் பெற்று பெருகி வாழுங்கள் என்பதன் அடையாளமாக ரொட்டியில் எள், சீரகம் போன்றவற்றைக் கலந்து சாப்பிடுவதையும் மரபாகக் கொண்டிருக்கிறார்கள்.
பன்றி மாமிசம்தான் அவர்களின் முக்கிய உணவு. பொறித்த பன்றியை விருந்தில் பரிமாறுவது சந்தோஷத்தின் அடையாளம். தேநீரில் முட்டையை வேகவைத்து சாப்பிடுகிற பழக்கம் அவர்களுக்கு உண்டு. சோயா, புரோட்டீன் நிரம்பியது என்பதால் சோயா சாற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்கிறார்கள்.
இந்தியாவின் முதல் சீன உணவகம் கல்கத்தாவில்தான் ஆரம்பிக்கப்பட்டது. இந்த உணவகம் ஆரம்பிக்கக் காரணமாக இருந்தவர்கள் கல்கத்தாவில் வசித்த சீனர்கள். 18-ம் நூற்றாண்டில் தாங் ஆசிங் என்ற வணிகர் கல்கத்தா அருகில் ஒரு சர்க்கரை ஆலையை உருவாக்கினார். இதில் பணியாற்றுவதற்காக ஆயிரக்கணக்கான சீனர்களை தன்னோடு அழைத்துக்கொண்டு வந்திருந்தார். அவர்கள் ஒரு முகாம் போல ஒன்றாகத் தங்கினார்கள். ஆசிங் மறைந்த பிறகு சீனர்கள் தாங்களே கரும்பாலையை ஏற்று நடத்தினார்கள். அவர்கள் மூலம்தான் கல்கத்தாவில் சீன உணவகம் ஆரம்பிக்கப்பட்டது.
சிக்கன் மஞ்சூரியன் எனும் சீன உணவு மும்பையில் சமையற்காரராகப் பணியாற்றிய நெல்சன் வாங் என்ற சீன சமையற்காரர் வழியாகத்தான் அறிமுகமானது. அது பின்னாளில் உலக நாடுகளுக்குப் பரவியிருக்கிறது.
18-ம் நூற்றாண்டின் இறுதியில் சென்னை சிறையில் அடைக்கபட்டிருந்த சீனக் கைதிகள் சிலர் தப்பியோடி விட்டார்கள் என்ற தகவலை மெட்ராஸ் கெஜட்டியர் கூறுகிறது. ஊட்டியில் உள்ள தேயிலைத் தோட்டங்களை அமைப்பதற்காக சீனக் கைதிகளை அழைத்துக்கொண்டு போனார்கள். அவர்கள் அங்குள்ள தமிழ்ப் பெண்களைத் திருமணம் செய்து வாழ்ந்திருக்கிறார்கள் என்கிறார் எட்கர் தர்ஸ்டன்.
இந்தியாவின் பெருநகரங்களில் 50 ஆண்டுகளுக்கு முன்பாக சீன உணவகங்கள் ஆரம்பிக்கப்பட்டன. ஆனால் கடந்த 20 ஆண்டுகளில் அது பட்டிதொட்டி வரை பரவிவிட்டதற்கு முக்கியக் காரணம் ஊடகங்கள். தொலைக்காட்சியும், பத்திரிகைகளும் விளம்பரத்தின் மூலம் சீன உணவு சந்தையைப் பரவலாக்கின.
உடனடி நூடுல்ஸை அறிமுகம் செய்தது ஜப்பான். மோமோபுகுகா அந்தோ என்பவர் 1958-ல் உடனடி நூடுல்ஸ் அறிமுகம் செய்தார். 1971-ல் கப் நூடுல்ஸ் நிசான் உணவகத்தால் அறிமுகம் செய்யப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் 95 பில்லியன் உடனடி நூடுல்ஸ் உண்ணப்படுகிறது. இதில் 42 பில்லியன் நூடுல்ஸ் சீனாவில் மட்டுமே விற்பனையாகிறது. ஆனால், நம்மவர்கள் இன்னும் நூடுல்ஸை எப்படிச் சாப்பிடுவது என்பதை பழகிக்கொள்ளவில்லை!
No comments:
Post a Comment